Published : 22 Mar 2015 11:11 AM
Last Updated : 22 Mar 2015 11:11 AM
தருமபுரி கனரா வங்கியில் வேளாண் சார்ந்த கடன் வழங்கும் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் தேவா (25). சேலத்தைச் சேர்ந்தவர். இவர் சிறு சிறு புகார்களின் அடிப்படையில் சமீபத்தில் தருமபுரி கனரா வங்கியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் அதனூர் கிளைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் பழைய நிலுவைப் பணிகளை முடித்துத் தரும் பொருட்டு அயல்பணி அடிப்படையில் தருமபுரி கிளைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர் பணி முடித்துச் சென்ற நிலையில் தருமபுரி வங்கியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடமானமாகப் பெறப்பட்ட சுமார் 15 பாக்கெட் நகைகள் (1 கிலோ 100 கிராம்) காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதையறிந்த வங்கி அதிகாரிகள் காவல்துறையை நாட தயாராகி வருவதை நண்பர்கள் சிலர் மூலம் தேவா தெரிந்து கொண்டுள்ளார். எனவே திருடிச் சென்ற நகைகளை இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் எடுத்து வந்து மாடியில் செயல்படும் வங்கியின் கதவு அருகே ரகசியமாக வைத்துச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் நகைகள் இருப்பதை அறிந்த வங்கி அதிகாரிகள் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் வங்கிக் கட்டிடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அதில், முதலில் மாடிப்படியில் எட்டிப் பார்த்த தேவா பின்னர் தலையை சாக்குப்பை மூலம் மூடியவாறு மாடியேறி நகைகளை வீசிச் சென்றது தெரியவந்தது. எனவே கடந்த 18-ம் தேதி தேவாவை தருமபுரி நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு முன்பு தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள கனரா வங்கிக் கிளை ஒன்றில் தேவா பணியாற்றியுள்ளார். அப்போது அந்த வங்கியின் லாக்கரில் இருந்த 13 பவுன் நகை காணாமல் போனது.
தகவல் வெளியில் தெரிந்தால் வங்கியின் பெயருக்கு களங் கம் ஏற்படுவதுடன், உயர் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் அப்போது அந்த திருட்டு சம்பவம் மறைக்கப்பட்டு, உரிய நபருக்கு அதற்கு இணையான தொகையை அதிகாரிகள் சிலர் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து செலுத்தியது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.