Published : 30 Mar 2015 10:06 AM
Last Updated : 30 Mar 2015 10:06 AM

கிழக்கு கடலோர காவல் படையில் நவீன ரோந்து கப்பல் சேர்ப்பு: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது

இந்திய கிழக்கு பிராந்திய கடலோர காவல்படையில் நவீன ரோந்து கப்பல் மற்றும் 2 நவீன படகுகள் சேர்க்கப்பட்டன.

இந்திய கிழக்கு பிராந்திய கடலோர காவல்படையில் நவீன ரோந்து கப்பல் ஐசிஜிஎஸ் அனாக் மற்றும் நவீன ரோந்து படகுகள் சி-430, சி-417 ஆகியவற்றை சேர்க்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஏ.கே.சிங் இதில் கலந்துகொண்டு ரோந்து கப்பல் மற்றும் படகுகளை கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ஏ.கே.சிங் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா சந்தித்து வரும்அச்சுறுத்தல்களை சமாளிக்க கடலோர பாதுகாப்பை பலப் படுத்த வேண்டியுள்ளது. இதற்காக கிழக்கு பிராந்திய கடலோர பாதுகாப்புக்காக ஒரு ரோந்து கப்பலும், இரு ரோந்து படகுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இந்த கப்பல் அன்றாட ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி எஸ்.பி.ஷர்மா பேசியதாவது:

50 மீட்டர் நீளமுடைய ஐசிஜிஎஸ் அனாக் கப்பல் அதிவேகமாக ரோந்து செல்லக்கூடியது. 290 டன் எடையை இழுத்துச் செல்லும் திறனையும் பெற்றுள்ளது. இந்த கப்பல் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. சி-430, சி-417 ஆகிய படகுகள் 27.80 மீட்டர் நீளமுடையவை. மணிக்கு 45 கடல் நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. 101 டன் எடையை இழுத்துச் செல்லும் திறன் பெற்றவை. இவை எல் அண்டு டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இவற்றின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடலோர கண்காணிப்பு, நடுக் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x