Last Updated : 09 Jul, 2014 10:55 AM

 

Published : 09 Jul 2014 10:55 AM
Last Updated : 09 Jul 2014 10:55 AM

சென்னையில் இடிந்து விழும் நிலையில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள்: கணக்கெடுப்பு நடந்து 2 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லை

சென்னை நகரில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக 2 ஆண்டு களுக்கு முன்பு மாநகராட்சி எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆனால், அந்தக் கட்டிடங்களை பலப்படுத்த இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.

போரூர் அருகே மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் 61 பேர் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சோகம் மறைவதற்குள் திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே தனியார் குடோன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 11 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு யார் காரணம் என்ற ஆய்வு ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், இது போன்ற அசம்பாவிதம் மீண்டும் நடக்கக்கூடாது என்றே அனைவரும் கருதுகின்றனர்.

இந்நிலையில், சென்னை சாந்தோம் சல்லிவன் கார்டனில் 90 ஆண்டு பழமையான கிறிஸ்தவ தேவாலய வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடம் திங்கள்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் முன்பகுதியில் வசித்து வந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், இதை அதிகாரிகள் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த 2012-ம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பழைய 2 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள 50 ஆண்டு களைக் கடந்த கட்டிடங்களை கணக் கெடுக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக மேற்கொண்டனர். சென்னை முழுக்க நூற்றுக் கணக்கான பழைய கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில் பல கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பழைய கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், அதுபற்றிய தொடர் நடவடிக்கையை கைவிட்டுவிட்டனர். தற்போது, நடந்துள்ள விபத்துகளுக்குப் பிறகாவது அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். இனியும் கட்டிட விபத்துகளில் உயிர்களை பலி கொடுக்கக் கூடாது. ஏற்கெனவே எடுத்த கணக்கெடுப்பின்படி, மோசமான நிலையில் உள்ள பழைய கட்டிடங்களை பலப்படுத்துமாறு கட்டிட உரிமையாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் நிர்பந்திக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக விவரம் கேட்க, சென்னை மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூரை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் பலன் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x