Published : 27 Jun 2014 11:04 am

Updated : 27 Jun 2014 11:05 am

 

Published : 27 Jun 2014 11:04 AM
Last Updated : 27 Jun 2014 11:05 AM

திரை முற்றம்: சென்னைக்கும் உண்டா மண் வாசம்?

மண்வாசனைப் படமென்றால் மதுரை, கோவை, தஞ்சை ஆகிய ஊர்களைக் கதைக்களமாகக் கொண்டு வெளிவரும் படங்களாகத்தான் இருக்குமா? முன்பொரு காலத்தில் கிராமமாக இருந்து தற்போது கான்கிரீட் காடுகளால் நிறைந்து மாநகராகிவிட்ட சென்னைக்கு மண் வாசம் இருக்காதா? கண்டிப்பாக இருக்கிறது. அதை நான் ‘மெட்ராஸ்’ படத்தின் திரைக்கதையை வாசிக்கும்போது உணர்ந்தேன் என்று சிலிர்க்கிறார் கார்த்தி. பருத்திவீரன் என்ற அசலான மண்வாசனைக் காவியத்தில் நடித்துத் தமிழ்த் திரைக்கு அறிமுகமான கார்த்தியை அதன் பிறகு எல்லோரும் நக்கல், நையாண்டி, அதிரடி, ஆக்‌ஷன் நாயகனாக மாற்றினார்கள். பருத்தி வீரனைப்போல மறுபடியும் மண்ணின் மைந்தன் கதாபாத்திரம் இவருக்குக் கிடைக்காமலே போய்விடுமோ என்று எண்ணிய நேரத்தில், அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரஞ்சித், கார்த்தியை வடசென்னையின் ஒண்டுக் குடித்தனத்தில் பிறந்து வளரும், ரத்தமும் சதையுமான காளி என்ற இளைஞனாக வடித்தெடுத்திருக்கிறாராம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை முதலில் படித்த சூர்யா, புதுமுகங்களை வைத்து அதைத் தயாரிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். பொள்ளாச்சியில் படப்பிடிப்பிலிருந்த கார்த்தியையும் இந்தத் திரைக்கதையைப் படிக்கும்படிச் சொல்லி அனுப்பியிருக்கிறார். படித்துப் பார்த்தவர், இந்தக் கதையை ஒரு புதுமுக நாயகனுக்குத் தருவதைவிடத் தானே இதன்மூலம் புதுப்பிறப்பெடுக்க விரும்பியுள்ளார். அதற்கு இந்தக் காளி கை கொடுப்பான் என்று விடாப்பிடியாக அடம்பிடித்து இந்தக் கதாபாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொண்டாராம்.

சென்னையின் வாழ்வியலைப் போகிறபோக்கில் பேசிவிட்டுப்போன பல படங்கள் இருக்க, “இது வடசென்னையின் வாழ்வியலை ஆழமாகப் பேசும். இதில் அந்த மக்களின் வாழ்க்கைக் கொண்டாட்டத்தை, வலியை, அரசியலை , முரட்டுத்தனமான அன்பை, நெருக்கடிக்கு இடையில் முளைக்கும் காதலைச் சொல்லும் இயல்பான பதிவாக இருக்கும். இதில் பாசாங்கு இருக்காது. கார்த்தி எனும் வணிக மதிப்புள்ள கதாநாயகன் நடிப்பதால், இது தனிநபர் சார்ந்த கதை என்று நினைக்காதீர்கள். ஒரு பகுதி மக்களின் வாழ்க்கை. அங்குள்ள ஒரு சராசரி இளைஞனாகக் கார்த்தி இப்படத்தில் வருகிறார்” என்கிறார் ரஞ்சித்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலிருந்து தனக்கு எதிர்பாராத அதிர்ச்சிகள்தான் என்கிறார் கார்த்தி. “முதல் நாள் ஷூட்டிங் இரண்டு மணிக்கு வந்துடுங்கன்னு சொன்னாங்க. நானும் மதியம் இரண்டு மணிக்கான்னு கேட்டேன். இல்ல நள்ளிரவு இரண்டு மணின்னு சீரியஸா சொன்னங்க. கொஞ்சம் டவுட்டோட ஸ்பாட்டுக்குப் போனா எல்லாருமே ரெடியா இருந்தாங்க. ரஞ்சித் பக்கத்துல வந்து என் கையில ஒரு காலிக்குடத்தைக் கொடுத்தார். எதுக்குன்னு கேட்டேன்? தண்ணீர் பிடிச்சுட்டு வாங்கன்னார். அங்க போனா வரிசையில நிற்கின்ற அக்காக்கள் எல்லாம் ‘ஏய் போயி வரிசைல நில்லு’ என விரட்டுகிறாங்க. முதல் நாளே பெரிய சவாலா போச்சு..” என்று தன் படப்பிடிப்பு அனுபவங்களில் வியந்துபோகிறார் வடசென்னை வீரனாகியிருக்கும் கார்த்தி.

மண்வாசனைப் படம்மெட்ராஸ்கார்த்திவடசென்னை வாழ்க்கைஇயக்குநர் ரஞ்சித்

You May Like

More From This Category

More From this Author