Published : 01 Sep 2014 08:04 PM
Last Updated : 01 Sep 2014 08:04 PM

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒரு வாடாமலர்: ஜெயலலிதா புகழாரம்

திரையுலக வரலாற்றில் சாதனை படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” நவீன தொழில்நுட்பத்துடன் மறு வெளியீட்டில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி கண்டு வெள்ளி விழா கொண்டாடப்படுவதையொட்டி திவ்யா பிலிம்ஸ் ஜி.சொக்கலிங்கம் அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

வாழ்த்துச் செய்தியின் விவரம் வருமாறு:

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும், காலத்தால் அழிக்க முடியாத காவியமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை நேரில் வந்து அழைத்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரை வானிலும், அரசியல் வானிலும் எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு வரலாற்றுச் சாதனை படைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் இணைந்து நான் நடித்த முதல் தமிழ் வெற்றித் திரைப்படமான “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் எண்ணியியல் வடிவில் தயாரிக்கப்பட்டு, மீண்டும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு, வெள்ளி விழாவினை கொண்டாட இருக்கிறது என்ற செய்தி எனக்கு பெருமகிழ்ச்சியினை அளிக்கிறது.

1965 ஆம் ஆண்டே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இன்று வெள்ளிவிழா காணும் அளவுக்கு வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பது, காலத்தைக் கடந்து அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் திரைப்படமாக விளங்குகிறது; லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் திரைப்படமாக திகழ்கிறது என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. புதிய படங்கள் சாதிக்க முடியாததை “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் சாதித்துக் காட்டி இருக்கிறது. தற்போதைய தலைமுறையினரும் இந்தத் திரைப்படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது என் மனம் பூரிப்பு அடைகிறது.

ஒரு திரைப்படம், திரையரங்குகளில் ஒரு வாரம் ஓடினாலே அதனை வெற்றிப் படம் என்று சொல்கின்ற இந்தக் காலத்தில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் 100 நாட்களைக் கடந்து ஓடியதோடு, இன்றைக்கு மறுவெளியீட்டிலும் 175 நாட்கள் ஓடும் அளவுக்கு அதனை மக்கள் கண்டு களிக்கிறார்கள் என்றால், அந்தப் படத்தின் கதை, தரம், அந்தப் படத்தில் பங்கு பெற்றவர்களின் திறமை ஆகியவை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை’ போல் வாடாமல் இருக்கின்ற வாடாமலர் “ஆயிரத்தில் ஒருவன்”.

இந்த விழாவில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்திற்கு இசையமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், திரைப்பட பின்னணிப் பாடகி பி. சுசீலா, வசனகர்த்தா திரு. ஆர்.கே. சண்முகம், நடிகை எல். விஜயலட்சுமி, நடிகை மாதவி ஆகியோர் கௌரவிக்கப்படுகிறார்கள் என்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. இந்தத் திரைப்படத்திற்கு அவர்கள் செய்த திருப்திகரமான பணியை, நிறைவை, நான் இந்தத் தருணத்தில் நினைவுகூர்ந்து அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை தயாரித்து, இயக்கிய இயக்குநர், மறைந்த பி.ஆர். பந்தலு அவர்கள் எனது தந்தையைப் போன்றவர். என் மீது மிகுந்த பாசமும், மதிப்பும் வைத்திருந்தார். தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் என்றென்றும் தங்கள் மனங்களில் நிலைத்து நிற்கக்கூடிய திரைக் காவியங்களை படைத்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. பந்தலு அவர்கள்.தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. பந்தலு அவர்களின் படைப்பிற்கு இன்றளவும் உயிரோட்டம் கொடுக்கும் வகையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தை எண்ணியியல் வடிவில் மறுவெளியீடு செய்து, அந்தத் திரைப்படம் மாபெரும் சாதனை படைக்க காரணமாக இருந்த திரு. பந்தலு அவர்களின் புதல்வி திருமதி பி.ஆர். விஜயலட்சுமி மற்றும் புதல்வன் திரு. பி.ஆர். ரவிசங்கர் ஆகியோருக்கு எனது பாராட்டுகள். அவர்களது பணி தொடர எனது வாழ்த்துகள்.

என்னைப் பொறுத்த வரையில், “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் எனக்கு ஒரு மறக்க முடியாத வாழ்நாள் அனுபவத்தை பெற்றுத் தந்தது. ஏனென்றால், இந்தத் திரைப்படம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நான் நடித்த முதல் தமிழ் திரைப்படம், வெற்றித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அவருடன் பேசுகின்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. நான் அரசியலுக்கு வருவதற்கும் அடித்தளமாக அமைந்த படம் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னால் அது மிகையாகாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடன் அதிகமான, அதாவது 28 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த பெருமையும் என்னையே சாரும்.

மறுவெளியீட்டில் மாபெரும் சாதனை படைத்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளிவிழா குறித்து எனக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தால், இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் நானே நேரில் வந்து பங்கேற்று இருப்பேன். முன்கூட்டியே ஒப்புக் கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக என்னால் நேரில் வந்து கலந்து கொள்ள இயலவில்லை.

திரையுலக வரலாற்றில் முதல்முறையாக மறுவெளியீட்டில் மகத்தான சாதனை புரிந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்தின் வெள்ளி விழா மிகச் சிறந்த முறையில் சீரோடும், சிறப்போடும் அமைய எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, தாங்கள் இன்னும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x