Published : 27 Mar 2015 12:44 pm

Updated : 27 Mar 2015 12:51 pm

 

Published : 27 Mar 2015 12:44 PM
Last Updated : 27 Mar 2015 12:51 PM

கோணங்கள் 22- மதுபானக் கடை Vs காக்டெயில்

22-vs

மாடர்ன் தியேட்டர்ஸ் என்றாலே சேலம் ஞாபகத்துக்கு வரும். நான்கைந்து வருடங்களுக்கு முன் நியூ மாடர்ன் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் சேலத்தில் ஒரு புதிய பட நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். அவர்களது படத்தின் இசை வெளியீட்டுக்கு என்னைச் சிறப்பு விருந்தினராய் அழைத் திருந்தார்கள். சந்தோஷமும் ஆர்வமும் மேலிட அவ்விழாவிற்குச் சென்றேன். சேலத்தின் புறநகர் பகுதியில் அவர்களது நிறுவனத்தை அமைத்திருந்தார்கள்.

இயக்குநர் சக்திவேல் அடிப்படையில் சினிமா அபிமானி. ரசிகர், அதை விடச் சிறப்பு அவர் ஒரு பொறியாளர். படப்பிடிப்புக்குத் தேவையான முதலீடு மட்டுமில்லாமல், அதற்குரிய தளவாடங்களையும் அவரே தயார் செய்திருந்தார். கேனான் 7டி கேமரா, ட்ரா அண்ட் ட்ராலி, மினி கிரேன், எடிட் சூட், கலர் கரெக்‌ஷன் சாப்ட்வேர், டப்பிங் எனக் கோடம்பாக்கத்தின் அத்தனை வேலைகளையும் அவருடைய மொட்டை மாடி ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை யிலேயே இடம் பெறச் செய்திருந்தார்.


ஊரே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு ஒரு சாரட் வண்டியில் இசை வெளியிட்டு ஊர்வலத்தை நடத்திச் சுமார் இரண்டாயிரம் பேரைக் கூட்டி, மேயர் ஆவுடையப்பன் தலைமையில், ஊரில் இருந்த எல்லா விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் எல்லாரையும் அழைத்து விமரிசையாகப் படத்தின் பாடல்களை வெளியிட்டார்.

அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஆளாளுக்கு இந்நிறுவனத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்குச் சென்ற சினிமாவை மீண்டும் சேலத்திற்கு அழைத்து வந்த பெருமை நியூ மார்டன் தியேட்டரையே சாரும் என்று பாராட்டி, “இப்படத்தை நான் வாங்கி வெளியிடுகிறேன், நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்” என்று பேசினார்கள். படக்குழு நண்பர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. அன்றிரவு அவர்களது முகத்தில் பெரும் நம்பிக்கை. அவர்களது நம்பிக்கையை நான் குலைக்க விரும்பவில்லை.

“சீக்கிரம் படத்தை முடிங்க. மேடையில் அறிக்கை விட்டவங்க எல்லாம் காணாம போயிருவாங்க. அதனால படத்தை ரிலீஸ் பண்றதுக்கும் பணத்தைத் தயார் பண்ணிக்கங்க” என்றேன். பின்பு அப்படத்தின் பின்னணியிசை கோப்புக்கும், சென்சார், மற்றும் இதர வேலைகளுக்கு நானும் என் நண்பர் ஒருவரும் சில பல உதவிகள் செய்தோம்.

பின்பு தொடர்பு விட்டுப் போனது. அவர்களும் மாதம் ஒரு முறை சென்னை வந்து படத்தை யாருக்காவது போட்டுக் காட்டி வியாபாரம் பேச முயற்சித்தார்களே தவிர, வேறேதும் செய்ய அவர்களிடம் பணமில்லை என்பது பெரும் சோகம்.

சில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் படத்தைச் சேலத்தில் பிரபல மல்டி பிளெக்ஸ் திரையரங்கு ஒன்றில் இரண்டு காட்சிகள் திரையிட்டு மேலும் தொடராமல் போய்விட்டார்கள். இன்றைக்கும், அந்நிறுவனத்தை நடத்திய நண்பர்கள் என்னுடன் தொடர்பில்தான் இருக்கிறார்கள். இவ்வளவுக்கும் பின் இப்படத்தினால் நடந்த ஒரே சந்தோஷ சமாச்சாரம் என்னவென்றால், அப்படத்தின் கதாநாயகன், நாயகி இருவரும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாய் இருப்பதுதான்.

இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் ஓரளவுக்குச் சினிமா பற்றிய அறிவும், அதைத் தரமாய்க் கொண்டு வந்து சேர்க்க விழையும் தொழில்நுட்ப அறிவையும் வைத்துக் கொண்டு, பணம் என்ற ஒன்று இல்லாமல் பரிதவித்த கதைக்காகத்தான். நல்ல படம், மோசமான படம் என்பதை மீறி ஒரு முழு நீளத் திரைப்படமாய் அதைக் கொண்டுவந்திருந்தார்கள்

கோடம்பாக்கத்திற்கு முன் சினிமா வெளியூர்களில்தான் இருந்திருக்கிறது. அங்கிருந்துதான் இடம் பெயர்ந்திருக்கிறது. சேலத்திலிருந்த தெலுங்கு சினிமா 70களுக்குப் பிறகே ஆந்திராவுக்கே போனது. அதனால் கோடம்பாக்கத்துக்கு வேறெங்கும் கிளைகள் திறக்கப்படக் கூடாது என்று சொல்லவில்லை. திறப்பதற்கு முன் அதன் வியாபார, தொழில்நுட்பச் சாத்தியங்களைத் தெரிந்துகொண்டு இறங்குங்கள் என்றே சொல்கிறேன்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஒரு சினிமாக்காரன் இருக்கத்தான் செய்கிறான். ஆனால் அவனுக்குத் தேவை சரியான வழிகாட்டி. சரியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைக்க வேண்டிய களம், தளம். பின்பு அதற்கான பணம். அப்படி வந்தவர்களில் மிக முக்கியமாய் நான் கருதுகிறவர் ‘மதுபானக்கடை’ இயக்குநர் கமலக்கண்ணன்.

ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர். ஈரோட்டில் விளம்பர நிறுவனத்தை நடத்திக் கொண்டு, சினிமாவைப் பற்றிய அறிவையும் வளர்த்துக்கொண்டு, ஒரு கல்ட் தமிழ்ப் படத்தைக் கொடுத்தவர். தொழில்நுட்ப அறிவு மட்டுமல்ல; நல்ல சினிமாவைத் தரத்தோடு கொடுக்க விழையும் தைரியமும் கொண்டவர்.

படத்துக்குள் நாலு டாஸ்மாக் காட்சிகள், பாரில் ஒரு குத்துப்பாட்டு என்று குடிப்பதைக் குதூகலமாக்கிக் கொண்டாடும் மனநிலையை அளிக்கும் படத்திற்கு வரிவிலக்கும், “யு” சான்றிதழும் அளிக்கும் இவ்வுலகில், மதுபானக்கடை என்ற பெயரில் டாஸ்மாக்கைச் சுற்றி அதில் வரும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் ஒரு காதல் என்று சமுதாயம் எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்ன அந்தப் படத்திற்கு “ஏ” சான்றிதழும், வரிவிலக்கும் கொடுக்காததுதான் இவ்வுலகம்.

இருந்தாலும் அத்தனையும் எதிர்கொண்டு, போராடி, தன் சொந்தச் செலவில் திரைப்படத்தை எழுபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட்டார். சென்னையின் முன்னணி திரையரங்கில் மதுபானக்கடை என்ற டைட்டில் காரணமாய் அரங்கு கொடுக்க மறுத்தார்கள். ஆனால் அதே நேரத்தில் ‘காக்டெய்ல்’ எனும் இந்திப் படத்திற்கு நான்கு காட்சிகள் அனைத்து அரங்குகளிலும் கொடுத்தார்கள். ஏ சான்றிதழ் என்பதால் சாட்டிலைட் உரிமை வியாபாரம்கூட அந்தப் படத்துக்கு இல்லாமல் போய், சொந்தச் செலவில் டி.வி.டி. போட்டு, மக்களிடையே கொண்டுபோய்ச் சேர்த்தார்.

இப்படிப் பல போராட்டங்களைச் சந்திக்க, தைரியமும், ஆர்வமும், சினிமா மீதான பற்றும் கொண்டவர்கள் கோடம்பாக்க கிளைகளிலிருந்துதான் வருகிறார்கள். அப்படி வருகிறவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவ்விரு நிறுவனங்களைப் பற்றிய அனுபவங்கள். ஜெயித்தவர்களைப் பற்றிப் படித்து தன்னம்பிக்கை பெறுவதை விட, பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டு தெளிவு பெறுவது சுலபமானது. ஏனென்றால் எல்லோருக்கும் எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை.

தொடர்புக்கு: Sankara4@gmail.com

கோணங்கள்சினிமாவியாபாரம்கேபிள் சங்கர்மினி ரிவ்யூதொடர்திரையுலகம்

You May Like

More From This Category

More From this Author