Published : 27 Dec 2014 10:58 AM
Last Updated : 27 Dec 2014 10:58 AM

புனைவுகள், நம்பிக்கைகளே வரலாறு ஆகாது: ஆர்வலர்களின் போக்கை எச்சரிக்கும் தமிழ்ப் பல்கலை. பேராசிரியர்

வரலாற்று ஆய்வாளர்கள், கல்வெட் டுகளின் உண்மைத் தன்மைகளை முழுவதுமாக அறியாமல், அவற்றின் செய்திகளை அரை குறையாக அறிந்து, தங்களின் யூகங் களையும் இணைத்து மக்களிடம் தவறான நம்பிக்கைகளை வளப் படுத்தி வருகின்றனர் என்கிறார் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் முனைவர் சு.ராசவேலு.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’ விடம் மேலும் தெரிவித்தது:

அண்மையில் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவில் சொல்லப்பட்ட செய்தி களே இதற்கு சிறந்த உதாரணம்.

சோழப் பேரரசன் ராஜராஜனின் மகன் முதலாம் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அவர் இறந்தபின், அந்த இடத்தில் அமைக்கப்பட்ட ‘பள்ளிப்படை’ உள்ள ஊர் குறித்து இதுவரை உறுதியான ஆதாரங் கள் கிடைக்காத நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் ‘பிரம்மதேசம்’ என்ற ஊரில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் கோயிலே ராஜேந்திர சோழனின் பள்ளிப்படை எனப் பெரும்பாலான வரலாற்று ஆர்வலர் கள் தெரிவிக்கின்றனர். இக்கோயி லின் கல்வெட்டில் அத்தகவல் உள்ள தாகவும் அவர்கள் குறிப்பிடு கின்றனர்.

இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 92 கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் காலத்தால் முற்பட்டது பல்லவ மன்னன் கம்பவர்மனின் கி.பி.866-ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு.

இக்கல்வெட்டுகளில் ‘ராஜமல்ல சதுர்வேதி மங்கலத்து திருப்போந்தைப் பெருமானடிகள்’ எனக் கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர, ராஜேந்திர சோழனுக்கு முற்பட்ட சோழ மன்னர்களின் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. ராஜேந்திர சோழன் இறப்புக்குப்பின் எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயி லாக அது இருந்திருந்தால் அம் மன்னனுக்கு முன் ஆட்சி செய்த பல்லவர், முற்காலச் சோழர் கல்வெட்டுகள் இக்கோயிலில் இடம்பெற வாய்ப்பில்லை.

இக்கல்வெட்டில், ராஜேந்திர சோழன் உயிர் நீத்தபின் அவனது கல் லறையான பள்ளிப்படை இருந்த இடத்தில் அவனது மனைவி வீரமாதேவி உடன்கட்டை ஏறியுள்ளார். அதற் காக பிரம்ம தேசத்தில் வீரமாதேவி யின் உடன் பிறந்த சகோதரர் மதுராந்தகன் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார் என்ற செய்தியே இக்கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளது.

இறந்த ராஜேந்திர சோழனுக்கு ஏதோ ஒரு ஊரில் எழுப்பப்பட்ட பள்ளிப்படையில், அவரது மனைவி உடன்கட்டை ஏறுகிறார். அவரது ஆன்மா சாந்தி பெற பிரம்ம தேசத்தில் தண்ணீர் பந்தல் அமைக் கப்படுகிறது. அது, அன்றைய வழக்கம்.

இக்கோயிலில் உள்ள ராஜேந்திர சோழனின் மகன் முதலாம் ராஜாதி ராஜனின் 1044-ம் ஆண்டு கல்வெட்டே ஆர்வலர்களால் தவ றாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகள், புராணக் கதைகள், செவிவழிச் செய்திகள், மிகை ஆர்வத்தால் ஏற்படும் உந்துதல் போன்றவை வரலாற்றை அறிவதற் கான வழியே தவிர, அவை மட்டுமே உண்மையான வரலாறாகி விடாது. நன்கு ஆய்வு செய்த பின்னரே வரலாற்றை எழுத வேண்டும். கல்வெட்டுகள் உண்மைத் தரவுகளைத் தருபவை. அவற்றைப் புரிந்து, முழுமையாக ஆராய்ந்து வரலாற்றுக்கு வளமை சேர்ப்பதே கற்றறிந்தவர்களின் பணி” என்கிறார் ராசவேலு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x