Published : 14 Jul 2014 10:40 AM
Last Updated : 14 Jul 2014 10:40 AM

வேட்டி உடுத்தியதால் அனுமதி மறுத்தது தமிழர் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அவமானம்: வைகோ

வேட்டி உடுத்தியதால் அனுமதி மறுத்தது தமிழர்களின் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்புக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்ற நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, வழக்கறிஞர் ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோர் வேட்டி உடுத்திக் கொண்டு வந்ததனால் அனுமதி மறுக்கப்பட்டு, கிளப் நிர்வாகிகளால் திருப்பி அனுப்பப்பட்ட செயல் மிகவும் கண்டனத்துக்குரியது ஆகும்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இப்படிப்பட்ட கிளப்புகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக தமிழர்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஆனால், அடிமை விலங்குகள் உடைந்து, ஆங்கிலேயர் ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும் அன்றைய கலாச்சார ஆதிக்கத்தை இன்றளவும் நடைமுறைப்படுத்துவது வெட்கக்கேடான செயலாகும்.

இன்றைய மேல்நாட்டு கலாச்சாரத்துக்காரர்கள் நாகரிகத்தின் வாசனை அறியாத காலத்திலேயே உலகின் பெரும் பகுதிகளில் ஆடை அணியும் கலையை அங்கு வாழ்வோர் அறியாத காலத்திலேயே மானத்தைப் பெரியதாகப் போற்றிய தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆடை அணியும் நாகரிகத்தைப் பெற்றிருந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நெய்த பட்டுத் துணிகள் எகிப்துக்கும், கிரேக்கத்துக்கும், ரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டது. அத்தகைய உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருக்கும் தமிழர்களின் பூர்வீக அடையாளமான வேட்டி உடுத்துவதை, ஆடை அணிவதை அனுமதிக்க முடியாது என்று சென்னையில் உள்ள பல்வேறு கிளப்புகளில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும்.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் குறிப்பாக ஆப்பிரிக்கா கண்டம், தென் அமெரிக்கக் கண்டம் ஆகிய பகுதிகளில் வாழ்கிற பூர்வகுடி மக்கள் ஆடை அலங்காரத்தையே அரசு விழாக்களிலேயே ஆட்சி புரிவோரும், விழா நாயகர்களும் அணிந்துகொண்டு தங்கள் தனித்தன்மையை நிலைநாட்டி வருகிறார்கள்.

இந்தியாவிலும் குறிப்பாக வடகிழக்கு எல்லைப்புற மாகாணங்களிலும், இன்னும் பல மாநிலங்களிலும் அரசு விழாக்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் தங்களுடைய பூர்வீக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் முறையிலேயே ஆடைகள் அணிந்து பங்கேற்கின்றனர்.

ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில் உரையாற்றும் வாய்ப்பு 2001 இல் எனக்குக் கிடைத்தபோது, வேட்டி சட்டை அணிந்து நான் பங்கேற்பதற்கும் எந்தத் தடையும் இல்லை.

தமிழ்நாட்டிலேயே தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கும் கிளப்புகளை தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கக்கூடாது.

தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் அவமதிக்கும் கிளப்புகளின் நடைமுறையும், கடைபிடிக்கும் விதிகளும் அறவே மாற்றப்படும் விதத்தில் தாங்களாகவே அந்தக் கிளப்புகள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையை ஏற்படுத்த உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x