Published : 03 Feb 2015 01:14 PM
Last Updated : 03 Feb 2015 01:14 PM

அழகிய டெல்லி: 270 அம்சங்களுடன் பாஜக வாக்குறுதிகள்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தொலைநோக்கு அறிக்கை வெளியிடப்பட்டது.

டெல்லியில் பிப்ரவரி 7-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் அர்விந்த் கேஜ்ரிவால், பாஜக சார்பில் கிரண் பேடி, காங்கிரஸ் சார்பில் அஜய் மக்கான் என மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆம் ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், பாஜக ஏற்கெனவே அறிவித்ததுபோல் தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கை வெளியீட்டு விழாவில் டெல்லி பாஜக முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, பாஜக மூத்த தலைவர்கள் ஹர்ஷவர்தன், வி.கே.மல்ஹோத்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாதயா தொலைநோக்கு அறிக்கையை வெளியிட்டார்.

அறிக்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்து முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி எடுத்துரைத்தார்.

பாஜகவின் தொலைநோக்கு அறிக்கை: 2015-ல் இருந்து சில துளிகள்:

1. பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. அரசாட்சியில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படும்.

3. முதல்வர் அலுவலகத்துடன் அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் எப்போதும் இணைந்திருக்க வழிவகை செய்யப்படும்.

4. டெல்லியில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கப்படும்.

5. மக்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம். எனவே மாதந்தோறும் 'தில் கி பாத்' என்ற பெயரில் ரேடியோ மூலம் டெல்லிவாசிகளுக்கு அரசு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். 30 நாட்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.

6. டெல்லி சுத்தமான, அழகான, சர்வதேச தரத்திற்கு இணையான நகராக மாற்றப்படும்.

7. டெல்லி அரசு மத்திய அரசுடன் இணைந்து செயல்படும்.

8. மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்ற மக்கள நலத் திட்டங்கள் கண்டறியப்பட்டு டெல்லியிலும் பயன்படுத்தப்படும்.

9. டெல்லியில் வாழ் மக்கள் அனைவருக்கு கட்டாய மருத்துவ காப்பீட்டு வசதி செய்து தரப்படும்.

10. வடகிழக்கு மாநிலத்தவர் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப் பிரிவு துவங்கப்படும். பிரத்யேக தொலைபேசி சேவையும் அளிக்கப்படும்.

பெண்களுக்கு பாதுகாப்பு, டெல்லியை சர்வதேச நகராக மாற்றுவது, வெளிப்படையான ஆட்சி அதிகாரம், தடையற்ற மின்சாரம், வீட்டு வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் கூடிய 270 அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x