Published : 28 Mar 2015 07:37 PM
Last Updated : 28 Mar 2015 07:37 PM

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி27 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோள் நேற்று மாலை 5.19 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜிபிஎஸ் வசதிகள், துல்லியமான நகரத் திட்டமிடல், சரியான வரை படங்கள், பயணிகளுக்கான தரைவழி, கடல்வழித் தடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான குரல் வழிகாட்டிகள், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் தகவல்களை பெற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘ஐஆர்என்எஸ்எஸ்’ என்ற வரிசையில் 7 செயற்கைக் கோள்களை ஏவுகிறது. இதே தேவைகளுக்காக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யாவிடம் செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே உள்ளன.

இதில் முதல் 3 செயற்கைக்கோள்களான ஐஆர்என்எஸ்எஸ்-1ஏ, 1பி, 1சி ஆகியவை முறையே கடந்த 2013 ஜூலை, 2014 ஏப்ரல், அக்டோபரில் ஏவப்பட்டன. இதில் 4-வதாக ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக்கோளை கடந்த 9-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது நிறுத்தப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 59.30 மணி நேர கவுன்ட் டவுண் கடந்த 26-ம் தேதி காலை 5.49 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 44.4 மீ. உயரம் உள்ள பிஎஸ்எல்வி-சி27 ராக்கெட் மூலம் ஐஆர்என்எஸ்எஸ்-1டி செயற்கைக் கோள் நேற்று மாலை 5.19 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 19 நிமிடங்கள் 25 விநாடியில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் தனியாக பிரிந்து விண்ணில் பயணிக்கத் தொடங்கியது. அப்போது அது 506.83 கி.மீ. உயரத்திலும் விநாடிக்கு 9.598 கி.மீ. வேகத்திலும் சென்றுகொண்டிருந்தது.

இஸ்ரோ தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் ஜனவரியில் பொறுப்பேற்ற பிறகு, விண்ணில் செலுத்தப்படும் முதல் செயற்கைக்கோள் இது. இந்த செயற்கைக்கோளும் அதன் துணை பாகங்களும் பெங்களூரூவில் உள்ள இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்பட்டவை.

ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் அடுத்த 3 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப் பட்ட பிறகு, ரூ.1,470 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப் பட்டிருக்கும் இத்திட்டம் 2016-ம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படத் தொடங்கும். இந்த செயற் கைக்கோள்கள் இந்தியாவில் வசிப் பவர்களுக்கு மட்டு மின்றி, இந்திய எல்லையை சுற்றி 1,500 கி.மீ. தொலைவு வரை வசிக்கும் அண்டை நாட்டினருக்கும் பயனளிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x