Published : 10 Sep 2014 11:18 AM
Last Updated : 10 Sep 2014 11:18 AM
முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுக்க ஆரம்பித்ததால் இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிய ஆரம்பித்தன. சென்செக்ஸ் 54 புள்ளிகள் சரிந்து 27265 புள்ளியிலும், நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 8152 புள்ளியிலும் முடிந்தன. முக்கிய குறியீடுகள் சரிந்து முடிந்தாலும் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன.
துறை வாரியாக பார்க்கும்போது ரியால்டி குறியீடு அதிகபட்சமாக 1.11 சதவீதம் சரிந்தது. இதற்கடுத்து ஐடி குறியீடு 0.82%, எண்ணெய் மற்றும் எரிவாயு 0.49 சதவீதம் சரிந்து முடிவடைந்தன. மாறாக கன்ஸ்யூமர் டியூரபிள் குறியீடு 1.75 சதவீதமும், எப்.எம்.சி.ஜி குறியீடு 0.86 %, மின்துறை குறியீடு 0.59% மற்றும் பார்மா குறியீடு 0.43 சதவீதம் உயர்ந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் சிப்லா, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஐடிசி மற்றும் கெயில் ஆகிய பங்குகள் உயர்ந்தும் பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், ஐசிஐசிஐ வங்கி, ஓ.என்.ஜி.சி. மற்றும் இன்போசிஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் முடிவடைந்தன. குறியீட்டில் இருக்கும் 30 முன்னணி நிறுவனப் பங்குகளில் 16 பங்குகள் சரிந்தும் 14 பங்குகள் உயர்ந்தும் முடிவடைந்தன. இதற்கிடையே திங்கள்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,162 கோடி ரூபாயை முதலீடு செய்தி ருக்கிறார்கள்.
ரூபாய் மதிப்பு சரிவு
ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்தது. செவ்வாய்க் கிழமை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 31 பைசா சரிந்து ஒரு டாலர் 60.60 ரூபாயில் முடிவடைந்தது.
ஜப்பான் யென்னுக்கு நிகரான டாலரின் மதிப்பு ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல யூரோக்கு நிகரான டாலரின் மதிப்பு 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதனால் டாலரின் பலம் அதிகரித்து ரூபாயின் மதிப்பு சரிந்தது.
டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் தங்கத்தின் மதிப்பு சரிந்து வருகிறது. மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் குறைந்திருக்கிறது. ஒரு அவுன்ஸ் தங்கம் 1,250 டாலர் அளவுக்கு வர்த்தகமாகின்றது.