Published : 04 Feb 2015 03:40 PM
Last Updated : 04 Feb 2015 03:40 PM

புகார் அளித்தால் பொய் வழக்கு பதிந்து மிரட்டல்: சகாயம் விசாரணையில் விவசாயிகள் முறையீடு

கிரானைட் முறைகேடு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததுடன், போலீஸார் மூலம் பொய் வழக்குகளைப் பதிவு செய்து மிரட்டினர் என ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்திடம் விவசாயிகள் முறையிட்டனர்.

கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் மதுரையில் 6-ம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறார். முக்கிய புகார்தாரர்களை மட்டும் அழைத்து தனியாக விசாரணை நடைபெறுகிறது. மேலூர் தாலுகாவைச் சேர்ந்த 3 விவசாயிகள் நேற்று அழைக்கப்பட்டனர்.

சகாயத்திடம் விசாரணை முடிந்து வந்த விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முருகேசன்:

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 2008-ல் சில விவரங்களை சேகரித்தேன். அதிகாரிகள் அளித்த விவரங்கள், தூத்துக்குடி துறைமுகக் கழகத்தின் ஏற்றுமதி விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. அப்போது ஆட்சியராக இருந்த மதிவாணனிடமும் தெரிவித்தேன். நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். மனுவை விசாரித்த நீதிபதி சந்துரு, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் போலீஸார் என் மீது, கத்தியை காட்டி ரூ.5 லட்சம் பறிக்க முயன்றதாகப் பொய் வழக்குப் பதிவு செய்தனர். எனக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் ரூ.45 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கீழையூர் முத்தையா:

ரெங்கசாமிபுரம் பவளமுத்து மாரியம்மன் கோயிலை அழித்து கிரானைட் வெட்டினர். இது குறித்து புகார் அளித்தும் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் என் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கருத்தபுலியம்பட்டி கிருஷ்ணமூர்த்தி:

இடையப்பட்டி கண்மாயில் மீன்பிடிக்க ஏலம் எடுத்திருந்தேன். சில லட்சம் ரூபாய் செலவில் மீன் குஞ்சுகளை வாங்கி கண்மாயில் விட்டேன். 4 மாதம் கழித்துப் பார்த்தபோது கண்மாய், தண்ணீர், மீன் என எதையும் காணவில்லை.

இது குறித்து காமராஜ் ஆட்சியராக இருந்தபோது புகார் அளித்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் யாரும் எனக்கு உதவாததால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை என்றார்.

மூன்று பேரும் தங்களிடம் இருந்த ஆவணங்களை அளித்தனர். இவர்களது விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.

சோகோ அறக்கட்டளை நிர்வாகி மகபூப்பாட்சா நேற்று ஆஜராகவில்லை. ஊராட்சி கண்மாய்கள் அழிக்கப்பட்டது குறித்து இன்று விசாரணை நடத்துவதற்காக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x