Published : 13 Sep 2014 02:45 PM
Last Updated : 13 Sep 2014 02:45 PM

அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது: பந்து வீசும் முறை முழுமையான விதிமீறல் என ஐசிசி அறிக்கை

பாகிஸ்தான் சுழற் பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

சயீத் அஜ்மல் பந்து வீசுவது முழுமையான விதிமீறல். அவர் வீசிய பந்துகளில் ஒன்றுகூட விதிகளுக்கு உள்பட்டதல்ல என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பந்தை முறையாக வீசாமல் “த்ரோ” செய்வதாக அஜ்மல் பந்து வீச்சை ஐசிசி தடை செய்தது.

பந்து வீசும்போது 15 டிகிரி வரையே முழங்கையை மடக்கி வீச வேண்டும். ஆனால் அஜ்மல் 15 டிகிரியைத் தாண்டி அதிகமாகவே முழங்கையை மடக்கி வீசியுள்ளார் என்று ஐசிசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிஸ்பனில் அஜ்மலின் பந்து வீச்சு பரிசோதனைக்கு உள்படுத் தப்பட்டது. அதில் ஏறக்குறைய அனைத்து பந்துகளுமே “த்ரோ” என்றே அறிக்கை தெரிவித் துள்ளது.

ஓவர் தி விக்கெட்டில் ஆப் ஸ்பின் வீசும்போது, அஜ்மல் 37 டிகிரி முதல் 39 டிகிரி வரை முழங்கையை மடக்குகிறார். ரவுண்ட் தி விக்கெட்டில் ஆப் ஸ்பின் வீசும்போது அவரது முழங்கை 41 டிகிரி முதல் 42 டிகிரி வரை மடங்குகிறது.

தூஸ்ரா பந்து வீச்சில் 40 டிகிரியும், ரவுண்ட் தி விக்கெட்டில் வேகமாக பந்து வீசும்போது 38 டிகிரியும், ஓவர் தி விக்கெட்டில் வேகமாக வீசும் போது 42 டிகிரியும் அவரது முழங்கை மடங்கு கிறது.

இந்த பரிசோதனையின்போது அஜ்மலை சுமார் 8 ஓவர்கள் வரை பந்து வீசும்படி கேட்டுக் கொள்ளப் பட்டது. அவர் வீசிய பந்துகளில் ஒன்றுகூட விதிகளுக்கு உள்பட்ட தாக இல்லை. ஒரே நேரத்தில் 27 வீடியோ கேமராக்கள் மூலம் வெவ்வேறு கோணங்களில் அஜ்மலின் பந்து வீச்சு படம் பிடிக்கப் பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மருத்துவ அதிகாரி டாக்டர் சோஹைல் சலீமும் இந்த பந்து வீச்சு பரிசோதனையின் போது உடனிருந்தார்.

அஜ்மலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் கையில் அடிபட்டதால் அவர் இவ்வாறு பந்து வீசுகிறார் என்று அவரது தரப்பில் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எனினும் கிரிக்கெட் போட்டியில் ஐசிசி விதிகளுக்கு முரண்பட்ட பந்து வீச்சை அனுமதிக்க முடியாது என்பதால் அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. ஏனெனில் அவர் இனி ஐசிசி-யால் அங்கீகரிக்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் வேண்டுமானால் பங்கேற்க முடியும்.

ஏனெனில் மிகவும் தெளிவாக பந்து வீச்சு ஆய்வு நடத்தப்பட்டு தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது எனவே இதற்கு மேலும் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே எடுத்துவிட்டது.

சாதனைகளுக்கு குறைவில்லை…

இப்போது 37 வயதாகும் அஜ்மல் 2008-ம் ஆண்டில் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். அந்த ஆட்டத்தில் யூசுப் பதானின் விக்கெட்டை வீழ்த்தினார். 2009-ம் ஆண்டில் அவரது பந்து வீச்சு முறை குறித்து நடுவர்கள் சந்தேகம் எழுப்பினர். எனினும் அப்போது அவர் சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் பாகிஸ்தானின் முன்னணி சுழற் பந்து வீச்சாளராக உருவெடுத்தார். 2009, 2010 இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த் தினார்.

2011-ம் ஆண்டில் ஐசிசி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். மிகக்குறைந்த டெஸ்ட் போட்டிகளில் (20) விளையாடி 100 விக்கெட்டுகளை எடுத்து முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்தார். சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டியில் அதிகபட்ச (83) விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையும் இப்போது சயீத் அஜ்மல் வசமே உள்ளது. சர்வதேச அளவில் 30 வயதுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி 100 விக்கெட்டுகளை கடந்த 4-வது வீரர் என்ற பெருமையும் அவரையே சாரும்.

இதுவரை 35 டெஸ்ட் (178 விக்கெட்), 111 ஒருநாள் கிரிக்கெட் (183 விக்கெட்), 63 இருபது ஓவர் (85 விக்கெட்) போட்டிகளில் சயீத் அஜ்மல் விளையாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x