Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM

பத்மநாபசுவாமி கோயில் வழக்கில்வழக்கறிஞராக தொடர்ந்து நீடிக்க வேண்டும்: கோபால் சுப்ரமணியத்துக்கு உச்ச நீதிமன்றம் வேண்டுகோள்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் நீதிமன்ற நண்பனாக தொடர்ந்து நீடிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை கணக்கெடுப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில், நீதிமன்றத்துக்கு உதவும் வழக்கறிஞராக (அமிகஸ் கியூரி) மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார். அவர் கோயிலில் 30 நாட்களுக்கு மேல் தங்கி யிருந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளித்தார்.

இந்நிலையில், கோபால் சுப்ரமணியத்தை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கலாம் என்ற நீதிபதிகள் தேர்வுக்குழுவின் பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. இதனால் அதிருப்தி அடைந்த கோபால் சுப்ரமணியம், சொந்த காரணங்களுக்காக பத்மநாப சுவாமி கோயில் வழக்கிலி

ருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். கோயில் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், அனில் தவே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீராம வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட கோபால் சுப்ரமணியம், துப்பறியும் நபர் போல் செயல்பட்டு கோயில் பூஜை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டுள்ளார். அரச குடும்பத்தினரின் தனியறைக்குள் நுழைந்துள்ளார். அவர் தனது அதிகார எல்லையை மீறி செயல்பட்டுள்ளார்” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அரச குடும்ப பெண் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, கோபால் சுப்ரமணியம் அறிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஏற்கெனவே இந்த வழக்கை தலைமை நீதிபதி லோதா, பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு விசாரித்தார். தற்போது புதிய நீதிபதிகள் விசாரிப்பதால், வழக்கின் விவரங்கள் குறித்து நீதிபதிகளுக்கு வழக்கறிஞர்கள் விவரித்தனர்.

கோபால் சுப்ரமணியம் இந்த வழக்கில் நீண்ட காலம் செலவழித்துள்ளதால், அவரே தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சிலர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, இவ்வழக்கில் உதவும் வழக்கறிஞராக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் இதுதொடர்பான முடிவை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படியும் கோபால் சுப்ரமணியத்துக்கு நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x