Published : 20 Mar 2015 08:29 AM
Last Updated : 20 Mar 2015 08:29 AM

வேதாரண்யம் அருகே பெண் நீதிபதி மீது தாக்குதல்: 3 தனிப்படை போலீஸார் விசாரணை- நீதிபதிகள் சங்கம் கண்டனம்

வேதாரண்யம் அருகே பெண் நீதிபதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதியாக இருப்பவர் லதா (39). இவர், கூடுதல் பொறுப்பாக நாகை நீதிமன்றப் பணிகளையும் கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினத்தில் நீதிமன்றப் பணிகளை முடித்து விட்டு வேளாங்கண்ணிக்கு சென்றார். அங்கிருந்து இரவு 9 மணியளவில் வேதாரண்யத்துக்கு காரில் புறப்பட்டார்.

வேளாங்கண்ணி அருகே பூவத்தடி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கார் மீது யாரோ கல் வீசியுள்ளனர். உடனே, காரை நிறுத்திய டிரைவர் சதீஷ்குமார், கல் வீசியது யார் என்று பார்த்திருக்கிறார்.

அப்போது 2 பைக்குகளில் வந்த 4 பேர் கார் அருகே நின்றனர். அவர்களிடம் ‘இது நீதிபதியின் கார். இதை ஏன் தாக்கினீர்கள்’ என்று சதீஷ்குமார் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘இது நீதிபதி காரா?’ என கேட்டுக்கொண்டே சதீஷ்குமாரை உருட்டுக்கட்டையால் தாக்கி யுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த நீதிபதி லதா, கார் கண்ணாடியை இறக்கிவிட்டு வெளியே எட்டிப்பார்த்துள்ளார். அவரையும் அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியது. இதில், நீதிபதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாருக்கு முகம், தோள்பட்டை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் அந்த வழியே மற்றொரு கார் வருவதைப் பார்த்த தும் மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர். அதற்குள், அலறல் சத்தம் கேட்டு அங்கு கூடிய மக்கள், காயமடைந்த நீதிபதியையும் டிரைவரையும் வேளாங்கண்ணி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நீதிபதி லதாவுக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட நீதிபதி சிவக்குமார், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து நீதிபதி லதாவிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். இது தொடர்பாக லதா அளித்த புகாரின்பேரில், வேளாங்கண்ணி போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

நீதிபதி மீது தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்க எஸ்.பி. அபினவ் குமார் உத்தரவின்பேரில், நாகப்பட்டினம் ஏடிஎஸ்பி சசாங்சாய் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேதாரண்யம் நீதிமன்றத்தில் சமீபத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பாதிக் கப்பட்ட யாரும் இந்தத் தாக்கு தலில் ஈடுபட்டார்களா அல்லது டிரைவர் சதீஷ்குமாருக்கு ஏதும் முன்விரோதம் இருந்து அதன் அடிப்படையில் இத்தாக்குதல் நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். நீதிபதி தாக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதிகள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு நீதிபதிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இச்செயலை தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. நீதிபதிகளுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்நிகழ்வு குறித்து தமிழ்நாடு நீதிபதிகள் சங்க அவசர செயற்குழு உடனடியாக கூடி தொடர் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யும். இது தொடர்பாக தமிழக நீதிபதிகள் பதற்றம் அடைய வேண்டாம். உயர் நீதிமன்றத்தை அணுகி நீதிபதிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் போராட்டம்

நீதிபதி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நாகப்பட்டினம் மாவட்ட வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்றங்களை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினத்தில் இன்றும் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கும் என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

மயிலாடுதுறை நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாரண்யம், சீர்காழி ஆகிய இடங்களிலும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x