Last Updated : 07 Aug, 2014 12:00 AM

 

Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

நாகையில் சுதந்திரமாகத் திரியும் சங்கிலித் திருடர்கள்

தொடரும் எந்த செயலையும் சங்கிலித் தொடராய் என்று சொல்வது நம் வழக்கம். ஆனால் சங்கிலித் திருட்டையே சங்கிலித் தொடராய் மேற்கொண்டிருக்கிறார்கள் நாகப்பட்டினத்தில்.

கடந்த ஒரு மாத காலத்துக்குள், நடந்து சென்ற பெண்களிடமிருந்து 50 பவுன் நகைக்கும் மேல் செயின்கள் அறுத்துச் செல்லப்பட்டிருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவல்.

செவ்வாயன்று காலை நாகப்பட்டினம் ராமநாயக்கன் குளத்துத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலி திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டது. அது வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு புகாராக வந்தாலும் சமாதானம் செய்யப்பட்டு புகார் பதியப்படாமல் விடப்பட்டது. இப்படி தொடர்ந்து நடக்கும் சங்கிலிப் பறிப்புகள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு பதில் சொல்லப் பயந்து புகாரை பதிவு செய்யாமல் விட்டுவிடுகின்றனர்.

இதற்குமுன் நடந்த சில சங்கிலிப் பறிப்புகள்:

கடந்த 1-ம் தேதி இரவு நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொறியாளர் ரவிச்சந்திரனின் மனைவி அலுவலக உதவியாளராக பணிபுரியும் பத்மாவதி(45), வீட்டுக்கு அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பத்மாவதி அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பினர்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் நாகநாதர் தச்சர் தெருவில் கோயிலுக்கு சென்றுவிட்டு நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற மருத்துவ கண்காணிப்பாளர் பாக்கியலட்சுமி(62) அணிந்திருந்த ஆறரை பவுன் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அறுத்துக் கொண்டு தப்பினர்.

கடந்த மாதம் 19-ம் தேதி நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த வீராசாமி மனைவி வேல்நிலா(55) ஆபீஸர்ஸ் கிளப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் இவரது பத்து பவுன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினார். இதுநடந்து பத்தாவது நிமிடத்தில் புதிய கடற்கரைக்கு செல்லும் சாலையில் வந்த பச்சைபிள்ளையார் கோயிலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ரா(50) அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர் அறுத்துக்கொண்டு தப்பினார்.

கடந்த மாதம் 16-ம் தேதி நாகை சட்டையப்பர் கீழவீதியை சேரந்த வெங்கட்ராமன் மனைவி நாகை குழந்தைகள் நல நீதிமன்ற உறுப்பினர் மல்லிகா(57) நடைப்பயிற்சி சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், இவர் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பினார்.

இது தவிர கடந்த மாதத்தில் மேலும் இரு சங்கிலிப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அலுவலக உதவியாளராக பணியாற்றும் பெண் இதுகுறித்து ஆட்சியரை நேரில் சந்தித்தும் முறையிட்டிருக்கிறார். ஆட்சியர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசியதன் பேரில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அடுத்தடுத்து சங்கிலி பறிப்புக்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது, காவல் துறையினர் குறித்த அச்சமின்றி திருடர்கள் சுதந்திரமாக திரிவதையே காட்டுவதாய் உள்ளது.

இதனால் நகரில் வசிக்கும் பெண்கள் தங்கள் தாலியை கழற்றி வைத்துவிட்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர் சங்கிலித் திருட்டில் ஈடுபடுவோரை கைது செய்யாமல் காவல் துறையினர் இருப்பது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x