Published : 06 Feb 2015 10:14 AM
Last Updated : 06 Feb 2015 10:14 AM

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x