Published : 28 Feb 2015 08:17 AM
Last Updated : 28 Feb 2015 08:17 AM

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: வருமான வரி விலக்கு வரம்பு உயருமா?

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) நிதிப்பற்றாக்குறையை 3.6 சதவீதமாக குறைப்பது நிதியமைச்சரின் முக்கிய இலக்காக இருக்கும். இந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை 4.1 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘மேக் இன் இந்தியா’என்பது மோடி அரசின் முக்கிய முழக்கமாக உள்ளது. எனவே உள்நாட்டில் முதலீட்டை அதிகரிக்க பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அறிவிப்புகளும், பெரிய நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கச் செய்யும் சலுகைகளும் இருக் கும். உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில் துறையினர் தங்களுக்கு சாதக மான அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

முக்கியத்துவமும், முன்னுரிமையும்

மோடி அரசின் முக்கிய திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. ராணுவம், உயர் கல்வி, விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஊரக வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, நவீனமயமாக்கல் போன்றவற்றுக்கு பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மானியங்கள் குறையும்

பட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் பொருளாதார சீர்திருத்தம் என்றால் அது மானியத்தை குறைப்பது, சலுகைகளை நிறுத்துவது என்றே அறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சில அதிர்ச்சி தரும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெற வாய்ப்புள்ளது.

பொது பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் மீதான மானியத்தை 20 சதவீதம் குறைப்பது, ரூ.10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு காஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்வது, பல்வேறு மானியங்களை வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையை கொண்டு வருவது போன்ற அறிவிப்புகளும் இடம் பெறலாம்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. எனவே, அதுபோன்ற அறிவிப்புகளுக்கு வாய்ப்புள்ளது.

அரசியல் காரணங்கள்

பட்ஜெட்டை இறுதி வடிவம் செய்ததில் அரசியல் காரணங்களும் முக்கிய இடம் பெற்றிருக்கும். ஏனெனில், மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு உடனடியாக நடைபெற்ற மாநில பேரவைத் தேர்தல் களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி களை குவித்தது. ஆனால், சமீபத்தில் டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக எதிர்பாராத பின்னடைவை சந்தித்தது. விரைவில் பிஹார் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பட்ஜெட் அறிவிப்புகளில் அரசியல் கண்ணோட்டமும் பிரதிபலிக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x