Published : 15 Oct 2014 10:58 AM
Last Updated : 15 Oct 2014 10:58 AM

குருதி ஆட்டம் 5 - உஸ்தாத் அப்துற் றஹீம்

ஊரே, விழுந்து விழுந்து சிரித்தது.

தெரு நெடுக, அவரவர் வீட்டு வாசலில் நின்று கைகொட்டிச் சிரித் தார்கள்.

‘‘லோட்டா’ப் பயலுக்கு என்னாச்சு?’

‘அவனுக்கு ஏன் இந்த லவி?’

பெண்கள், விடிகாலை வேலைகளை எல்லாம் போட்டுவிட்டு, வாசலுக்கு வந்து நின்று சிரித்தார்கள்.

‘லோட்டா’, எதைப் பற்றியும் கவலைப் படாமல் ‘தமுக்கு’ அடி தப்பிவிடக் கூடாது என்பதிலேயே குறியாய் இருந்தான்.

‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’

அடிக்கிற கைத் தோதுக்கு ஏற்ப தலையை ஆட்டினான்.

தூக்கக் கலக்கத்தோடு கூடிய சின்னப் பயலுகள், வாயோரம் ஓடிக் காய்ந் திருந்த கொடுவாயைக் கூட கழுவாமல், ‘லோட்டா’வை அனுசரித்து நடந்து போனார்கள்.

‘‘லோட்டா’ அண்ணனுக்கு என்னாச்சு!’’ ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொண்டார்கள்.

குசும்புக்கார சிறுவன் ஒருவன், ‘லோட்டா’வின் பின்புறம் தட்டினான். ம்… ஹூம்…‘லோட்டா’வுக்கு எதுவும் சுனைக்கலே.

‘ஊருக்குள்ளே போயி… நீதான் ‘தமுக்கு’அடிக்கணும்,’ என உடை யப்பன் உத்தரவு போட்டதும், ஓட்டமாய் ஓடிப் போய் தமுக்கு அடிக்கிற உமையணனிடம் கெஞ்சிக் கூத்தாடி, ஒரு தமுக்கு வாங்கினான். உமையணனும் உடனே ஒத்துக்கிறலே. செவல்பட்டி கள்ளுத் தண்ணி ரெண்டு முட்டி உள்ளே இறங்கி, பின் மண்டையில் ‘சுரீர்ர்…’ எனப் பிடிக்கவும்தான் வழிக்கு வந்தான்.

“ஏஞ்… சாமி! ஒங்களுக்கு இந்த லவி?” நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறு தமுக்கை இடுப்பில் கட்டிவிட்டான். தமுக்கு அடிக்கிற தோலை எப்படி பிடிப்பது? எப்படி அடிப்பது என்பதை உமையணன்தான் சொல்லிக் கொடுத்தான்.

‘கிட்டடி… கிட்டடி…’ தெரு கூடும் முச்சந்தியில் அடியை நிறுத்தினான் ‘லோட்டா’. ஊர்க் கண்ணெல்லாம் ‘லோட்டா’ மீதிருந்தது.

“சேவிக்கிறேன் சாமியோவ்! ரெம்பக் காலமா… நின்னு போயிருக்கிற நம்ம இருளப்பசாமி கோயில் கொடை, குதிரை எடுப்புத் திருவிழாவை இந்த வருஷம் சீரும் சிறப்புமா கொண் டாடணும்கிறது… அரண்மனை உத்தரவு. பத்து நாள் திருவிழா பத்தி பேசி முடிவு பண்ண, இன்னைக்கு ராத்திரி… அரண்மனை வாசல்லே ஊர் கூடணும்கிறது அரண்மனை உத்தரவு சாமியோவ்…”

‘கிடுகிடு… கிடுகிடு… கிடுகிடு… கிட்டடி… கிட்டடி…’

பெரியவர் நல்லாண்டி, கையருகில் அமர்ந்திருந்தவனின் காதை கடித்தார். “உடையப்பன் பேரை ஒரு தடவை உச்சரிச்சதுக்கு…‘லோட்டா’ப் பயலுக்கு தண்டனையைப் பார்த்தியா?”

‘லோட்டா’ அடிக்கும் ‘தமுக்கு’சத்தம், அடுத்த தெருவுக்குள் நுழைந்தது.

ஆப்பநாட்டு அரியநாச்சி, மலேசியப் பெண்களின் உடை தரித்திருந்தாள்.

அழுத்தமான பல வண்ணங்களில், பெரிய பெரிய பூக்கள் போட்ட முரட்டுக் கைலியை, கெண்டைக்கால் தெரியக் கட்டி இருந்தாள். இடுப்புக்கு மேல், மேனி மறைய சாம்பல் நிற ‘குப்பாயம்’ அணிந்திருந்தாள். இரண்டு பக்கமும் தாராளமாக கை நுழையும் அளவிலான ஜேபிகளுடன், முழுக் கை மறைக்கும் குப்பாயம். மெல்லிய வண்ணத் துணியை நெற்றியோடு தலை மறைத்து, பின் மண்டையில் முடிச்சு இட்டு கட்டி இருந்தாள்.

சமீப நாட்களாக அரியநாச்சியின் மனசு, கெந்தலிப்பாக இருந்தது. இருபது ஆண்டு சபதம் நிறைவேறப் போகும் கெந்தலிப்பு. மனசு புரளும் உற்சாகத்துக்கெல்லாம் மூலக் கருவி, உஸ்தாத் அப்துற் றஹீம்.

சேதுநாட்டு பரமக்குடிக்கு அருகில் உள்ள நயினார்கோவில் கிராமம்தான் அப்துற் றஹீமின் பூர்வீக மண். இந்துக்களான மூதாதையர், பினாங்குத் தீவுக்கு பிழைக்கப் போய் கள்ளுக்கடை நடத்தியவர்கள். பின்னாளில் இஸ்லாத் தைத் தழுவியவர்கள். நயினார்கோவில் தங்கவேல் தேவரின் பேரன் அப்துற் றஹீம்.

மல்யுத்த வீரனாகக் களமிறங்கிய உஸ்தாத் அப்துற் றஹீம்… வில், வேல், வாள் விளையாட்டுக்களில் மலேசிய மண் முழுக்க கொடிக் கட்டினார். எவராலும் இறக்க முடியாத கொடி.

சொந்த மண்ணில் வஞ்சிக்கப்பட்டு, வாய் பேச முடியாத ஊமைச் சிறுவ னாக மலேசியக் காட்டில் வந்திறங்கிய துரைசிங்கத்தின் மேல் அப்துற் றஹீமுக்கு பூர்வீக ரத்த பாசம். சகல போர்க் கலைகளையும் கற்றுத் தந்து, எங்கும் தோற்காத ஆயுதமாக புடம் போட்டு, அத்தை அரியநாச்சியின் கையில் ஒப்படைத்தார்.

“அரியநாச்சி… திருப்திதானே?”

அரியநாச்சிக்குப் பேச்சு வரவில்லை. உஸ்தாத்தின் முன் மண்டியிட்டு, கையெடுத்துக் கும்பிட்டாள்.

அரியநாச்சியின் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் அப்துற் றஹீம்.

நான்கு அடி தள்ளி நின்ற துரைசிங் கத்தை ஏறெடுத்துப் பார்த்தார் உஸ்தாத். கடலின் அடி ஆழத்தை கடைந்து, சுற்றிச் சுழன்று கிளம்பப் போகும் சூறாவளி போல் தெரிந்தான். மனதுக்குள் சிரித்தவர், வாய்விட்டுச் சொன்னார்.

“உன்னை வெல்ல… இனியொருவன் பிறக்கணும்!”

அரியநாச்சியின் பக்கம் திரும்பினார்.

“அரியநாச்சி… பயண ஏற்பாடுகள் எல்லாம் முடிந்ததா?”

“நாளைக்கு… கப்பல் கெளம்பு துண்ணேன்” என்றவள், கவிழ்ந்தவாறு தன் இடுப்பில் செருகி இருந்த கத்தியை உறை நீக்கி ஊருவினாள்.

இடுப்புக் குடத்தோடு, ஓடை நீர் அள்ளப் போய்க் கொண்டிருந்தாள் செவ்வந்தி. காட்டுப் பாதை என்றாலும் கால் பழகிய பாதை. வனப் பரப்பில் கண் அலைய, ஓடை நோக்கி கால்கள் தானே போகும். ஆனால் இன்று, கண் பிரியாமல் தடம் பார்த்து நடந்து போனாள். இனம் புரியாத சந்தோஷம் உள்ளுக்குள் இழை யோடிக் கொண்டிருந்தது. தகப்பன் தவசியாண்டியிடம் இருந்து தொற்றிக் கொண்ட சந்தோஷம்.

நேற்று இரவு குடிசையை விட்டு எங்கோ போய் திரும்பிய தவசியாண்டி, குதியாய் குதித்தான்.

“என் சிங்கம் வருது… என் சிங்கம் வருது!”

வனம் கீறி நடந்து போகும் செவ் வந்திக்கு ஒண்ணும் புரியலே. தகப்பன் தவசியாண்டி, இவ்வளவு சந்தோஷமாய் இருந்து ஒருநாளும் பார்த்ததில்லே.

‘அப்பாவோட சிங்கம்… யாரு?’

‘அவரோட குல தெய்வம்… யாரு? அந்தக் குல தெய்வத்தை கொன்ன… எதிரி யாரு?’

கேள்வி கேட்கவும் பதில் சொல்லவும் நாதியற்ற காட்டுக்குள், ஓடை நீர், சல சலத்து ஓடிக் கொண்டிருந்தது.

- குருதி பெருகும்…



எண்ணங்களைப் பகிரிந்துகொள்ள: irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x