Last Updated : 17 Dec, 2014 09:56 AM

 

Published : 17 Dec 2014 09:56 AM
Last Updated : 17 Dec 2014 09:56 AM

ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 2

மூன்று இனங்களைப் பற்றிப் பார்த்தோம். மற்றொரு இனமான உஸ்பெக் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆப்கானிய மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ளவர்கள். உஸ்பெக்குகள் இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். துருக்கியர்களைப் போல காட்சியளிக்கிறார்கள். பிற ஆப்கானிய இனத்தவர்களைவிட அதிக வெளுப்பாக காட்சியளிக்கிறார்கள். இவர்களும் மங்கோலிய மூதாதையர்களைக் கொண்டவர்கள்.

ஆனால் இப்போதைக்கு எந்த ஆப்கானியரின் உடல் பாகங் களைக் கொண்டும் அவரது இனத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. காரணம் காலப் போக்கில் நடைபெற்ற கலப்புத் திருமணங்கள். ஆனால் தலைப்பாகைகள் இன்னமும் இந்த இனங்களை தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பல வட்டாரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளூர் தலைவர். ஆங்கிலத்தில் Warlords. தாதாக்கள் என்று குறிப்பிட்டாலும் தப்பில்லை. இவர்களை ஆப்கானிஸ்தானின் கலவர ஊற்றுகள் எனலாம்.

1747 இதுதான் நவீன ஆப்கானிஸ்தான் உருவான ஆண்டு. இதற்கு மன்னராக முதன் முதலில் பொறுப்பேற்றவர் அகமது ஷா. அப்படி என்ன இவருக்கு சிறப்பு? காரணம் உண்டு.

இந்தியாவின் செல்வங்களை (மயிலாசனம், கோஹினூர் போன்றவை) கொள்ளயடித்துச் சென்றவர் பாரசீக (இன்றைய இரான்) மன்னர் நாதிர் ஷா. அவர் கொலை செய்யப்பட்ட வுடன் அவரது ராணுவ அதிகாரி யாக இருந்த அகமது ஷா பாரசீகத்திலிருந்து வெளியேறி னார், (ஆப்கானிஸ் தானிலுள்ள) காந்தஹாரை அடைந்தார். கூடவே கோஹினூர் உட்பட மதிப்புமிக்க செல்வங்களை அள்ளிச் சென்றார்.

யாரை அடுத்த காந்தஹார் பகுதியின் பஷ்டூன் இனத்தலை வராகத் தேர்ந்தெடுப்பது என்று அந்தக் குழு யோசித்தது. அனைவரும் தேர்ந்தெடுத்தது அகமது ஷாவைத்தான். திறமையான போர்வீரர். ஆயிரக் கணக்கான குதிரைப்படை வீரர்கள் இவரிடம். கொள்ளையடித்த சொத்துகள் வேறு. பிறகென்ன? தலைவரானார்.

அகமது கான் என்று இருந்த தன் பெயரை அகமது ஷா என்று மாற்றிக் கொண்டார் (ஆப்கானிஸ் தானில் மன்னர்களை ஷா என்று அழைப்பது வழக்கம்).

‘’இனி பாரசீகத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆப்கானிஸ்தான் தனி நாடு’’ என்று முழக்கம் செய்தார். பின்னர் கஜினி பகுதியை வசப்படுத்தினார். காபூலை தன் வசம் கொண்டு வந்தார். சிந்து மாகாணமும், சிந்துநதிக்கு மேற்கே இருந்த வட இந்திய பரப்புகளும் தானாகவே அவர் கைக்கு வந்து சேர்ந்தன. (தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அளிக்கப்பட்ட தானம்).

நாதிர்ஷாவின் பேரன் ஷாருக்கான். ஹெராத் நகரை இவன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடனும் போர் தொடுத்தார் அகமது ஷா. ஒருவருட முற்றுகை. பல உயிர்கள் பிரிந்தன. இறுதி வெற்றி அகமது ஷாவுக்குதான்.

துருக்மென், தஜிக், ஹசாரா, உஸ்பெக் ஆகிய பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களும் அகமது ஷாவின் ஆளுகைக்கு உட்பட்டது. (இப்போது புரிகிறதா இந்த இனங்களின் தொடர் விரோதத்தின் வேர் எது என்று?).

அகமது ஷாவின் பார்வை அடுத்ததாக இந்தியாவின் பக்கம் திரும்பியது. பலமுறை படையெடுத்தார். காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் டில்லியை முற்றுகையிட்டார். ஏற்கனவே அங்கு ஒளரங்கசீப் காலம் முடி வடைந்து மொகலாயப் பேரரசு தேய்பிறையில் இருந்தது. ‘‘என் தலைமையை அங்கீகரியுங்கள் உங்கள் ஆட்சியைத் தொடருங்கள்’’ என்று அவர் கூறியதை மொகலாயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காலப்போக்கில் மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை பூனாவில் நிலை நிறுத்திக் கொண்டு வடக்கிலும் பரப்பத் தொடங்கினார்கள். அகமது ஷா 1757ல் மராத்தியர்களுடன் போரிட்டார். ஆனால் மராத்திய சேனை வென்றது. ‘’மராத்தியர்கள் மீதான இஸ்லாமியர்களின் புனிதப் போர் தொடங்கியது’’ என்று அலறினார் அகமது ஷா.

மீண்டும் 1761ல் பானிபட் ஒரு கடும் போரைச் சந்தித்தது. இம்முறை பஷ்டூன்கள் மட்டுமல் லாமல் பிற இஸ்லாமியப் பிரிவினரும் அகமது ஷாவிற்குப் பின்னால் அணிவகுத்தார்கள். மராத்திய ராணுவம் தோல்வி கண்டது.

ஆனால் சீக்கியர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். பஞ்சாபின் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். அகமது ஷா உக்கிரம் அடைந்தார். சீக்கியர்களின் பகுதியாக இருந்த லாகூரை சின்னாபின்னமாக்கினார். அமிர்தசரஸில் தங்கியிருந்த சீக்கியர்களைக் கொன்று குவித் தார். அவர்கள் புனிதத்தலங் களில் பசுவின் ரத்தத்தை ஊற்றச் செய்தார். கொடுங்கோன்மையின் சிகரமாகவே மாறினார். மீண்டும் காந்தஹாருக்குத் திரும்பினார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் பஞ்சாபை மீண்டும் சீக்கியர்கள் மீட்டுவிட்டனர்.

காந்தஹார்தான் தன் சாம்ராஜ் யத்தின் தலைநகர் என்பதில் மிக நிச்சயமாக இருந்தார் அகமது ஷா. ஆனால் அவர் இறந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காபூலை அந்த ராஜ்யத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர் அவரது வாரிசுகள்.

அகமது ஷா இறந்ததும் அவரது இரண்டாவது மகன் தைமூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் இறந்தவுடன் வாரிசு உரிமை போர் உச்சத்தை அடைந்தது. தைமூரின் அத்தனை மகன்களும் அரச பதவிக்கு ஆசைப்பட்டார்கள். இவர்களில் தன் பலம் காரணமாக ஐந்தாவது மகன் ஜமான் ஷா ஆப்கானிஸ்தானின் மன்னரானார். தனக்கு உதவியாக இருந்த பயின்தா கான் என்பவர் தனக்குத் துரோகம் செய்வதாக அறிந்து கொண்டவுடன் அவரைக் கொன்றார் ஜமான்.

பயின்தாகனின் மகன் இரானுக்குத் தப்பியோடி அங்கு வசித்த மகமூது ஷாவுக்கு ஆதரவு தெரிவித்தான். இந்த மகமூது, ஜமானின் அண்ணன்தான். அவன் மீண்டும் படையெடுத்து தன் தம்பியைத் தோற்கடித்து மன்னன் ஆனான். சீக்கிரமே அவனது பிற சகோதரர்கள் அவனைப் பதவியிலிருந்து கீழிறக்கினர். ஷுஜா ஷா என்ற தம்பி ஆட்சியைக் கைப்பற்றினான்.

1809 ஜூன் 6 அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஷுஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘‘எந்த வெளிநாட்டுப் படை இந்த இரு நாடுகளில் ஒன்றில் நுழைந்தாலும் மற்றொரு நாடு அதை வெளியேற்ற வேண்டும்’’ என்றது அந்த ஒப்பந்தம். இதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் செய்து கொண்ட முதல் ஒப்பந்தம். காட்சிகள் மாறத்தொடங்கின.

(இன்னும் வரும்..)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x