Published : 23 Mar 2015 12:19 PM
Last Updated : 23 Mar 2015 12:19 PM

முறைசாரா தொழிலாளர்களுக்கு என்பிஎஸ் ஏற்றதா?

ஓடி ஓடி உழைத்தாலும் ஒரு நாளில் ஓய்வெடுக்கத்தான் வேண்டும். ஓய்வெடுக்கும் காலத்தில் கொஞ்சம் பொருளாதார பலமும் இருந்தால் மிச்சமிருக்கும் வாழ்க்கையை கஷ்டமில்லாமல் கழிக்கலாம் என்பதுதான் பலரது எண்ணமாக இருக்கும்.

அரசு ஊழியர்கள், மற்றும் முறைப்படுத்தபட்ட நிறுவன பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்யப்படும் பணியாளர் ஓய்வூதிய தொகை கொஞ்சம் உதவிகரமாக இருக்கும். ஆனால் முறைசாரா தொழில்களில் இருப்பவர்களுக்கு ஓய்வுகால நிதி என்பது சாத்தியமில்லை. அவர்களுக்கு என்றே கொண்டு வரப்பட்டதுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை 2008ல் மத்திய அரசு கொண்டு வந்தது.

முறைசாரா தொழிலாளர்கள் தங்களது எதிர்காலத்துக்கு என்று சிறு தொகையை மாதா மாதம் சேமித்தால் ஓய்வுகாலத்தில் பலன் கொடுக்கும் வகையில் அமைந் துள்ள திட்டம் இது. இதன் மூலம் சேமிக்கப்படும் தொகைக்கு வரி விலக்கு பலன்களும் கிடைக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், அஞ்சலகம் மூலம் இந்த திட்டத்தில் சேர வேண்டும். மத்திய அரசின் சார்பு நிறுவனமான என்எஸ்டிஎல் இதை நிர்வகித்து வருகிறது.

யார் யார் சேரலாம்

இந்திய குடிமகனாக இருப்பவர்கள் அனைவரும் இதில் சேரலாம். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர 18 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

முதலீடு எவ்வளவு?

குறைந்தபட்சமாக ரூ.500 வரை கட்டலாம். ஒரு நிதி ஆண்டில் ரூ.6000 வரை குறைந்தபட்சமாக முதலீடு செய்யலாம். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பரிவர்த்தனைக்கான கட்டணமாக முதலீட்டிலிருந்து 0.25 சதவீதம் அல்லது ரூ.20 கட்டணமாக பிடித்துக் கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள்

இ-கிளாஸ் மற்றும் சி-கிளாஸ், ஜி-கிளாஸ் என மூன்று வகைகளில் முதலீடு செய்யலாம். இதில் ஆக்டிவ் சாய்ஸ், ஆட்டோ சாய்ஸ் என இரண்டு வசதிகள் உள்ளது. ஆக்டிவ் சாய்ஸ் என்பது எவ்வளவு சதவிகிதம் ஈக்விட்டி, பாண்டு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் முடிவு செய்யலாம். ஆனால் முதலீட்டை தேர்வு செய்ய முடியாதவர்கள் ஆட்டோ சாய்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஆட்டோ சாய்ஸ் பிரிவில் வயது அடிப்படையில் முதலீட்டுத் திட்டம் இருக்கிறது.

இ-கிளாஸ் பண்டுகள் என்பது ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்வது. சி-கிளாஸ் பண்டுகள் என்பது கார்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்வது. ஜி-கிளாஸ் பண்டுகள் என்பது அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது. இதில் முதலீட்டாளர்கள் மூன்று திட்டங்களையும் சேர்த்து தேர்ந்தெடுக்கலாம். ஈக்விட்டி பண்டுகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக முதலீடு செய்ய அனுமதி இல்லை.

வரி விலக்கு

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடுக்கு வரிச்சலுகை உண்டு. இதில் மேற்கொள்ளப்படும் முதலீடு 80 சி யின் கீழ் கணக்கிடப்படும். இதில் ஆண்டுக்கு 1.50 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு பெற்றுகொள்ள முடியும். கடந்த பட்ஜெட்டில் கூடுதலாக 50 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சலுகையை அடுத்த நிதி ஆண்டு முதல் பெறலாம். ஆனால் பென்ஷன் திட்டம் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும்.

முதலீட்டுக் காலம்

இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகு எத்தனை வருடங்களுக்கு ஓய்வுகால நிதி தேவை என்பதையும் நாமே தேர்ந்தெடுக்கலாம். அதாவது, 10, 15 மற்றும் 20 ஆண்டுகளுக்கு ஓய்வுகால நிதி தேவை என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அத்தனை வருடங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். 60 வயதில் ஓய்வூதியம் பெற தொடங்குபவர் எனக்கு 70 வயது வரை ஓய்வூதியம் வேண்டும் என்றால் அதற்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

இந்த காலத்துக்கு ஏற்ப ஓய்வூதிய தொகை மாறுபடும் முதலீட்டாளர் பத்து ஆண்டுக்கு தேர்ந்தெடுத்து இடையில் இறந்துவிட்டால் மீதமுள்ள ஆண்டுகளுக்கு அவரது நாமினி அல்லது சட்டப்படியான வாரிசுக்குக் ஓய்வூதிய தொகை கிடைக்கும். ஒருவேளை பென்ஷன் பெறும் நபர், அவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருந்தால் அவருக்கு பென்ஷன் கிடைக்காது.

திட்ட மாறுதல்

பென்ஷன் பண்ட் அல்லது யூலிப் போன்றதல்ல. ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கும் மாறிகொள்ளும் வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் ஒரு வருடம் முதலீடு செய்த பிறகுதான் ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திடத்துக்கு மாறமுடியும்.

கட்டணங்கள்

இந்த் திட்டத்தின் பண்ட் மேனேஜர்களின் செலவு சராசரி 0.01 சதவீதம்தான். எனவே மிகக் குறைந்த செலவைக் கொண்ட முதலீட்டு திட்டம் இது. இந்த கணக்கை தொடங்குவதற்கு ஒரே ஒரு முறைக் கட்டணமாக 0.25 சதவீதம் முதல் அதிகபட்சம் ரூ. 20 வரை பிடித்தம் செய்யப்படும். வேறு எந்த கட்டணங்களும் கிடையாது.

வெளியேறும் விதிமுறைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையை 60 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. இடையில் பணத்தேவை என்றால் 40 சதவீதம் வரை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.

இதுவும் அவசரகால பணத்தேவை, குழந்தைகளின் உயர்கல்வி, பெண் குழந்தை திருமணம், மருத்துவ தேவை மற்றும் வீடு தேவைகளுக்கு ஏற்பவே. 60 வயதுக்கு முன் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 75 சதவீத தொகையை பென்ஷனுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு, மீதி 25 சதவீத தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த 75 சதவீத தொகை ஓய்வூதிய முதலீடுக்குச் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் எந்த நிறுவனத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யவேண்டும் என்பதையும் அரசே முடிவு செய்யும்.

எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ், ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ், ஆகிய நிறுவனங்களின் திட்டத்தில் மட்டுமே பென்ஷனுக்காக முதலீடு செய்யலாம்.

வங்கி சேமிப்பு மற்றும் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் சேமிப்பதைவிட இதில் சேமிப்பது பாதுகாப்பு. திட்டமிட்ட எதிர்காலத்துக்கு ஓய்வூதியம் அவசியம் என்பதை உணர்ந்தால் முறைசாரா தொழில்களில் இருப்பவர்களுக்கு இது வரப்பிரசாதமே

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள தொகையை 60 வயதுக்கு முன்னர் திரும்ப எடுக்க முடியாது. அவசரத் தேவைக்காக பணத்தேவை என்றால் 40 சதவீதம் வரை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். 60 வயதுக்கு முன் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக இருந்தால், 75 சதவீத தொகையை பென்ஷனுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு, மீதி 25 சதவீத தொகையை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x