Published : 25 Jan 2015 14:21 pm

Updated : 25 Jan 2015 14:21 pm

 

Published : 25 Jan 2015 02:21 PM
Last Updated : 25 Jan 2015 02:21 PM

மொழிபெயர்ப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்!

ஆங்கிலத்தில் ‘அந்தாலஜி' என்ற ஒரு வார்த்தை உண்டு. ஒரு குறிப்பிட்ட இலக்கியக் கருப்பொருள் சார்ந்து எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளைத் திரட்டி தொகுப்பு நூலாக வெளியிடுவது ‘அந்தாலஜி' எனப்படுகிறது. கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் போன்றவற்றைத் தொகுத்து ‘அந்தாலஜி'யாக வெளியிட்டு வரும் மரபு ஆங்கிலப் பதிப்பு உலகில் வெகுகாலமாக இருந்து வருகிறது. ஆங்கிலப் பதிப்பகங்கள் போட்டி போட்டுக்கொண்டு இத்தொகுப்புகளை காலம்காலமாக வெளியிட்டும் வருகின்றன. இந்தியாவில் இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்பு நூல்கள் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்டவையாக இருக்கின்றன என்றால், அதனுடைய தேவையையும், விஸ்தீரனத்தையும் நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

அத்தகைய சிறுகதைத் தொகுப்பு நூல்களின் வரிசையில் புதிதாக இடம்பெற்றுள்ளது ‘எ க்ளட்ச் ஆஃப் இந்தியன் மாஸ்டர்பீசஸ்' எனும் தொகுப்பு. இந்தத் தொகுப்பை ஆலெஃப் பதிப்பகத்தின் இணை நிறுவனர் டேவிட் டேவிதார் தொகுத்து வெளியிட்டுள்ளார். இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கும் இவர், ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


ரவீந்திரநாத் தாகூர் முதல் இன்றைய இளம் எழுத்தாளர் கனிஷ்க் தரூர் வரை 39 எழுத்தாளர்களின் சிறுகதைகளை டேவிட் டேவிதார் தொகுத்திருக்கிறார். ஒரு பதிப்பாளர், தேர்ந்த வாசகனாகவும் இருக்கும்போது, அவர் பதிப்பிக்கும் படைப்புகளின் நம்பகத்தன்மை கூடுகிறது. அந்தக் கூற்றை இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது உணர முடியும்.

வாழ்வின் வண்ணங்கள்

ஆர்.கே.நாரயண் நகைச்சுவைக் கதை ஒன்றுக்கு அடுத்து வங்காள மொழி எழுத்தாளர் புத்ததேவ் போஸ் எழுதிய ஒரு மென்சோகக் கதையை வைத்திருக்கிறார். இப்படி அடுத்தடுத்து காதல், காமம், சோகம், தனிமை என வாழ்வின் அனைத்து வண்ணங்களையும் கலவையாகக் கொடுத்திருப்பதில் அவரின் ரசனை புலப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான மொழிகள் பலவற்றில் இருந்து இந்தச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தி மொழியில் இருந்து நான்கு சிறுகதைகள், மலையாளத்தில் இருந்து மூன்று சிறுகதைகள் என்ற வரிசையில், தமிழில் இருந்து சுந்தர ராமசாமி மற்றும் அம்பை என இரண்டே இரண்டு பேரின் சிறுகதைகள் மட்டும் இந்தத் தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.

சமீபத்தில் ‘தி இந்து'வின் ‘லிட் ஃபார் லைஃப்' இலக்கிய விழாவுக்காக டேவிட் டேவிதார் சென்னை வந்திருந்தார். இத்தொகுப்பு குறித்து அவர் பேசும்போது, “நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தேன். என்னுடைய தாத்தா எனக்கு இலக்கிய உலகத்தை அறிமுகப்படுத்தினார். கடந்த 30 ஆண்டுகளாக பதிப்புத் துறையில் இருக்கிறேன். சுமார் 40 ஆண்டுகளாக இந்திய‌ இலக்கிய உலகில் வெளியாகும் படைப்புகளை தீவிரமாக வாசித்து வருகிறேன். இதுவரை பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட 50க்கும் மேலான சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க நேர்ந்தது. ஆனால் எனக்கு எதுவும் திருப்தி அளிக்கவில்லை. எனவே, நாம் ஏன் ஒரு சிறுகதைப் புத்தகத்தைத் தொகுக்கும் பணியில் ஈடுபடக் கூடாது என்று நினைத்து, அதை வெளியிடவும் முடிவு செய்தேன். அதுவும் குறிப்பாக இந்திய எழுத்தாளர்கள் அல்லது இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் எழுதிய இந்தியத் தன்மை பிரதிபலிக்கும் சிறுகதைகளைத் தொகுப்பதன் மூலம் அதனை ஒரு தனித்துவமிக்க படைப்பாக மாற்ற விரும்பினேன்.” என்கிறார்.

“மூல மொழியில் நன்றாக இருக்கும் ஒரு படைப்பு, மொழிபெயர்ப்பில் மோசமாக இருக்கும். அப்படி பல நல்ல சிறுகதைகளை மோசமான மொழிபெயர்ப்பால் தவிர்க்க நேர்ந்தது. இன்னும் சில சிறுகதைகளுக்குப் புதிய மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டோம். சில சிறுகதைகள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அதை ஆங்கிலத்தில் தகுந்த வடிவத்தைக் கொள்ளவில்லை. எனவே, அவற்றையும் தவிர்த்தோம்” என்றும் ஒப்புக்கொண்டார்.

தமிழ்ச் சிறுகதையின் கொடுமுடியாகப் போற்றப்படும் புதுமைப்பித்தனின் கதைகள் ஒன்றுகூடத் தேர்வு செய்யப்படாதது குறித்த கேள்விக்கு, “அவரின் பல கதைகளுக்கு மொழிபெயர்ப்புகள் இல்லை. சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதற்குப் பொருந்தவில்லை” என்றவர், “ஒவ்வொரு தலைமுறையிலும் அந்தத் தலைமுறை வாசகர்களுக்கு ஏற்றவாறு அப்போதிருக்கும் மொழிநடையில் ஏற்கெனவே உள்ள மொழிபெயர்ப்புகளை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் புதிய வாசகர்களுக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும்!” என்று விடை கொடுத்தார்.

மொழிபெயர்ப்புதாகூர்சிறுகதைகள்புதுமைப்பித்தன்இலக்கியம்டேவிட் டேவிதார்

You May Like

More From This Category

More From this Author