Published : 21 Nov 2014 09:57 AM
Last Updated : 21 Nov 2014 09:57 AM

மணப்பெண் அழகாய் இல்லை என கூறி திருமணத்தன்றே விவாகரத்து: சவுதியில் நடந்த சோகம்

சவுதி அரேபியாவில் அப்படி என்னதான் நடக்கிறது எனத் தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்பு 'வாட்ஸ் அப்' குறுந்தகவலுக்குப் பதில் அளிக்கவில்லை என ஒருவர் தன் மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.

இதைவிட மோசமான ஒரு சம்பவம் சவுதியில் இப்போது நடந்திருக்கிறது. பெண் அழகாய் இல்லை என்று கூறி திருமணம் ஆன நாளிலேயே விவாகரத்து செய்த நிகழ்வுதான் அது!

சவுதியில் ஒரு ஜோடிக்குத் திருமணம் நடைபெறவிருந்தது. அந்த மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் திருமணத்துக்கு முன்பாக நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வழக்கத்தின்படி புகைப்படத்தின் மூலமாகவும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை.

இந்நிலையில், அவர்கள் திருமணம் செய்யும் நாள் வந்தது. திருமணம் நடைபெற்றது. அப்போது மணப்பெண் தன் முகத்தை இஸ்லாமிய வழக்கப்படி மறைத்துக் கொண்டி ருந்தார். அந்த மணமக்களைப் புகைப்படம் எடுப்பதற்காக, மணப்பெண் முகத்திரையை புகைப்படக்காரர் விலக்கச் சொன்னார்.

மணப்பெண்ணும் முகத் திரையை விலக்கினார். அப்போதுதான் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.முதல் முறையாக மணப்பெண்ணை பார்க்கும்போது வரும் சந்தோஷத்திற்குப் பதில் மாப்பிள்ளைக்கு சோகம் ஏற்பட்டி ருக்கிறது. காரணம், அந்தப் பெண் தான் நினைத்தபடி அழகாக இல்லை என்பதுதான்.

உடனே, அந்த மாப்பிள்ளை, மணப்பெண்ணிடம், "நான் நினைத்ததுபோல் நீ அழகாக இல்லை. என்னால் உன்னுடன் வாழ முடியாது. நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்" என்று கூறிவிட்டார்.

உறவினர்கள் பலரும் அவரை சமாதானப்படுத்தினாலும் அந்த மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானவுடன், சமூக வலைதளங்களில் பலரும் ஆவேசமாகக் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x