Published : 01 Apr 2015 10:42 am

Updated : 01 Apr 2015 10:42 am

 

Published : 01 Apr 2015 10:42 AM
Last Updated : 01 Apr 2015 10:42 AM

பாதுகாப்பற்ற நிலையில் நடைபெறும் மாபெரும் கட்டுமானங்கள்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் விருந்தினர் இல்லத்தின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டுவந்த மிக பிரம்மாண்ட முகப்பு (போர்டிகோ) இடிந்துவிழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

60 அடி (4 மாடி) உயரம் கொண்ட தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் 27 அடி அகலம், 12 அடி நீளத்தில் ‘பெர்கோலா’ வடிவில் போர்டிகோவும், கீழே செக்யூரிட்டி அறையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்தது.

இப்பணியில் வெளி மாநிலங் களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பிஹாரைச் சேர்ந்தவர்கள். இதற்

காக தரையிலிருந்து பல அடுக்கு களாக சாரம் அமைத்து உச்சியில், பெர்கோலாவுக்கான கிடைமட்ட பீம்கள், குறுக்கு பீம்கள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கடந்த 28-ம் தேதி இரவு வரை பணிகள் நடைபெற்றன. 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை.

ஆனால், அன்று பணியை நிறுத்த விரும்பாத கட்டிட ஒப்பந்ததாரர், லேபர் கான்ட்ராக்டர் மூலம் இந்தப் பணியில் பயிற்சி இல்லாத நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோருடன் கடந்த 29-ம் தேதி காலை 6 மணிக்கு பணியை தொடங்கியுள்ளார்.

அப்போது, பாதி பேர் உச்சியிலும், மீதம் உள்ளவர்கள் கீழேயும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழிருந்து மோட்டார் பொருத்தப் பட்ட லிஃப்ட் மூலம், உச்சிக்கு இரும்பு பக்கெட்டுகளில் கான்கிரீட்

கலவையைக் கொண்டுசென்ற போது ஏற்பட்ட அதிர்வில் சாரம் சரிந்து கீழே விழுந்ததில் 21 பேர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கினர், இதில் 5 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

சேஃப்டி கூட்டம் இல்லை

நேற்று முன்தினம் பணி நடை பெறாததால் அருகில் உள்ள தற்காலிக வசிப்பிடத்தில் பிஹாரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானத் தொழி லாளர்கள் முடங்கிக் கிடந்தனர். அவர்களிடம் கேட்டபோது, “மீண்டும் எப்போது பணி தொடங்கும் என்று தெரியவில்லை. இதற்கு முன்பு சென்னையில் வேலை செய்தோம். கடந்த 6 மாதமாக இங்கு வேலை செய்கிறோம். ஒரு நாளைக்கு ரூ.450 கூலி. ஆனால், செலவு போக மாதம் ரூ.10 ஆயிரம் தேறுவதே சிரமம். அதை வீட்டுக்கு அனுப்பி விடுவோம். இங்கு பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. சேஃப்டி கூட்டங்களும் நடத்தப்படுவதில்லை. இரவு பகலாகத் தொடர்ந்து வேலை செய்யும் நிலை உள்ளது” என்றனர்.

உயிர் முக்கியம்

விபத்து நடந்தபோது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவாரூரைச் சேர்ந்த கிரேன் இயக்கும் தொழிலாளி கூறியபோது, “நான் குஜராத்தில் கிரேன் இயக்கும் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ளேன். அங்கு இதுபோன்ற கட்டுமானப் பணியின்போது, வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் சேஃப்டி கூட்டம் நடைபெறும். இதில், பொறியாளர்கள், மேற்பார்வை யாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் .

சேஃப்டி அதிகாரி

கள், சொல்லும் முதல் வார்த் தையே உங்கள் உயிர் உங்கள் கையில் என்பதுதான். உங்கள் குடும்பம் உங்களை நம்பி ஊரில் காத்திருக்கிறது. ஒப்பந்ததாரர், சைட் இன்ஜினியர் அவசரப்படுத்தினாலும், நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பார்கள். தொழிலாளர்களும் அதன்படி செயல்படுவார்கள். ஆனால், இங்கு இதுவரை அது போன்ற சேஃப்டி கூட்டங்கள் நடை பெற்றதாகத் தெரியவில்லை” என்றார்.

கைது, விசாரணை

இந்த விபத்து குறித்து ஹைதராபாத்தைச் சேர்ந்த டிஇசி இன்ஃப்ராஸ்ட்ரெக்சர் என்ற ஒப்பந்த நிறுவனத்தின் 2 சைட் இன்ஜினியர் கள், மேற்பார்வையாளர், லேபர் கான்ட்ராக்டர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பொதுப்பணித் துறை

(சி.பி.டபிள்யு.டி) கட்டுப்பாட்டில் நடைபெறும் இந்தப் பணி களைக் கண்காணிக்க அந்த வளாகத்திலும், திருவாரூர் நகரிலும் தனி அலுவலகங்கள் உள்ளன. இந்தப் பணிகள் சி.பி.டபிள்யு.டி. பொறியாளர்கள் முன்னிலையில் தான் நடைபெறவேண்டும். ஆனால், விபத்து நடந்தபோது அவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களிடமும் விசாரணை நடைபெறுகிறது.

சி.பி.டபிள்யு.டி. விளக்கம்

இதுகுறித்து இந்தப் பணிக்கான சி.பி.டபிள்யு.டி. தலைமை திட்டப் பொறியாளர் தங்கமுத்துவிடம் கேட்டபோது, “இந்தப் பணிக்கான தூண்கள் ஏற்கெனவே அமைக் கப்பட்டுவிட்டன. உச்சியில் கிடை மட்ட பீம்கள் அமைக்கும் பணி கடந்த 28-ம் தேதி தொடங்கி பாதி முடிந்தது. இதை, எங்களது பொறியாளர்கள் கண்காணித்தனர். வழக்கம்போல காலை 9 மணிக்குத்தான் பணிகள் தொடங்கும்.

ஆனால், கடந்த 29-ம் தேதி காலையில் முன்னதாகவே பணிகளை தொடங்கிவிட்டனர். அப்போது, எங்கள் பொறியாளர்கள் அங்கு இல்லை. விசாரித்ததில் சாரம் சரிந்ததால்தான் விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்” என்றார்.

பாதுகாப்பற்ற நிலையில் நடைபெறும் மாபெரும் கட்டுமானங்கள்

You May Like

More From This Category

More From this Author