Published : 07 Apr 2015 08:37 PM
Last Updated : 07 Apr 2015 08:37 PM

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு கடற்கரை – வேளச்சேரி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 5 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன. இதையொட்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ஏப்ரல் 9, 25, 30, மே 8, 10 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இந்த சிறப்பு ரயில் இரவு 11.45-க்கு புறப்பட்டு 12.30-க்கு வேளச்சேரி சென்றடையும். வேளச்சேரியில் இருந்து நள்ளிரவு 12.35-க்கு புறப்பட்டு 1.20-க்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

புறநகர் ரயில்கள் ரத்து

அரக்கோணம் - திருத்தணி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 3 புறநகர் மின்சார ரயில்கள் நாளை (9-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன. இதன்படி, அரக்கோணத்தில் அதிகாலை 4.20 மணி, 5.10 மணிக்கு புறப்படும் திருத்தணி ரயில்கள், திருத்தணியில் அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும் அரக்கோணம் ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

திருத்தணியில் இருந்து காலை 5.40-க்கு புறப்படவேண்டிய சென்னை சென்ட்ரல் ரயில், திருத்தணி முதல் அரக்கோணம் வரை மட்டும் ரத்து செய்யப்பட்டு, அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல, அம்பத்தூர் - ஆவடி இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 10, 11, 12-ம் தேதிகளில் 4 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதன்படி, சென்னை சென்ட்ரல் (நள்ளிரவு 12.05) – ஆவடி ரயில், சென்னை கடற்கரை (நள்ளிரவு 1.20) – அரக்கோணம் ரயில், ஆவடி (அதிகாலை 2.55) - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில், பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் (அதிகாலை 3.20) - சென்னை சென்ட்ரல் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு தெற்கு ரயில்வே கூறியுள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x