Published : 11 Aug 2014 02:32 PM
Last Updated : 11 Aug 2014 02:32 PM

ரூ.45 கோடியில் 15 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

பொதுமக்களின் பயண நேரத்தைக் குறைக்கும் வகையிலும், காலதாமதமின்றி வருவாய்த் துறையின் சேவை மக்களை விரைந்து அடையவும் ரூ.45 கோடி செலவில் 15 புதிய வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர்

"வருவாய்த் துறையின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைத்திடும் வகையில், நடப்பு ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்தினைப் பிரித்து வாலாஜபாத்தில் ஒரு புதிய வட்டமும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தினைப் பிரித்து மரக்காணத்தில் ஒரு புதிய வட்டமும், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தினைப் பிரித்து புவனகிரியில் ஒரு புதிய வட்டமும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்தினைப் பிரித்து பெத்தநாயக்கன் பாளையத்தில் ஒரு புதிய வட்டமும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் வட்டத்தினைப் பிரித்து சேந்தமங்கலத்தில் ஒரு புதிய வட்டமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஆகிய வட்டங்களைச் சீரமைத்து பர்கூரில் ஒரு புதிய வட்டமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், ஆரணி மற்றும் வந்தவாசி வட்டங்களைச் சீரமைத்து சேத்துப்பட்டில் ஒரு புதிய வட்டமும் மற்றும் செய்யாறு வட்டத்தினைப் பிரித்து வெம்பாக்கத்தில் ஒரு புதிய வட்டமும்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மற்றும் குளத்தூர் வட்டங்களைச் சீரமைத்து விராலிமலையில் ஒரு புதிய வட்டமும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை வட்டத்தினைப் பிரித்து காளையார்கோயிலில் ஒரு புதிய வட்டமும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் கடலாடி ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கீழக்கரையில் ஒரு புதிய வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, ராஜபாளையம் மற்றும் சாத்தூர் ஆகிய வட்டங்களைச் சீரமைத்து வெம்பக்கோட்டையில் ஒரு புதிய வட்டமும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோயில் வட்டத்தினைப் பிரித்து திருவேங்கடத்தில் ஒரு புதிய வட்டமும் மற்றும் தென்காசி, சங்கரன்கோயில், சிவகிரி மற்றும் செங்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து கடையநல்லூரில் ஒரு புதிய வட்டமும் என மொத்தம் 15 புதிய வட்டங்கள் 45 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.

இத்துடன் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் 254 வட்டங்களைச் சேர்த்து மொத்தம் 269 வட்டங்கள் செயல்படும்.

அரசின் இந்த அறிவிப்பின் மூலம், பொதுமக்களுக்கு, வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு ஆற்றவும் வழிவகுக்கும்" என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x