Last Updated : 19 Mar, 2015 12:08 PM

 

Published : 19 Mar 2015 12:08 PM
Last Updated : 19 Mar 2015 12:08 PM

இயேசு எனும் முன்மாதிரி

தாங்கள் குருவாக ஏற்றுக்கொண்ட ஒருவர் இப்படிச் செய்வார் என்று அந்தச் சீடர்கள் எதிர்பார்க்கவில்லை. தாம் பிறந்து வளர்ந்த எருசலேமில் தனது பன்னிரெண்டு அப்போஸ்தலர்களுடன் (சீடர்கள்) தங்கியிருக்கிறார் இயேசு. தன் சீடர்களுடன் அவர் இருக்கும் கடைசி இரவு அது.

இரவு விருந்து நடக்கிறது. இயேசு எழுந்து தம் மேலங்கியைக் கழற்றி வைத்தார். அவ்வீட்டின் சேவகன் போல ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்கிறார். ஒர் அகலாமான தாம்பூலம் போன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தமது சீடர்களின் பாதங்களைக் கழுவி, துண்டினால் துடைத்துச் சுத்தப்படுத்தினார். பன்னிரெண்டு பேருக்கும் இதைச் செய்த பின் மேலங்கியை அணிந்துகொண்டார்.

நாம் அவருக்குச் செய்திருக்க வேண்டிய இந்தப் பணிவிடையை மாணாக்கராகிய நமக்கு ஏன் செய்தார் என்று அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கும்போது அவர்களுக்குக் காரணத்தைக் கூறினார் இயேசு.

“நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும். நான் உங்களுக்குச் செய்தபடியே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இந்த முன்மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா. 13:12-15).

இப்படியொரு வேலையைச் செய்ய முன்வந்ததன் மூலம் தம்மைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ளத் தம்முடைய சீடர்களுக்கு அவர் வழிகாட்டினார். அந்தப் பாடம் அவர்களுடைய மனதில் நீங்கா இடம்பெற்றது. பணிவுடன் நடந்துகொள்ள அவர்களுக்கு ஊக்கமளித்தது.

முதல் தடவை அல்ல!

பணிவுடன் நடந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு வலியுறுத்திச் சொன்னது அது முதல் தடவை அல்ல. தனக்குப் பின்னர் தனது இறைப் பணியைத் தொடர வேண்டும் என்றே தன்னிடம் சீடர்களாகச் சேரத் துடித்த நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து இந்தப் பன்னிருவரைத் தேர்வு செய்திருந்தார். ஆனால் அவர்களும் மனிதர்கள்தானே! தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை அவர்களுக்கு மத்தியில் தலைதூக்கியது.

நம்மைவிடப் பெரியவனாக இருக்கும் கடவுளுக்கு நாம் குழந்தைகள் என்பதை அவர்களுக்கு குறிப்பால் உணர்த்த விரும்பினார் இயேசு. இதனால் ஒரு சிறுபிள்ளையைத் தம் பக்கத்தில் அழைத்து நிறுத்தி, “இந்தச் சிறுபிள்ளையை என் பெயரை முன்னிட்டு ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான். உங்கள் எல்லாருக்குள்ளும் யார் தன்னைச் சிறியவனாக நடத்திக்கொள்கிறானோ அவனே உயர்ந்தவனாக இருப்பான்” (லூக்கா: 9:46) என்று சீடர்களைப் பார்த்துச் சொன்னார்

தன் சீடர்களிடம் பாகுபாடில்லாமல் நடந்துகொண்டார். அவர்களிடம் அளவுக்கதிகமாக அவர் எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பாராட்டினார், ஊக்கப்படுத்தினார். அவர்கள் தங்களைத் தகுதியற்றவர்களாக உணரும்படி செய்யவில்லை. அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை.

அடக்கி ஒடுக்கவும் இல்லை. தம்மிடம் நெருங்கி வந்தால், தம் போதனைகளைக் கடைப்பிடித்தால் அவர்கள் புத்துணர்ச்சி அடைவார்கள் என்று உறுதியளித்தார். காரணம், அவருடைய நுகம் மென்மையாகவும், அவருடைய சுமை லேசாகவும் இருந்தது. அதனால் ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என எல்லோரும் அவரிடம் சகஜமாகப் பழகினார்கள்.

அவரைப் பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் பணிவுக்கு, மனத் தாழ்மைக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த அவருடைய உதாரணத்தை கவனமாய்ச் சிந்திக்க வேண்டிய தருணம்தான் இந்தத் தவக்காலம். ஒருவர் மனத்தாழ்மை காட்டுவது அவருக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கிறது. அதற்கு இயேசுவின் மரணமே சாட்சியாக இருக்கிறது.

இயேசு “மனிதராக வந்தபோது சாகுமளவுக்கு, ஆம், சிலுவை எனும் கழுமரத்தில் சாகுமளவுக்கு, தம்மையே தாழ்த்திக் கீழ்ப்படிதலைக் காட்டினார்” என்றும் பவுல் எழுதினார். கழுமரத்தில் உயிர்த் தியாகம் செய்ததன் மூலம் மனிதகுல மீட்புக்கான விலையாக தம் உயிர்ப் பலியை அளித்தார். (மத். 20:28) அவருடைய மீட்புப் பலி, கடவுளது நீதிக்கு இசைய முழுமையற்ற மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், என்றென்றும் வாழும் வாய்ப்பை அவர்கள் பெறுவதற்கும் வழிசெய் திருக்கிறது.

அதேபோல உழைப்பு ஒன்றையே தங்கள் வாழ்வின் மூலாதாரமாகக் கொண்ட எளிய மக்களைத் தன்னிடம் வருமாறு அழைத்தார். உழைத்துக் களைத்து, பெருஞ்சுமை சுமந்த எல்லோரையும் அன்பாக அழைத்தார். “நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்” (மத்தேயு: 11:28) என்று சொன்னார்.

பார்வையற்ற பிச்சைக்காரர்கள்

சாதாரண மக்கள் மத்தியில் வாழ்ந்த இயேசு, அவர்களுடைய பாவப்பட்ட நிலையைக் கண்டு பரிதவித்து அவர்கள்மீது கரிசனை காட்டினார், அவர்களுடைய தேவைகளை அன்பாகப் பூர்த்தி செய்தார். ஒருசமயம், அவர் எரிகோவுக்கு அருகே வந்தபோது பார்வையற்ற இரண்டு பிச்சைக்காரர்கள் பாதையோரம் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் பெயர் பர்திமேயு. மற்றொருவன் பெயர் விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை.

இயேசு தங்களுக்கு இரக்கம் காட்டும்படி அவர்கள் இருவரும் விடாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். அமைதியாக இருக்கும்படி கூட்டத்தார் அவர்களை அதட்டினார்கள். இயேசு அவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி சொன்னார். அவ்ர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்குப் பார்வை அளித்தார். பாவப்பட்ட மக்களிடம் இயேசு தம் தகப்பனைப் போலவே மனத்தாழ்மை காட்டினார், இரக்கம் காட்டினார். “தன்னைத்தானே தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான்” என்று இயேசு தம் சீடர்களிடம் சொல்லியிருந்தார் (மத்தேயு 23:12).

மனித குலத்துக்காகத் தன்னைத் தாழ்த்திக்கொண்டதன் மூலமே இன்று கோடானகோடி மக்களின் இதயத்தில் உயர்ந்து நிற்கிறார் இறைமகன் இயேசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x