Published : 17 Sep 2014 06:36 PM
Last Updated : 17 Sep 2014 06:36 PM
வீடு கட்டுவது என்பது ஒவ்வொரு தனி மனிதனின் லட்சியமாக உள்ளது. நகரப்பகுதி முதல் கிராமங்கள் வரை தற்போது குடியிருப்புகளின் தேவை அதிகரித்து இருப்பதால், வீட்டுமனைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இச்சூழ்நிலை யில், பள்ளி மாணவர்கள் தாங்கள் சிறுக, சிறுக சேமித்த ரூ.2.5 லட்சத்தை கொடுத்து, கூலி தொழிலாளி வீடு கட்ட உதவியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், படந்தாலுமூட்டு பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மனோகர் (50). இவர் தனது மனைவி மற்றும் இரு ஆண், இரு பெண் குழந்தைகளுடன் மண் குடிசை வீட்டில் குடியிருந்து வந்தார். இவரது வீட்டின் அருகே திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்.கே.ஜி முதல் பிளஸ் டூ வரை 1,800 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.
வேதனை தந்த குடிசை
குடிசை வீடு என்பதால் மழைக்காலங்களில் மனோகரனின் வீட்டில் மழை நீர் தேங்கி நிற்பதையும், மனோகரனின் குடும்பத்தினர் குடிசைக்குள் புகும் தண்ணீரை வெளியேற்றுவதையும், பள்ளிக்கு செல்லும் போது மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் வேதனையுடன் பார்த்து செல்வர்.
மனோகர் தனது வீட்டை இடித்து விட்டு காங்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருந்தபோதும், சொற்ப வருமானத்தில் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை. மனோகரன் வீட்டின் நிலையை பார்த்து பரிதாபப்பட்ட திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் பாதர் ரோபின்ஸி, மாணவர்கள் மூலம் மனோகரனின் கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். இதன் மூலம் மாணவர்களிடையே சிறுசேமிப்பையும், உதவும் உள்ளத்தையும் வளர்த்துள்ளார்.
நனவாக்கிய மாணவர்கள்
இது குறித்து பாதர் ரோபின்ஸி கூறியதாவது:
மனோகர் தனது குடிசை வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட சிரமப்பட்டு வந்தார். ஓராண்டுக்கு முன் பள்ளி மாணவர்களிடம் இது குறித்து சுற்றறிக்கை விட்டேன். அதில், நாம் அடுத்த ஆண்டு வரை நம் தேவை போக, மீதி பணத்தை உண்டியலில் சேர்த்து, மனோகருக்கு உதவி செய்ய பயன்படுத்துவோம் என்று வேண்டுகோள் விடுத்தேன்.
மாணவ, மாணவியர்கள் தங்கள் செலவுக்கு பெற்றோர் வழங்கும் பணத்தில் சிறு தொகையை தாங்களே சேகரிக்க தொடங்கினர். ஓராண்டில் ரூ.2.5 லட்சம் சேகரித்து மனோகருக்கு வீடு கட்ட உதவினோம். மாணவர்கள் கொடுத்த பணத்துடன் மனோகர் ரூ.1.5 லட்சம் போட்டு தனது கனவு இல்லத்தை நனவாக்கியுள்ளார். அடுத்த கட்டமாக இன்னொரு பெண்ணுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் மாணவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போல் ஏழைகளுக்கு உதவுவார்கள் என்றார் அவர்.
மகிழ்சியும், சந்தோசமும்
மாணவர்கள் கூறும்போது, “சின்ன சின்னதா நாங்க சேர்த்த காசு, பெருசா ஒரு குடும்பத்தை சந்தோசப்படுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கு இதைவிட வேற என்ன சொல்ல இருக்கு” என்றனர்.
கடந்த வியாழக்கிழமை புதிய வீட்டுக்கு பள்ளி மாணவ, மாணவியர்களை அழைத்து மனோகர் கிரகப்பிரவேசம் நடத்தி முடித்துள்ளார். கடந்த நாட்களில் மனோகரின் குடிசை வீட்டை பரிதாபத்துடன் பார்த்து செல்லும் மாணவர்கள் தற்போது தங்கள் சேமிப்பு பணம் மூலம் கம்பீரமாக எழுந்து நிற்கும் வீட்டை பாசத்துடன் பார்த்து செல்கின்றனர்.