Published : 16 Mar 2015 09:34 AM
Last Updated : 16 Mar 2015 09:34 AM

டிராபிக் ராமசாமி கைதுக்கு எதிர்ப்பு: ஆய்வாளருக்கு பூங்கொத்து கொடுத்து கண்டனம்

டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஆய்வாளருக்கு பூங்கொத்து கொடுத்து கண்டனம் தெரிவித்தனர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்.

சென்னையில் சாலையோரமாக வைக்கப்படும் பேனர்களை தனி ஆளாக நின்று அகற்றி பரபரப்பை ஏற்படுத்துபவர் டிராபிக் ராமசாமி. தனி நபராக வழக்குப்போட்டு, தமிழகத்தில் பெரும்பாலானவர்களை ஹெல்மெட் போட வைத்தவர் இவர். சாலைகளில் போக்குவரத்துக்கு தடையாக இருக்கும் பல விஷயங்களில் தலையிட்டு அதற்கு நல்ல முடிவுகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

கடந்த 10-ம் தேதி புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளித்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், டிராபிக் ராமசாமி கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை தாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தி.நகர் அருகே பாண்டிபஜாரில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை, கடந்த 12-ம் தேதி அதிகாலையில் வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் 14-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு கயல்விழி முன்பு ஆஜர்படுத்தி, புழல் சிறையிலும் அடைத்தனர். சிறையில் டிராபிக் ராமசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பூங்கொத்து கொடுத்து கண்டனம்

லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் தலைமையில் சுமார் 10 பேர் வேப்பேரி காவல் நிலையத்திற்கு கையில் பூங்கொத்துடன் நேற்று பிற்பகலில் சென்றனர். அவர்கள் வந்ததற்கான காரணத்தை அங்கிருந்த காவலர்கள் விசாரித்தபோது, டிராபிக் ராமசாமியை கைது செய்த காவல் ஆய்வாளர் பிரபுவை பூங்கொத்து கொடுத்து வாழ்த்துவதற்காக வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். விசாரித்தபோதுதான் அவர்கள் பூங்கொத்து கொடுத்து கண்டனம் தெரிவிக்க வந்தது தெரிந்தது.

இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், "நசரேத்பேட்டையில் எனது லாரியை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அங்குள்ள காவல் ஆய்வாளரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு, சாலையில் நின்று பேசியதற்காகவே 78 வயதுக்காரரை கைது செய்து சட்டம்-ஒழுங்கை காப்பாற்றி இருக்கிறார்.

லாரியில் அதிக பாரம் ஏற்றுவதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக வழக்கு தொடர்ந்து, எங்களின் பிரச்னைகளுக்காக போராடியவர் டிராபிக் ராமசாமி.

போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து அவர் தொடர்ந்த வழக்கு மற்றும் போராட்டங்களால் பொதுமக்களுடன் சேர்ந்து அதிக பலன் அடைந்தவர்கள் நாங்கள். மக்களின் நன்மைக்காக போராடியவரை குற்றவாளிபோல கைது செய்தது கண்டிக்கத்தக்கது. காவல் ஆய்வாளர் பிரபு செய்த தவறை, அவருக்கு மென்மையாக உணர்த்துவதற்காக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பதற்காக வந்தோம். ஆனால் அவர் காவல் நிலையத்தில் இல்லை. இதனால் உதவி ஆய்வாளரிடம் பூங்கொத்தை கொடுத்துவிட்டு வந்து விட்டோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x