Published : 12 Apr 2015 11:52 AM
Last Updated : 12 Apr 2015 11:52 AM

குறிப்புகள் பலவிதம்: வெங்காயத்தை விதவிதமா நறுக்கணும்

*உருளைக்கிழங்கை அரிசி கழுவிய‌ நீரில் 20 நிமிடங்கள் ஊற‌வைத்துப் பின் பயன்படுத்தினால் சுவையாக‌ இருக்கும்.

* கோதுமையைக் கழுவி உலர்த்தி, நன்றாக‌ வறுத்துப் பின் மிஷினில் மாவாக‌ அரைத்து வைத்துக் கொண்டால்,தேவையானபோது அரிசிமாவு புட்டு செய்வதுபோல் கோதுமை மாவு புட்டு செய்யலாம்.

* பாயசத்தில் முந்திரிக்குப் பதிலாக‌ வேர்கடலையை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் சுவையாக‌ இருக்கும்.

*காபி பொடியுடன் ஒரு கல் உப்பு போட்டு டிகாஷன் வைத்தால் ஸ்ட்ராங்கான‌ டிகாஷன் கிடைக்கும்.

- மாலினி ராம், சென்னை.

இது வற்றல், வடாம் போடும் சீசன். பல நிறங்களில் வடாம் வேண்டும் என்பதற்காகச் செயற்கை சாயங்களைப் பலரும் பயன்படுத்துவார்கள். அவை நம் ஆரோக்கியத்துக்கு உகந்தவையல்ல. இயற்கையில் நமக்குக் கிடைக்கும் பொருட்களை வைத்தே நிறங்களை உருவாக்கலாம்.

* தக்காளியை நன்கு அரைத்து வடிகட்டி, அந்தச் சாற்றை மாவில் கலந்துவிட்டால் இளஞ்சிவப்பு வண்ணம் கிடைக்கும். காரத்துக்குத் தக்காளியுடன், சிவப்பு மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.

* புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்து மைய அரைத்து வடிகட்டி, மாவுடன் சேர்த்தால் பச்சை நிறம் கிடைக்கும்.

*பீட்ரூட்டையும் இதேபோல அரைத்து வடிகட்டிச் சேர்த்தால் சிவப்பு வண்ணம் கிடைக்கும்.

*வெங்காயத்தை ஒவ்வொரு சமையலுக்கு ஒவ்வொரு மாதிரி நறுக்கினால் பார்க்கவும் அழகாக இருப்பதுடன் சுவையும் அருமையாக இருக்கும்.

*சேமியா, அரிசி சேவையில் செய்யும் உப்புமா, கிச்சடி, போன்றவற்றுக்கு மெலியதாக. நீளவாக்கில் நறுக்க வேண்டும். கிரேவிக்கும் ராய்த்தாவுக்கும்கூட அதே போலத்தான். ரவையில் செய்வதாக இருந்தால் பொடியாக நறுக்க வேண்டும்.

*கூட்டு, பொரியல் போன்றவற்றுக்கும் பொடியாக நறுக்கினால் சுவை கூடும்.

*குழம்பு வகைகளுக்குச் சின்ன வெங்காயம்தான் சுவையைத் தரும். அது இல்லாதபோது பெரிய வெங்காயத்தைக் குண்டு குண்டாக நறுக்கலாம்.

*அசைவ, சைவ பிரியாணி வகைகளுக்குச் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*சாம்பாருக்கு சாம்பார் வெங்காயம்தான் உகந்தது. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் சற்று கனமான துண்டுகளாகப் போடலாம்.

- இந்திராணி பொன்னுசாமி, சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x