Published : 24 Jan 2015 12:26 PM
Last Updated : 24 Jan 2015 12:26 PM

உலக மசலா: 68 வயது ராணுவ வீராங்கனை

உக்ரைன் ராணுவத்தில் 68 வயது பெண் ஒருவர் பணி புரிகிறார். பனி சூழ்ந்த பகுதிகளில் மிகப் பெரிய துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு கம்பீரமாக வலம் வருகிறார் எகடெரினா பிலியிக். தன்னைவிட 40 வயது இளைய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ஓடுகிறார், மேலிருந்து கீழே குதிக்கிறார், வேகமாகச் சுடுகிறார். ‘என் நாட்டின் மீது எனக்குப் பற்று அதிகம். சின்ன வயதில் நாஜி படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது எங்கள் நாடு. அப்பொழுதே நாட்டுக்காக எதிரிகளுடன் சண்டையிட வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.

இப்பொழுதும் எங்கள் நாட்டுக்கு எதிரிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது. அதற்காகக் களத்தில் இறங்கிவிட்டேன்’ என்கிறார் எகடெரினா. ஒரு ராணுவ வீரருக்கு உரிய பரிசோதனைகள், தேர்வுகள் அனைத்திலும் பங்கேற்று, தேறியிருக்கிறார். சண்டை செய்ய நேரிட்டால் தானே முதல் ஆளாக நிற்கவேண்டும் என்பதே எகடெரினாவின் விருப்பமாக இருக்கிறது.

துணிச்சல் பெண்மணிக்குத் தலை வணங்குவோம்!

எர்ப்ஃலோக்ஸ்வெலெ என்ற ஸ்விஸ் கம்பெனி குழந்தைகளுக்குப் பிரத்யேகமான பெயர்களை சூட்டும் பணியைச் செய்து வருகிறது. உலகிலேயே இதுவரை யாரும் வைக்காத ஒரு பெயரை குழந்தைக்குச் சூட்டுவது எளிதான விஷயமில்லை. அப்படி ஒரு பெயர் வேண்டுமென்றால் நாங்கள் உருவாக்கித் தருகிறோம் என்கிறது. குழந்தை, குடும்பம், ஆர்வம் போன்ற தகவல்களை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்களது நிபுணர் குழு உங்கள் குடும்பம், கலாசாரத்துக்கு ஏற்றார்போல, ஒரு பெயரை உருவாக்கும்.

அந்தப் பெயரை தொலைபேசியில் சொல்லிப் பார்ப்பார்கள். நான்கு முறையும் சரியாகக் கேட்கவில்லை என்றால், அது சரியில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். மீண்டும் வேறு பெயரை உருவாக்குவார்கள். அந்தப் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்றெல்லாம் பெற்றோருக்குச் சொல்லித் தருவார்கள். இந்தப் பெயர் உலகிலேயே ஒரே ஒருவருக்குத்தான் இருக்கும். பெயர் சூட்டும் பணிக்காக 20 லட்சம் ரூபாயைக் கட்டணமாக வசூலிக்கிறார்கள்!

ஒரு அடையாளத்துக்குத்தானே பேர்… அதை நம்மால வச்சிக்க முடியாதா?

போலந்தில் உள்ள வார்சாவில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் ஒரு வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். ஓர் ஆள் மட்டும் பயன்படுத்தும் விதத்தில் இந்த வீடு அமைந்திருக்கிறது. சமையலறை, படுக்கை அறை, கழிவறை என்று பல தளங்களுக்குப் படியில் ஏறிச் செல்லவேண்டும். எதிர்காலத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், சின்ன இடங்களையும் எப்படி உபயோகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த வீட்டை உருவாக்கியதாகச் சொல்கிறார் உரிமையாளர். உலகிலேயே மிகவும் குறுகிய கட்டிடம் இதுதான் என்கிறார்.

உங்க வீட்டைப் பார்க்க வந்தால், நீங்க வெளியேறிடணும் போல!

உலகின் மூன்றாவது பெரிய தீவான போர்னியோவில் உராங்குட்டான், சிறுத்தை போன்று 81 வகை விலங்குகள் வசித்து வருகின்றன. பிரிட்டனைச் சேர்ந்த கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2080ம் ஆண்டில் இன்று இருக்கும் விலங்குகளில் மூன்றில் ஒரு பங்கு விலங்குகள் அழிந்துவிடும் என்கிறார்கள். சுற்றுச்சூழல் மாறுபாடு, மனிதர்களின் ஆக்கிரமிப்பு, மரம் வெட்டுதல் போன்ற காரணங்களால் இந்த அழிவு ஏற்பட இருப்பதாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். 8 வகை குரங்குகள், 21 வகை வெளவால்கள், 15 வகை ஊன்உண்ணிகளில் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்து போய்விடும். இப்பொழுதே விழிப்புடன் இருந்தால் ஓரளவு அழிவைத் தடுக்க முடியும் என்கிறார்கள்.

பாவம், என்ன சொன்னாலும் யார் தான் கேட்கிறாங்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x