Published : 14 Sep 2014 12:33 PM
Last Updated : 14 Sep 2014 12:33 PM

மாநகராட்சியால் வெட்டப்பட்ட மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி: பசுமைத் தாயகம் நூதன போராட்டம்

விதிகளை பின்பற்றாமல் மரத்தை வெட்டிய சென்னை மாநகராட்சியைக் கண்டிக்கும் விதமாக, மரத்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி பசுமைத் தாயகம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே அபிபுல்லா சாலையில் பசுமைத் தாயகம் சார்பில் நாவல் மரம் ஒன்று பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்டுவந்தது. இதை மாநகராட்சியினர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி வெட்டிவிட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, மரத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில செயலாளர் ரா.அருள் தலைமையில் நடந்தது. அவர் கூறியதாவது:

அபிபுல்லா சாலையில் பசுமைத் தாயகம் வளர்த்திருந்த நாவல் மரத்தை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக வெட்டிவிட்டனர். அதன் அருகே பசுமைத் தாயகம் சார்பில் வளர்க்கப்படும் ஏழிலைப்பாலை மரத்தையும் வெட்ட முயற்சித்தனர். போராடித் தடுத்தோம்.

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட்டு, 5 ஆண்டுகளுக்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநகராட்சி மதிக்கவில்லை. சென்னையில் ஆண்டுக்கு 1500 மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரத்துக்கு பதில் 10 மரம் வளர்க்க வேண்டும் என்ற உத்தரவுப்படி, ஆண்டுக்கு 15 ஆயிரம் மரங்கள் புதிதாக நட்டு பராமரிக்க வேண்டும்.

மரங்களைக் காக்கவும், பசுமைச் சூழலை ஏற்படுத்தவும் ‘மரங்கள் ஆணையம்’ என்ற அமைப்பை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும். மரம் வெட்டும் தேவை ஏற்பட்டால், அதை ஆராய்ந்து இந்த ஆணையம் செயல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் 2007-ல் அறிவுறுத்தியது. 8 வாரங்களில் அமைக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியது. 8 ஆண்டுகளாகியும் அமைக்கப்பட வில்லை. இவ்வாறு அருள் கூறினார்.

மரம் வெட்டப்பட்ட இடத்தில் பசுமைத் தாயகம் அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ‘மரங்களை வெட்டாதே’, ‘மரங்களே மாநகரின் நுரையீரல்’, ‘மரம் இல்லாமல் எதிர்காலம் இல்லை’ போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x