Published : 20 Aug 2014 11:24 AM
Last Updated : 20 Aug 2014 11:24 AM

ஆக. 23-ல் பாம்பன் பாலத்தை முற்றுகையிட மீனவர்கள் திட்டம்

தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 23-ம் தேதி பாம்பன் சாலைப் பாலத்தை முற்றுகையிடுவது என்று ராமேசுவரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

‘இலங்கை சிறையில் அடைக் கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கச்சத்தீவில் தமிழர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்.

இதனிடையே, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 94 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை.

இதனால், மீனவர்கள் போராட்டத்தைக் கைவிட வில்லை. அவர்களது வேலை நிறுத்தம் 27-வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந் தது.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகம் அருகே செவ்வாய்க்கிழமை அனைத்து மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவப் பிரதிநிதிகள் போஸ், சேசு, எம்ரிட் ஆகியோர் கூறியதாவது:

தமிழக மீனவர்கள் 94 பேரை விடுதலை செய்ததற்காக மத்திய, மாநில அரசுகளுக்கும், இலங்கைக்கும் நன்றி தெரிவித் துக்கொள்கிறோம்.

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 62 விசைப்படகுகள் பராமரிப்பின்றி கடலில் மூழ்கும் நிலையில் உள்ளன.

அவற்றை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக வருகிற 23-ம் தேதி பாம்பன் சாலைப் பாலத்தை முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x