Published : 02 Feb 2015 11:28 AM
Last Updated : 02 Feb 2015 11:28 AM

டெல்லியில் குறிவைக்கப்படும் தேவாலயங்கள்: குறுகிய இடைவெளியில் 5 தாக்குதல்கள்- பிஷப் வேதனை

டெல்லியில் சமீப காலமாக தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறுகிய கால இடைவெளியில் 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தெற்கு டெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள புனித அல்போன்ஸா தேவாலயத்துல் இன்று அதிகாலை 3 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைந்த விஷமிகள் திவ்ய நற்கருணை பாத்திரம் உட்பட பல்வேறு பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இத்தகவலை டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் ஏ.சி.மைக்கேல் உறுதி செய்துள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பாக டெல்லி பிஷப் அனில் ஜெ.ட.கூட்டோ கூறுகையில், "அண்மைகாலமாக அதிகரித்து வரும் தேவாலயங்கள் மீதான தாக்குதல் வேதனையளிக்கிறது. இந்திய தேசத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சில விஷமிகள் பரப்பிவரும் வெறுப்புப் பிரச்சாரமே இத்தகைய செயல்களுக்கு காரணம். குடியரசு தின விழா நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது சிறுபான்மையினரை காக்க அரசு தவறிவிட்டதையே உணர்த்துகிறது. டெல்லியில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

கடந்த மாதம், மேற்கு டெல்லியில் விசாகபுரி பகுதியிலும் ஒரு தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அத்தாக்குதல் தொடர்பாக 3 பேர் கௌது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி புறநகர் பகுதியில் மற்றொரு தேவாலாயத்தில் வைக்கப்பட்டிருந்த குடில் தீக்கிரையாக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை:

புனித அல்போன்ஸா தேவாலயத்தில் நடந்த இத்தாக்குதல் தொடர்பாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தேவாலயத்தில் உள்ள பொருட்களை திருடுவதற்காகவே திருட்டு நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இதில் மதசார்பு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்றும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x