Published : 26 Mar 2015 10:23 PM
Last Updated : 26 Mar 2015 10:23 PM

கேளிக்கை வரி விலக்கால் படம் பார்ப்பவர்களுக்கு டிக்கெட்டில் சலுகை கிடையாது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சினிமா தொழில் மேம்பாட்டுக்காகவே கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. படம் பார்க்க வருபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த கே.ஜெ.சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘“கயல்” என்ற தமிழ் திரைப்படத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதனால் டிக்கெட் கட்டணம் குறைவாக இருக்கும் என்ற நோக்கில், எனது குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள திரையரங்கு ஒன்றில் “கயல்” திரைப்படம் பார்க்க சென்றேன்.

அங்கு டிக்கெட் எடுத்தபோது கேளிக்கை வரி விலக்கிற்கான தொகையை கழிக்காமல், முழு கட்டணமும் வசூலித்தார்கள். அதுகுறித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டபோது, கேளிக்கை வரி விலக்கு பெற்ற படத்துக்கு, டிக்கெட் கட்டணத்தை குறைத்து வாங்க வேண்டும் என்று அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கூறியதுடன் அதுதொடர்பான அரசு சுற்றறிக்கையையும் காண்பித்தனர். விவரங்கள் தெளிவாக இல்லாத அந்த சுற்றறிக்கையை ரத்து செய்து, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படும் திரைப்படத்துக்கு அனைத்து வகுப்பு டிக்கெட்டுகளிலும் கட்டண சலுகை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கில் வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

கேளிக்கை வரி விலக்கு அளிப்பது சினிமா தொழில் மேம்பாட்டுக்காக மட்டும்தான். அவ்வாறு விலக்கு அளிக்கப்படும் திரைப்படத்தை பார்க்க வருபவர்கள் பயன்பெறும் வகையில் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுவதில்லை. கடந்த 2004-ம் ஆண்டு முதல் இதுவே அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது. சினிமா தொழிலை ஊக்குவிக்கவும், தமிழ் பண்பாட்டை வளர்க்கவும் சில வரையறைக்குட்பட்டு குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று சுற்றறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கேளிக்கை வரி விலக்கு பெற்ற படத்தைப் பார்க்க வருபவர்களிடம், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட குறைவாக வசூலிக்க வேண்டும் என்று எந்த குறிப்பும் அதில் இடம்பெறவில்லை.

“காந்தி” உள்ளிட்ட சில படங்களுக்கு மட்டும்தான் கேளிக்கை வரி விலக்கு வழங்கியதுடன், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட குறைத்து வசூலிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி விஷேச டிக்கெட் விநியோகிக்கப்பட்டது. அந்தப் படங்களை பொதுமக்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் அதுபோல சலுகை அளிக்கப்பட்டது. மற்ற படங்களுக்கு அதுபோன்ற சலுகை வழங்கப்படவில்லை என்று பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x