Published : 30 Nov 2014 12:45 PM
Last Updated : 30 Nov 2014 12:45 PM

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறுமா சென்னை? - கேரளா பிளாஸ்டருடன் இன்று மோதல்

கொச்சியில் இன்று நடைபெறும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் சென்னை அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்துவிடும்.

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் சிறந்த தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி, இதுவரை 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று அதிக வெற்றிகளைப் பெற்ற அணிகள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ளது.

ஆரம்பம் முதலே அபாரமாக ஆடி வந்த சென்னை அணி, முன்னணி வீரர்களான இலானோ, மென்டோஸா உள்ளிட்டோர் காயமடைந்ததால் பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் கடந்த ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் அணியிடம் படுதோல்வி கண்டது.

மென்டோஸா இந்த சீசனில் இருந்து முற்றிலுமாக விலகிவிட்ட நிலையில், இலானோவும் இந்த ஆட்டத்தில் விளையாட வாய்ப் பில்லை. ஐஎஸ்எல் தொடரில் அதிக கோலடித்திருக்கும் இலானோ, கடைசி லீக் போட்டி வரை விளை யாடமாட்டார் என தெரிகிறது. எனினும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டம் என்பதால் சென்னை வீரர்கள் உற்சாகத் தோடு ஆடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இலானோ, மென்டோஸா இடத்தை நிரப்புவது கடினம் என்பதால் சென்னை அணி கடுமையாகப் போராட வேண்டி யிருக்கும்.

கேரள அணி இதுவரை உள்ளூரில் நடைபெற்ற போட்டியில் தோற்றதில்லை என்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். 15 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கும் கேரள அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று 2-வது இடத்திற்கு முன்னேறுவதிலும், அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்வதிலும் தீவிரமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x