Published : 21 Jan 2015 09:11 AM
Last Updated : 21 Jan 2015 09:11 AM

ஊழியரை பணி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெற்றது டி.சி.எஸ். நிறுவனம்: உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பெண் ஊழியர் ஒருவரை பணியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றதாக, டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் (டிசிஎஸ்) சமர்ப்பித்த கடிதத்தின் அடிப்படையில், பணிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை நெமிலிச்சேரியைச் சேர்ந்த சசிரேகா தங்கவேல் நடராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாவது:

நான் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிர்வாகத்தில் ஐ.டி. அனலிஸ்ட் பணியில் சேர்ந்தேன். பிறகு, 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் உதவி கன்சல்டன்ட் ஆக பதவி உயர்வு பெற்றேன். தற்போது துரைப்பாக்கத்தில் உள்ள நிறுவனத்தில் அதே பதவியில் பணியில் தொடர்கிறேன்.

இந்நிலையில், டிசிஎஸ்சில் பணிபுரியும் உதவி ஆலோசகர்கள் 25 ஆயிரம் பேரை பணியிலிருந்து நீக்கிவிட்டு, 55 ஆயிரம் புதிய நபர்களை பணியில் நியமனம் செய்வதற்கு நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக பத்திரிகை செய்தியில் படித்தேன்.

உதவி கன்சல்டன்ட் பதவியில் நானும் ஒருவர். என்னை பணியிலிருந்து நீக்கி, கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த உத்தரவுப்படி, ஜனவரி 21-ம் தேதிக்குள் வேலையில் இருந்து நான் விலக வேண்டும். தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன். மேலும், என் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டுக் கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்களை வாங்கியுள்ளேன். இந்நிலையில், என்னை பணி நீக்கம் செய்வதால் எனக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே, என்னை பணி நீக்கம் செய்தது , தொழில் தாவா சட்டம், பிரிவு 25-ஐ மீறிய செயலாகும். இச்சட்டத்தின், பிரிவு 2-ஏ யின் கீழ், தொழிலாளர் நலத்துறை சமரச அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளேன். என் புகார் மீது விசாரணை நடத்த சமரச அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். என்னை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது மனுதாரரை பணியிலிருந்து நீக்கிய உத்தரவுக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று டி.சி.எஸ். நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யசோத் வர்தன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்டு, நீதிபதி எம்.துரைசாமி வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அப்போது, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரை பணியிலிருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெற்று வழங்கப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கில் மேலும் உத்தரவிட ஏதும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x