Published : 08 Mar 2015 12:48 PM
Last Updated : 08 Mar 2015 12:48 PM

உலக மசாலா: ஐயோ.... பாவம்...

பிரிட்டனில் வசிக்கும் 46 வயது சாரா, ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருக்கிறார். கடந்த ஜூலை மாதம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். முதலில் அதிர்ச்சியடைந்த சாரா, சட்டென்று மீண்டுவிட்டார். அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை மூலம் மார்பகம் அகற்றப்பட்டது. அடுத்து கீமோ தெரபி செய்யவேண்டும். அழகான தன்னுடைய கூந்தலை வெட்டி, மொட்டையடித்துக்கொண்டார். அன்றிலிருந்து தினமும் தன்னுடைய மொட்டைத் தலையில் விதவிதமான பொருட்களை வைத்து, புகைப்படம் எடுத்து வெளியிட ஆரம்பித்தார். பொம்மை ஸ்டாண்ட், உலக உருண்டை, கேக், கடிகாரம், ரேடியோ, பூங்கொத்து என்று தினமும் தலையில் ஓர் அலங்காரம் செய்து புகைப்படங்கள் எடுப்பார். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை மெக்மில்லன் கேன்சர் சப்போர்ட் என்ற அறக்கட்டளைக்கு வழங்கி வருகிறார். இதுவரை 141 படங்கள் மூலம் சுமார் 7 லட்சம் ரூபாயை வழங்கியிருக்கிறார். 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தத் திட்டத்தையே அவர் ஆரம்பித்தார். உற்சாகமும் தன்னம்பிக்கையும் ததும்பி வழியும் சாராவின் புகைப்படங்களைப் பார்த்தாலே போதும், புத்துணர்ச்சி கிடைத்துவிடும். ’புற்றுநோயை நான் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால், அது என்னைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துவிடும். அதை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன். என்னைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் சக புற்றுநோயாளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் நினைத்தேன். இன்று என்னையும் புற்றுநோயில் இருந்து மீட்டுவிட்டேன்… மற்றவர்களையும் மீட்டு வருகிறேன்’ என்கிறார் சாரா.

உலக அழகி!

பிரிட்டன் கோழிப் பண்ணைகளில் கோழிக் குஞ்சு ஆணா, பெண்ணா என்று கண்டறியும் வேலையைச் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 38 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை சம்பளமாகக் கிடைத்தாலும் இந்த வேலையைச் செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை என்பதுதான் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வளர்ந்த பிறகு கோழியையும் சேவலையும் கண்டறிவது சுலபம். ஆனால் கோழிக் குஞ்சாக இருக்கும்போது கண்டறிவது கடினம். அனுபவம் வாய்ந்தவர்களாலேயே இந்த வேலையைச் செய்ய முடியும். அதற்காக 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் 800 - 1200 கோழிக் குஞ்சுகளை எடுத்து ஆணா, பெண்ணா என்று பரிசோதிக்க வேண்டும். இதில் 97 சதவிகிதம் சரியாகக் கணித்திருக்க வேண்டும். ஒரு கோழிக் குஞ்சைப் பரிசோதிக்க 3 நொடிகள்தான் கிடைக்கும். பிரிட்டன் முழுவதும் 100 முதல் 150 பேர்தான் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் ஒருவர் கூட இந்த வேலையில் புதிதாகச் சேரவில்லை. தென்கொரியாவில் இந்த வேலையைச் செய்பவர்களுக்கு மிகுந்த மரியாதையும் வருமானமும் கிடைக்கிறது. ஆனால் பிரிட்டனில் இந்த வேலை என்றால் ஒருவர் கூட எட்டிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்.

எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் வேலையில் கொஞ்சமாவது சுவாரசியம் இருக்கணுமே…

சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் டோல் பூத் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி எல்லோரையும் நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது. காரில் வந்த நாய் ஒன்று, உரிமையாளருக்குத் தெரியாமல் வெளியே குதித்துவிட்டது. 13 நாட்களாக அந்தப் பகுதிக்கு ஒவ்வொரு வாகனம் வரும்போதும் ஓடிச் சென்று, தன்னுடைய உரிமையாளர்தானா என்று தேடுகிறது. இரவு, பகல் பாராமல் ஓடி, ஓடித் தேடி அலைகிறது. நாயின் தகவல்களை வெளியிட்டு, தற்காலிகமாக நாயைப் பராமரித்து வருகிறது சீனக் காவல்துறை.

ஐயோ… பாவம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x