Published : 28 Feb 2015 05:37 PM
Last Updated : 28 Feb 2015 05:37 PM

பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களை நம்பிய பட்ஜெட்: வைகோ

மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருக்கிறது என்பதை பட்ஜெட் அறிக்கை காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மத்திய அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இல்லை.

நாட்டின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருக்கிறார். ஆனால், மத்திய அரசு பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளையே பெரிதும் நம்பி இருப்பதை நிதிநிலை அறிக்கை காட்டுகிறது.

2015-16 நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.5 விழுக்காடு என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறை மற்றும் உற்பத்தித் தொழில்துறையின் பங்களிப்பு குறைந்துள்ள நிலையில் எவ்வாறு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. பணவீக்க விகிதம் 5 விழுக்காட்டுக்குக் கீழே குறைந்துள்ளது என்றாலும், சேவை வரி 12.34 விழுக்காடு என்பது 14 விழுக்காடு என்று உயர்த்தப்படுவதால், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாது.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மீதான வரிகளைக் குறைத்தால்தான் மக்களுக்குப் பலன் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு மானியங்களை முழுதாக இரத்து செய்கின்ற நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல. வேளாண் கடனுக்காக 8.5 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 விழுக்காடு வட்டியில் வழங்கப்படும் கடன் தொகையை 3 இலட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்க வேண்டும். ஓராண்டுக்குள் கடனை திரும்பச் செலுத்தத் தவறியவர்களுக்கு 14 விழுக்காடு அபராத வட்டியை இரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வைத்த நியாயமான கோரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கிறது. வேளாண் துறைக்கான முதலீடும் அதிகரிக்கவில்லை.

மரபணு மாற்றுப் பயிர்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, இயற்கை வேளாண்மையைப் பாதுகாப்போம் என்பது முரண்பாடாக இருக்கிறது.

பிரதமரின் ‘இந்தியாவில் தயாரிப்பு’ திட்டத்துக்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்று நம்பி இருந்த நடுத்தர மக்களுக்கு நிதி அமைச்சர் ஏமாற்றத்தைத் தந்துள்ளார்.

செல்வ வரியை இரத்து செய்து, பெரு நிறுவனங்களுக்காக வரி விகிதம் 5 விழுக்காடு குறைத்த மோடி அரசின் நிதிநிலை அறிக்கை பெருநிறுவனங்களுக்கே சாதகமானதாக இருக்கிறது.

செல்வ வரி மற்றும் வங்கிகளின் வாராக்கடன் வசூல் இலக்கை எட்ட முயற்சிக்காமல், நிதி ஆதாரங்களைத் திரட்ட பொதுத்துறைப் பங்குகள் விற்பனையை ஊக்குவிப்பது ஏற்கக்கூடியது அல்ல.

திட்டக்குழுவைக் கலைத்துவிட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் செயல்திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

மக்கள் நலவாழ்வுக்கு, பொது சுகாதாரத் திட்டங்களுக்கு 10 விழுக்காடு நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், பொது சுகாதரத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

ஏழை, நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தகவல்தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெறுவதற்கு கடன் வழங்கும் திட்டம் வரவேற்கக்கூடியது. எனினும், அனைத்துத் துறைகளுக்கும் இதை விரிவுபடுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் சேருவது கட்டாயம் என்பதை விருப்ப உரிமையாக மாற்றுவது தொழிலாளர்களின் எதிர்கால குடும்ப நலனைப் பாதிக்கும்.

சிறு, குறு தொழில் முனைவோருக்குக் கடன் வழங்கும் திட்டம், தமிழகத்தின் உயர்தர ஏ.ஐ.எம்.எஸ். மருத்துவமனை உருவாக்குதல், வரி விலக்குடன் கூடிய பத்திரங்கள் வெளியிடுதல் போன்ற வரவேற்கக் கூடிய கூறுகள் இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் மத்திய பட்ஜெட் இல்லை.'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x