Last Updated : 02 Dec, 2014 11:41 AM

 

Published : 02 Dec 2014 11:41 AM
Last Updated : 02 Dec 2014 11:41 AM

சாதனையாளர் ரோஸி கிங் - விடாமுயற்சி இருந்தால் ஆட்டிசத்தை வெல்லலாம்!

வசீகரிக்கும் முகமும் புத்திசாலித்தனமான பேச்சும் கொண்ட 16 வயது ரோசி கிங் குழந்தைகளுக்கான எம்மி விருது உட்பட இங்கிலாந்தில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஒருவகை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் ரோஸி. ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘என் ஆட்டிசமும் நானும்’. பிபிசியில் ஒளிபரப்பான இந்தச் சிறப்பு நிகழ்ச்சி பெரிய அளவில் பாராட்டுகளை வாரிக் குவித்தது.

உங்களுக்கு ஆட்டிசம் என்பதை எப்போது அறிந்துகொண்டீர்கள்?

‘நான் அஸ்பர்ஜர் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவள். இது ஆட்டிசத் தில் ஒரு வகை. சிறிய வயதில் கண்டுபிடிக்க முடியாது. யாருடனும் கலந்து பேச முடியாமல் இருக்கும் குறைபாடு. ஒன்பது வயதில் கண்டுகொண்டோம். பிறகு மருத்துவர்களைச் சந்தித்து, முறையாகப் பயிற்சிகளை மேற்கொண்டோம். இன்று நானாகச் சொன்னால்தான் என் குறைப்பாட்டை உங்களால் கண்டுபிடிக்க முடியும். இன்று ஓவியங்கள் வரைகிறேன், கதைகள் சொல்கிறேன், நிகழ்ச்சிகளை வழங்குகிறேன் என்றால் அதற்குக் காரணம் என் பெற்றோர்தான். குறிப்பாக என் அம்மா.’

உலகிலேயே மிக மிக அழகான சந்தோஷமான குடும்பமும் எங்களுடையதுதான். அதேபோல உலகிலேயே மிக மிக சோகமான குடும்பமும் எங்களுடையதுதான் என்று சொல்லும் ரோஸியின் கூற்று உண்மையானது. ரோஸியின் தங்கையும் தம்பியும் ஆட்டிசத்தால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள். எதையும் இழுத்துப் போடுவது, உயரமான இடங்களில் ஏறுவது என்று குறும்புகளின் எல்லையில் இருப்பான் தம்பி. ஒரு வார்த்தைகூடப் பேச முடியாமல் அமைதியாகச் சிரித்துக்கொண்டிருப்பாள் தங்கை.

‘ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடைய பெற்றோர்கள் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. குறைபாடுடைய மூன்று குழந்தைகளை இருபத்தி நான்கு மணி நேரமும் கவனித்துக்கொள்வது என்றால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? வீட்டைச் சுத்தம் செய்வதே பெரும் வேலையாக இருக்கும் அம்மாவுக்கு. ஒருநாள் பையில் இருந்த அரிசியை வீடு முழுவதும் இறைத்துவிட்டான் தம்பி.

அம்மா ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தார். பிறகு என்னையும் அழைத்தார். எல்லோரும் தம்பியுடன் சேர்ந்து அரிசியில் விளையாடி விட்டு, வீட்டைச் சுத்தம் செய்தோம். வேலையில் இருந்து திரும்பிய பிறகு அப்பா எங்களைக் கவனித்துக்கொள்வார். அம்மாவும் அப்பாவும் தங்களின் மூன்று குழந்தைகள் குறித்து ஒருநாளும் வருத்தப்பட்டதில்லை.’

மூன்று குழந்தை களையும் கவனித்துக் கொள்வதோடு, ரோஸியின் முன்னேற் றத்திலும் அக்கறை செலுத்தி வருகிறார் அவருடைய அம்மா ஷரோன் கிங். தன்னுடைய மூன்று குழந்தைகளையும் வைத்து ஆட்டிசம் குறித்த கதைப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் ஷரோன். அந்தக் கதைக்குப் படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறார் ரோஸி. படிக்க வைப்பது, எழுத வைப்பது, பேச வைப்பது, நடிக்க வைப்பது என்று ரோஸியின் ஒவ்வொரு செயலிலும் ஷரோனின் பங்களிப்பு இருக்கிறது.

ஆட்டிசம் குறித்த புரிதல்கள் இப்போது இருக்கிறதா?

‘ஓரளவு விழிப்புணர்வு வர ஆரம்பித்திருக்கிறது. இப்போதும் எங்களைப் பார்க்கும் சிலர், மிக மோசமான வார்த்தைகளில் பேசுவதுண்டு. அவர்களைக் கண்டு எனக்கு வருத்தமில்லை. அவர்கள் பக்குவமடையாத மனிதர்கள். இன வேற்றுமை, பாலினப் பாகுபாடு, குறைபாடுள்ள மனிதர்களை நடத்தும்விதங்களில் கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். அப்படி மாற்றம் வந்தால்தான் நாம் நாகரிகச் சமூகத்தில் வாழ்கிறோம் என்று அர்த்தம்.’

ரோஸியின் லட்சியம்?

‘தொழில் முறை நடிகையாக வர வேண்டும் என்பதும் சிறந்த கதை சொல்லியாக வேண்டும் என்பதும் தான் என் லட்சியம். வாழ்நாள் முழுவதும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை சமூகக் கடமையாக நினைக்கிறேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளைப் பெற்ற என் பெற்றோருக்குச் சின்ன ஆறுதல் என்னுடைய வெற்றி. இங்கிலாந்தில் நூற்றுக்கு ஒருவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் என் அம்மாவின் புத்தக விற்பனையில் இருந்து கிடைக்கும் வருமானத்தைச் செலவிடுகிறோம். நானும் ஆட்டிசம் குறித்த புத்தகத்தை இப்போது எழுதி வருகிறேன்.’

குழந்தைக்கு ஆட்டிசம் என்றால் என்ன செய்ய வேண்டும்?

‘சில வகை ஆட்டிசத்தை எவ்வளவு வேகமாகக் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் குணப்படுத்திவிட முடியும். ஆட்டிசம் என்று முத்திரைக் குத்தி, ஒரு சின்ன டப்பாவில் போட்டு எங்களை அடைத்துவிட வேண்டாம். மாபெரும் விஞ்ஞானிகள் ஐசக் நியூட்டனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான். பின்னாளில் உலகையே புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள். பெற்றோருக்கு நான் சொல்வது இதைத்தான் : ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்; நாளை உங்கள் குழந்தையும் ஒரு விஞ்ஞானியாகலாம்… குறைந்தது ரோஸியாக வரலாம். பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் ஆட்டிசத்தை வெல்லலாம்!’​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x