Last Updated : 03 Jun, 2014 12:00 AM

 

Published : 03 Jun 2014 12:00 AM
Last Updated : 03 Jun 2014 12:00 AM

கொஞ்சம் உடம்பையும் கவனிச்சுக்குங்க!

ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக், உடல் பருமன் கொண்ட இரண்டு பேர் அவரது ஆட்டோவில் ஏற வரும்போது, “என்னடா ரெண்டு பேரக் கொண்டுவரேன்னு சொல்லிட்டு ரெண்டு ஊரக் கொண்டு வர்ற” எனக் கிண்டலடிப்பார். திரையரங்கம் ‘கொல்’லென்று சிரிக்கும்.

பொதுவாக உடல் பருமன் கொண்டவர்களை மக்கள் அநியாயத்திற்குக் கிண்டலடிக்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும் என்று யோசிப்பதேயில்லை. பள்ளியில் ஆரம்பிக்கும் இந்தக் கிண்டல் அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கும். என்னதான் கிண்டலடிப்பவர்கள் நண்பர்கள் என்றாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், உடல் பருமனை அழகு தொடர்பானது என்று மட்டுமே பார்க்கிறோம்.

ஆனால் அது அழகைத் தாண்டி நமது உயிருக்கே அச்சுறுத்தலை உருவாக்கும் விஷயம் என்கிறார்கள் உடல்நல நிபுணர்கள். நோய் பீடிப்பு சதவீதமும் இறப்பு சதவீதமும் உடல் பருமனைப் பொறுத்து அதிகரிக்கிறது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா 3-வது இடம்

உலகில் 200 கோடியே 10 லட்சம் பேர் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உடல்நலப் பிரிவு இந்த ஆய்வை நடத்தியுள்ளது. ஏழை நாடு, பணக்கார நாடு என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடு களிலும் உடல் பருமன் தீராத பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

சுமார் 188 நாடுகளில் 1980 முதல் 2013 வரையான காலப் பகுதியில் கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா, பசிபிக் ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளில் உடல் பருமன் பிரச்சினை மிக அதிகமாக உள்ளது. உலகத்தில் உள்ள உடல் பருமன் அதிகமானோரில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெறும் 10 நாடுகளில் வாழ்கின்றனர். அந்தப் பத்து நாடுகளில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது என்னும் செய்தியே அடிவயிற்றைக் கலக்குகிறது.

நோய் அதிகரிப்பு

உடல் பருமனால் அவதிப்படுவோரில் 13 சதவீதத்தினர் இந்தியர்களின் கனவு நாடான அமெரிக்காவில் வாழ்கிறார்கள். ஆனால், அவர்களின் தொகை 5 சதவீதத்திற்கும் குறைவே என அந்நாடு தொடர்ந்து கூறிவருகிறது. ஒரு காலத்தில் பணக்கார நாடுகளில் உள்ளவர்களை மட்டுமே பாதித்த இப்பிரச்சினை, இப்போது எந்த பேதத்தையும் கைக்கொள்ளாமல் அனைத்துத் தரப்பினரையும் பாதித்துவருகிறது. சமீபகாலமாகக் குழந்தைகளும் இளைஞர்களும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதிலுமுள்ள வளரிளம் பருவத்துக் குழந்தைகளில் 50 சதவீதத்தினரை உடல் பருமன் பீடித்துவருகிறது. உடல் பருமனால் இதய நோய்களும், பக்க வாதமும், நீரிழிவும், கை கால் மூட்டு வாதமும், சிலவகை புற்றுநோயும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உடல் பருமனால் ஆண்டுக்கு 34 லட்சம் பேர் மரணமடைகிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பசியால் அவதிப்படுபவர்களைவிட அதிகமானோர், உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள் என்பதே உண்மை.

எப்படித் தவிர்க்கலாம்?

நாம் நினைத்தால் உடல் பருமனைத் தவிர்க்கலாம். ஏனெனில், உடல் பருமனை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் நமது உணவுப் பழக்கம் முக்கியப் பங்காற்றுகிறது. சந்தையில் கிடைக்கும் ஃபாஸ்ட் ஃபுட், ஜங் ஃபுட் போன்ற கொழுப்பு மிக்க அதிக கலோரி கொண்ட உணவுப் பொருள்களை நாம் அறவே ஒழித்தால், நமது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உட்கார்ந்தே வேலை செய்பவர்களால் எப்படி இந்தப் பிரச்சி னையை தவிர்க்க முடியும் என்ற கேள்வி எழலாம். அவர்களும் உடல் பருமனால் அவதிப்பட நேரிடுகிறது. எளிய உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகள் நம்மை உடல் பருமனிலிருந்து காப்பாற்றக்கூடியவை. கச்சிதமான உடலமைப்பால் நாம் கிண்டலையும் தவிர்க்கலாம், ஆரோக்கியத்தையும் பேணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x