Published : 13 Jan 2015 09:57 AM
Last Updated : 13 Jan 2015 09:57 AM

கேஜ்ரிவாலுடன் செல்ஃபி எடுக்க ரூ. 5 ஆயிரம்: ரூ.1 கோடி நிதி வசூலித்த ஆம் ஆத்மி கட்சியினர்

டெல்லி தேர்தலுக்காக பெங்க ளூருவில் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.1 கோடி நிதி வசூல் செய்தனர். இதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் சாப்பிட ரூ.20 ஆயிரம், செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள ரூ.5 ஆயிரம் என நிதி வசூலிக்கப்பட்டது.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். இதையொட்டி ஆம் ஆத்மி கட்சியினர் முக்கிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று உண்டியல் மூலம் பணம் சேகரித்தனர். பன்னாட்டு நிறுவனங்கள் சிலவற்றில் இசைக் கச்சேரிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டது.

இதனிடையே உட்லண்ட்ஸ் உணவகத்தில் நடைபெற்ற மெகா விருந்தில் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொருவரிடம் தலா ரூ.20 ஆயிரம் வீதம் சுமார் ரூ.40 லட்சம் வசூலிக்கப்பட்டது. இதே போல அவருடன் செல்ஃபி படம் எடுத்துக் கொள்ள ரூ.5 ஆயிரம் கட்டணம் என அறிவித்திருந்தனர். இதில் பங்கேற்க 1000-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். இதன் மூலம் ரூ 10 லட்சம் வசூல் ஆனது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, “காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகள் முதலாளிகளிடம் இருந்து பணம் வசூலிக்கின்றன. எனவே தான் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதலாளிக‌ளுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார்கள். ஆம் ஆத்மி கட்சி மக்களுக்காக நடத்தப்படுவதால், மக்களிடம் வெளிப்படையாக நிதி கேட்கிறோம்” என்றார்.

நிதி வசூல் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் கூறும்போது, “கடந்த மக்களவை தேர்தலின்போது, கர்நாடகத்தில் ரூ.2.5 கோடி நிதி திரட்டினோம். தற்போது டெல்லி தேர்தல் செலவுக்காக பெங்களூருவில் இருந்து மட்டும் ரூ.3 கோடி திரட்ட இல‌க்கு நிர்ணயித்தோம். பெங்களூருவில் மொத்தம் சுமார் ரூ.1 கோடி நிதி திரட்டியுள்ளோம். குறுகிய காலம் என்பதால் இலக்கை எட்டமுடியாமல் போய்விட்டது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x