Last Updated : 14 Feb, 2015 09:37 AM

 

Published : 14 Feb 2015 09:37 AM
Last Updated : 14 Feb 2015 09:37 AM

உலகம் ஆடும் இந்திய ஆட்டம்

கிரிக்கெட் என்பது தற்செயலாக ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விளையாட்டு - ஆஷிஷ் நந்தி

பிப்ரவரி 10-ம் தேதி காலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அலசல்கள் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தன. முன்னணி நிலவரங்கள், வந்துகொண்டிருந்தன. என்.டி.டி.வி.யின் பிரணாய் ராய், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி நிலவரத்தைச் சொல்லப் பயன்படுத்திய உத்தி சுவாரசியமானது. நடப்பு ஸ்ட்ரைக் ரேட் 52%, பெரும்பான்மை பெற அது இன்னமும் அடிக்க வேண்டிய ஸ்ட்ரைக் ரேட் 42% என்றார். கடைசியில் அந்த ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 100-ஐ நெருங்கியது என்பது வேறு விஷயம். தேசமே எதிர்நோக்கியிருந்த ஒரு தேர்தலின் முடிவுகளைச் சுவையாக முன்வைக்க கிரிக்கெட் சார்ந்த சமன்பாடு பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கிரிக்கெட் பிறந்த நாடான இங்கிலாந்தில் தேர்தல் அலசலின்போது கிரிக்கெட் அதில் ஊடாடுமா என்பது சந்தேகம்தான்.

திரைப்படத்துக்கு இணையாகவும், பல சமயம் அதற்கு மேலும் இந்தியர்களின் சிந்தனைகளிலும் மொழியிலும் கிரிக்கெட் தாக்கம் செலுத்திவருகிறது. அதனால்தான் இந்தியர்கள் இன்றைய தினத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டின் ஆகப் பெரிய அரங்கில் ஆகப் பெரிய பெருமிதத்தைத் தரக்கூடிய ஒரு கோப்பையைப் பெறுவதற்கான நீண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று அரங்கேறுகிறது.

மொத்தம் 14 அணிகள். 49 ஆட்டங்கள். முதல் சுற்றில் 42 ஆட்டங்கள். எந்த அணிகள் காலிறுதிக்கு வரும் என்பது கிட்டத்தட்ட தெரிந்த விஷயம்தான். 2007, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்ததுபோல எதிர்பாராத அதிர்ச்சிகள் அரங் கேறினாலொழிய இந்தக் கணக்கில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. எனினும் 14 அணிகளுக்கும் அந்நாடுகளின் ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாகவும் தினசரிக் கனவின் அங்கமாகவும் அமையப் போகிறது. தொலைக்காட்சிகள், கணினிகள், கைபேசிகள் ஆகியவை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை வரும் இரண்டு மாதங்களிலும் கிரிக்கெட்டோடு பிணைத்து வைத்திருக்கும்.

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு? டெஸ்ட் போட்டிகளோடு ஒப்பிடும்போது நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் பெற்றிருக்கும் வரவேற்பு பல மடங்கு அதிகம் என்பது வெளிப்படை. கிரிக் கெட்டின் ஆன்மா டெஸ்ட் போட்டியில்தான் இருக்கிறது என்றாலும் ஒரு நாள், அரை நாள் போட்டிகளில்தான் பெரும்பாலான மக்களின் உயிர் இருக்கிறது. விறுவிறுப்பும், முடிவுகள் அறியக்கூடிய தன்மையுமே அதற்கான காரணங்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகள் இவ்வளவு பிரபலமானதற்குக் காரணம் உலகக் கோப்பைப் போட்டிகள் என்பது அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

ஒரு நாள் போட்டியின் வரலாறு

1975-ல் உலகக் கோப்பைப் போட்டி தொடங்கப்பட்டபோது பெரிய கனவுகளோ திட்டங்களோ இல்லை. மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட் ஆட்டத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் யோசனை நடைமுறைக் காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. 1975-க்கு முன்பு ஒருநாள் போட்டிகள் 20-க்கும் குறைவாகவே நடைபெற்றன.

பெரிய கனவுகள் எதுவும் இல்லாமல் தொடங்கப் பட்ட உலகக் கோப்பை இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிரிக்கெட் உலகின் ஆகப் பெரிய போட்டியாகவும், இதில் கோப்பையை வெல்வது ஆகப் பெரிய கவுரவமாகவும் கருதப்படுகிறது. எண்பதுகளில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வந்த பிறகு அதன் வீச்சே மாறிவிட்டது. ஒளிபரப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தேர்ச்சிகள் ஆட்டத்தின் நுணுக்கங்களை அனைவருக்கும் துல்லியமாகக் கொண்டுசேர்த்தன. கால் காப்பில் பந்து பட்டதால் ஆட்டமிழக்கும் விதிகள் பற்றிப் பாமரர்களும் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஒளிபரப்பின் நுட்பங்கள்தான்.

60 ஓவர் போட்டிகளாகவும் டெஸ்ட் போட்டிகளைப் போலவே வெள்ளை ஆடை அணிந்து ஆடும் போட்டிகளாகவும் இருந்த இந்தப் போட்டிகள் காலப் போக்கில் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகிவிட்டன. ஆடைகளின் நிறம், பந்தின் நிறம், ஆடும் நேரம், ஓவர்களின் எண்ணிக்கை, களத்தடுப்பு வியூகம், வைட், நோபால் விதிகள் எனப் பல அம்சங்களில் மாற்றங்கள் வந்துவிட்டன. கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவும் கிரிக்கெட்டின் வீச்சைப் பரவலாக்கவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் கிரிக்கெட்டின் ஆதாரமான சில அழகுகளையும் நளினங்களையும் இந்த மாற்றங்களும் அவற்றுக்குக் காரணமான ஒரு நாள் போட்டிகளும் குறைத்துவிட்டன என்ற விமர்சனத்திலும் நியாயம் இருக்கிறது. ரன் எடுப்பதுதான் முக்கியம் என்று வந்துவிட்டால் அழகையும் நேர்த்தியையும் ஓரளவேனும் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். பரவலாக்கம் பெறும் எல்லாக் கலைகளுக்கும் நேரும் நெருக்கடி இது.

ரன் எடுக்க வேண்டும் என்னும் ஆவேசம் அல்லது வெறி கிரிக்கெட்டின் மரபார்ந்த அழகியலைச் சிதைத்தாலும் பல புதுமைகளையும் அது புகுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ், இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னிங்ஸின் கடைசிப் பந்தை அடித்த விதம் அதற்கு ஒரு உதாரணம். ஆஃப் திசையில் வலுவான களத்தடுப்பு அமைத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஆஃப் ஸ்டெம்ப் வரிசையை விட்டு நன்கு வெளியே வந்து லெக் திசையில் அநாயாசமாகத் தூக்கி அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பினார். அதுவரை அப்படி ஒரு ஷாட்டை யாரும் அடித்ததில்லை. பின்னாட்களில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், கில்கிறிஸ்ட், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பலரும் பல புதுமையான ஷாட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் 50 ஓவர் அதிரடியாளர்கள் மட்டுமல்ல. டெஸ்ட் போட்டியிலும் கைதேர்ந்தவர்கள்.

ஒரு நாள் போட்டிகளும் அதன் உச்ச வடிவமான உலகக் கோப்பைப் போட்டிகளும் ஆட்டத்தின் எல்லைகளைப் பல விதங்களில் விரிவுபடுத்தி யிருக்கின்றன. கிரிக்கெட் ஆடும் நாடுகள் அதிகரித்திருக்கின்றன. பார்க்கும் மக்கள் அதிகரித்திருக்கிறார்கள். ரன் எடுக்கும் வேகம், பந்து வீச்சின் நுணுக்கம், களத்தடுப்புத் திறன்கள், ஆட்டத்தைத் திட்டமிடும் விதம் எனப் பல விதங்களிலும் இது மிகவும் சவால் மிகுந்த வடிவமாகவே இருந்துவருகிறது. 20 ஓவர் போட்டிகளின் கண்மூடித்தனமான வேகம், டெஸ்ட் போட்டிகளின் நிதானம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் நிற்கும் இந்த ஆட்டத்தில் அந்த இரு வடிவங்களின் தன்மைகளும் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. மரபார்ந்த கிரிக்கெட்டின் ரசிகர்கள் பலரும் 20 ஓவர் போட்டிகளை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகளை அவர்கள் டெஸ்டுக்கு இணையாக மதிக்காவிட்டாலும் அலட்சியப்படுத்து வதில்லை. வரலாற்றின் ஆகச் சிறந்த மட்டையாளரான டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் ஆட்டத்தைப் பார்த்துத்தான் “இந்தப் பையன் ஆடுவது நான் ஆடும் விதத்தை நினைவுபடுத்துகிறது” என்று சொன்னார். பிராட்மேன் காலத்தில் ஒரு நாள் போட்டியே கிடையாது.

மட்டையாளர்களின் ஆட்டம்

விக்கெட் எடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட பந்து வீச்சாளர்கள் ரன்னைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கமும் ஒரு நாள் போட்டிகளின் பங்களிப்புதான். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக வீச வீச, ரன் குவிப்பு குறைந்து, ஆட்டங்களின் விறுவிறுப்பும் குறைவதைக் கண்ட கிரிக்கெட் நிர்வாகம் பந்து வீச்சாளர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள், நோ பாலுக்கான புதிய விதிகள் என்று பலவாறாக அமைந்த இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நாள் போட்டிகளைக் கிட்டத்தட்ட மட்டையாளர்களின் ஆட்டமாக ஆக்கிவிட்டன. அதுவும் வேகப் பந்து வீச்சுக்குத் தோதில்லாத ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்கள் வெறுத்துப்போகிறார்கள். மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களால் மட்டுமே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள முடிகிறது. டிவிலியர்ஸ், க்லென் மேக்ஸ்வெல் போன்றவர்களின் கணிக்க முடியாத ஷாட்களால் வீச்சாளர்களுக்கான சவாலும் கூடிக்கொண்டே போகிறது.

இந்த ஆண்டு போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் நடக்கின்றன. நல்ல பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவேனும் உதவும் ஆடுகளங்கள் இந்நாடுகளில் உள்ளன என்பதால் மட்டையாளர்கள் சகட்டுமேனிக்கு வாண வேடிக்கை நடத்த முடியாது. ஆனால், 20 ஓவர் போட்டிகளால் மாறிவரும் மட்டையாட்டத்தின் புதிய பரிமாணங்கள் இங்கும் பந்து வீச்சுக்குச் சவாலாகவே விளங்கும். அதே 20 ஓவர் போட்டிகளால் மேம்பட்டிருக்கும் தடுப்பாற்றலாலும் அசாத்தியமான கேட்ச் பிடிக்கும் திறன்களாலும் மட்டையாளர்கள் அதிர்ச்சிக்குள் ளாவதும் நடக்கும்.

உலகக் கோப்பையை ஒவ்வொரு அணியும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதால்தான் ஜான்டி ரோட்ஸ் போன்ற களத் தடுப்பாளர்களும் ரிச்சர்ட்ஸ், மியாண்டாட், சச்சின், ஜெயசூர்யா கில்கிறிஸ்ட் போன்ற மட்டையாளர்களும் மெக்ரா, ஷேன் வார்ன், ஃப்ளின்டாஃப், ஸ்டெயின் போன்ற வீச்சாளர்களும் திறமைகளின் எல்லைகளைத் தொடர்ந்து மறுவரையறை செய்துகொண்டே இருக்கிறார்கள். பல்வேறு ஜாம்பவான்கள் இல்லாத இந்த ஆண்டின் உலகக் கோப்பை புத்தம் புதியதாய்ப் பல திறமைசாலிகளை அடையாளம் காட்டலாம். பல புதிய ஷாட்களையும் புதிய பந்து வீச்சு நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்தலாம். அசரவைக்கும் சில கேட்சுகள் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பெறலாம். ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்!

ஆடப்படும் இடங்களையும் பல்வேறு அணிகளின் திறமைசாலிகளையும் பார்க்கும்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை திருப்தியான விருந்தாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால், இந்திய ரசிகர்களாக மட்டும் இருப்பவர்களுக்கு அது அப்படி அமையும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆஷிஷ் நந்தியின் பார்வையில் இந்திய ஆட்டமான கிரிக்கெட்டை ஒவ்வொரு அணியும் எப்படி ஆடுகிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால் இந்திய ரசிகர்களும் உலகக் கோப்பையின் ஆனந்தத்தில் திளைக்கலாம். இந்திய ரசிகர்களாகவும் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வது மகேந்திர சிங் தோனியின் இளம் படையினர் கைகளில்தான் உள்ளது.

-அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

பந்து வீச்சாளர்களைப் பதம் பார்க்கும் விதிகள் - எஸ்.சசிதரன்

ஆட்ட நுணுக்கங்களுக்காகக் கூர்ந்து கவனிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளிலிருந்து, பொழுதுபோக்கு நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகளுக்கு என்று முக்கியத்துவம் மாறியதோ, அன்றே பந்து வீச்சாளர்களுக்கான போதாத காலம் தொடங்கிவிட்டது. முதலில் பவுன்ஸர்களுக்குக் கட்டுப்பாடு. பின்னர், எல்லைக் கோட்டின் தூரம் குறுகியது. பின்னர், பிட்ச்சில் இருந்து 90 அடி தூரத்தில் உள்ள உள்வளையத்துக்கு அப்பால், இத்தனை தடுப்பாளர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையிலும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில், வளையத்துக்கு வெளியே நிறுத்தப்படும் தடுப்பாளர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமையும்.

தடுப்பரணில் கட்டுப்பாடுகள் விதிக்கும் ‘பவர் பிளே’யிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பு 3 ஆக இருந்த ‘பவர் பிளே’க்கள் இரண்டாக மாற்றப்பட்டுள்ளன. முதல் 10 ஓவர்களில் முதல் ‘பவர் பிளே’யின்போது இரண்டு பீல்டர்கள் மட்டுமே வளையத்துக்கு வெளியே நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவது ‘பவர் பிளே’, 5 ஓவர்கள் கொண்டது. இது எப்போது என்பதை பேட்டிங் செய்யும் அணி 40-வது ஓவருக்கு முன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்போது வளையத்துக்கு வெளியே மூன்று பேர் மட்டும் நிறுத்தப்பட வேண்டும்.

‘பவர் பிளே’ இல்லாதபோது. உள்வட்டத்துக்கு வெளியே முன்பு 5 தடுப்பாளர்கள்; இப்போது 4. ரவீந்திர ஜடேஜா போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற அணிகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.

முதல் 25 ஓவர்களுக்கு ஒரு பந்தும், அடுத்த 25 ஓவர்களுக்கு மற்றொரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இது வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். சுழல் பந்து வீச்சாளர்களின் நிலை பரிதாபம்தான். அதே சமயம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியாமல் போகும். பொதுவாக, 30 ஓவர் வீசப்பட்ட பிறகுதான் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகத் தொடங்கும். ஆனால், 25-வது ஓவரில் புதிய பந்து எடுக்கலாம் என்பது பந்து வீச்சாளர்களுக்கு ஆறுதல் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x