Published : 16 Oct 2014 12:09 PM
Last Updated : 16 Oct 2014 12:09 PM

என்.எல்.சி.யில் வெளிமாநிலத்தவருக்கு வேலையா?- ராமதாஸ் கண்டனம்

ஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சென்னையில் நேற்று முன்நாள் நடந்த 13 ஆவது கட்ட பேச்சு தோல்வி அடைந்துவிட்டது.

இதையடுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களும் 19 ஆம் தேதி 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அவர்களை அச்சுறுத்தும் முயற்சியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் உடனடியாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த முடிவு செய்திருப்பதாக என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, ஊழியர்களை அச்சுறுத்தும் என்.எல்.சி. நிர்வாகத்தின் அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்ப்பதற்கு உதவி செய்யாது.

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 44 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டுவருகிறார்கள். பணி நிலைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று தான் அவர்கள் கோருகிறார்கள். என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி லாபம் ஈட்டும் நிலையில், சில கோடிகள் மட்டுமே கூடுதலாக செலவாகும் இந்த கோரிக்கைகள் ஏற்க முடியாதவை அல்ல. ஆனால், தனியார் நிறுவனங்களை விட மிக மோசமான முறையில் தொழிலாளர்களை சுரண்டும் என்.எல்.சி. நிர்வாகம், மிரட்டலையும், அடக்குமுறையையும் கையாண்டு பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்று நம்புகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைந்துள்ள நிலப்பரப்பு, அதன் இப்போதைய நிர்வாகத்திற்கு சொந்தமானதல்ல. நெய்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்களுக்கு சொந்தமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி தான் என்.எல்.சி. நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இப்போது ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றுவோரில் பெரும்பான்மையினர் என்.எல்.சி.க்கு நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அவர்களை நீக்கிவிட்டு, வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோம் என்பது மன்னிக்க முடியாதது ஆகும். மற்ற மாநிலங்களில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அம்மாநில தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய அச்சுறுத்தல் விடப்பட்டிருந்தால் விளைவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்த என்.எல்.சி. நிர்வாகம் முயன்றால் மக்கள்போராட்டம் வெடிக்கும்.

என்.எல்.சி. நிறுவனத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை தீர்க்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. என்.எல்.சி.யின் 5% பங்குகளை வாங்கிய பின்னர் இக்கடமை அதிகரித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசோ இன்று வரை அதற்காக எதையும் செய்ய வில்லை. தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு, மத்திய அரசுடன் கலந்து பேசி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

அதேபோல், சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலுள்ள நோக்கியா செல்பேசி ஆலை நவம்பர் மாதம் முதல் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பணியாற்றி வரும் 1100&க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நோக்கியா ஆலை நல்ல லாபத்தில் இயங்கி வந்திருக்கிறது. ஆனால், திட்டமிட்டே வரிஏய்ப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட நோக்கியா நிர்வாகம் இதற்காக ரூ.2400 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டதை காரணம் காட்டி இந்த ஆலையை விற்பனை செய்யத் துடிக்கிறது. ஏற்கனவே, இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 7,000 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்படி வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

இந்த ஆலையை நம்பியிருந்த சிறு தொழிற்சாலைகளில் பணியாற்றிய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள நிலையில் பெருமளவிலான தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் மூடப்படுவது பன்னாட்டு தொழிலதிபர்களிடையே நல்ல சமிக்ஞைகளை ஏற்படுத்தாது. எனவே, இப்பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நோக்கியா செல்பேசி தொழிற்சாலை தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும் அல்லது அந்த ஆலையை அரசுடைமையாக்கி பொதுத்துறை நிறுவனமாக நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x