Published : 07 Feb 2015 12:16 PM
Last Updated : 07 Feb 2015 12:16 PM

உலக மசாலா: கைகளையே கொடுத்த அப்பா!

குழந்தைகளின் ஓவியங்களைச் சுவற்றில் ஒட்டி வைப்பவர்களைப் பார்த்திருக்கிறோம். கனடாவைச் சேர்ந்த கெய்த் ஆண்டர்சன் தன் மகன் வரைவதற்காகத் தன் கைகளேயே கொடுத்திருக்கிறார். ஓவியத்தில் ஆர்வமுள்ள மகனுக்காக அவன் நான்கு வயதாக இருந்தபோது, கையில் டாட்டூ வரையச் சொன்னார்.

ஆண்டுக்கு ஒருமுறை மகனும் வரைந்து வருகிறான். இப்பொழுது அவனுக்கு 11 வயது. ஒவ்வோர் ஆண்டும் மகனின் ஓவியத் திறமை வளர்ந்து வருவதை கைகளில் உள்ள டாட்டூக்கள் காட்டுவதாகப் பெருமையாகச் சொல்கிறார்.

அருமையான அப்பா!

மருத்துவக் குணம் நிறைந்த பூண்டுகளை ஜப்பானியர்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் பூண்டு விளைவிக்கப்படுகிறது. பூண்டுகளைப் பல விதங்களில் ஜப்பானியர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பூண்டு ஐஸ்க்ரீம், பூண்டு பியர் எல்லாம் கொண்டு வந்தவர்கள் கடந்த மாதம் பூண்டு கோலாவை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கோலாவில் பூண்டுகளை மிதக்க விட்டிருக்கிறார்கள். பூண்டுப் பிரியர்கள் கோலா குடிக்கும்போது பூண்டுகளை மென்று சாப்பிட்டு விடலாம்.

பிடிக்காதவர்கள் கோலாவை மட்டும் குடித்துவிடலாம். ‘ஜட்ஸ் டக்கோலா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கும் பூண்டு கோலாவுக்கு ஜப்பானியர்கள் வரவேற்பு அளித்துவிட்டனர்.

பேர் நல்லாத்தான் இருக்கு… சுவை எப்படியோ…

சீனாவின் ஹாங்ஸுவ் பகுதியில் வாங் என்பவர் சட்டை அணியாமல், தரையில் முட்டி போட்டபடி இருந்தார். அவரது கழுத்தில் கம்ப்யூட்டர் கீ போர்ட் தொங்கிக்கொண்டிருந்தது. அதில் ஒரு தாளில் ‘நான் என் மனைவிக்குச் சம்பளத்தைக் கொடுக்கவில்லை. இது என்னுடைய தவறுதான். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்’ என்று எழுதியிருந்தது. குளிரில் ஒரு மனிதர் இப்படி இருப்பதைப் பார்த்து எல்லோரும் அனுதாபப்பட்டனர். வாங்குக்கும் அவரது மனைவிக்கும் சுமுகமான உறவுதான் இருந்து வந்தது.

வீட்டு நிர்வாகம் செய்யும் அவரது மனைவி, கொஞ்சம் கடினமாக நடந்துகொள்வார். இதனால் எரிச்சல் அடைந்த வாங், இரண்டு மாதங்களாகச் சம்பளத்தைக் கொடுக்கவில்லை. கோபம் கொண்ட மனைவி, கதவைத் திறக்க மறுத்துவிட்டார். பிறகுதான் வித்தியாசமான முறையில் வாங் மன்னிப்பு கேட்டார். நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மனைவி சமாதானமானார்.

சம்பளம் தரலைன்னா மனைவியும்தான் என்ன செய்வார்?

ஸ்வீடனைச் சேர்ந்த அல் என்ற அவ்ஸினி இஸா கோபிடாகா சாகசங்களைச் செய்து அசத்தும் ஸ்டண்ட்மேன். வேகமாக ஓடும் பைக்குகள், கார்கள் மீது அநாயாசமாகத் தாவிச் செல்கிறார். ஒரு நொடி தவறினாலும் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.

‘ஒவ்வொரு முறை தாவும்போதும் நான் சாதாரணமாகத்தான் நினைத்துக்கொள்வேன். ஆபத்து பற்றிச் சிந்திக்க மாட்டேன். வாகனங்கள் வரும் வேகத்துக்கு ஏற்றார் போல என்னைத் தயார் செய்துகொள்வதுதான் முக்கியம். பார்ப்பவர்களுக்குத்தான் பெரிய சாகசமாகத் தெரியும். என்னுடைய அடுத்த இலக்கு, இரண்டு கார்கள் வேகமாக வரும்போது அவற்றைத் தாண்ட வேண்டும் என்பதுதான்’ என்கிறார் அல்.

சாகசம் பயமறியாது போல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x