Published : 02 Feb 2015 09:46 AM
Last Updated : 02 Feb 2015 09:46 AM

கழிவுநீர் குழிக்குள் சிறுவன் விழுந்து தவிப்பு: 2 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் மீட்டனர்

வேளச்சேரியில் 9 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் குழியில் விழுந்த சிறுவனை தீயணைப்புப் படையினர் போராடி மீட்டனர்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் ராஜலட்சுமி திரையரங்கம் அருகில் ஒரு கோழி இறைச்சிக்கடை உள்ளது. இங்கு கோழி இறைச்சி வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் ரவிக்குமார், தனது 6 வயது மகன் கிஷோருடன் நேற்று வந்தார். கோழிக்கடை முன்பு கழிவுநீர் செல்வதற்காக 9 அடி ஆழத்துக்கு குழி வெட்டி அதனை மரப்பலகையை வைத்து மூடியிருந்தனர். மரப்பலகையின் மீது கிஷோர் கால் வைத்தபோது பலகை விலகி கழிவுநீர் குழிக்குள் விழுந்துவிட்டார்.

இறைச்சி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு செல்வதற்காக மகனை ரவிக்குமார் தேடியபோது காணவில்லை. அப்போது அங்கிருந்தவர்கள் கழிவுநீர் குழி அருகே ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்ததை பார்த்ததாக கூறினர். உடனே கழிவுநீர் குழிக்குள் ரவிக்குமார் உற்றுப்பார்த்தபோது உள்ளே மகன் கிஷோர் சிக்கிக் கொண்டி ருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரம் தீயணைப்பு அதிகாரி சூர்யபிரகாஷ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். காவல் ஆய்வாளர் சேகர்பாபு தலைமையிலான போலீஸாரும் அங்கு வந்தனர். முதலில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டன. குழிக்குள் சிறுவன் சிரமமின்றி மூச்சுவிட வசதியாக குழாய் மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

இதையடுத்து கிஷோருடன் பேச்சு கொடுத்தபடியே மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. கழிவுநீர் குழியின் மேல்பகுதி முக்கால் அடி அகலத்திலேயே இருந்தது. அதன் வழியாக கிஷோரை மீட்க முடியவில்லை. இதனால் மேல் குழியின் வாய்ப் பகுதியை சுமார் 2 அடி அளவுக்கு தீயணைப்பு படையினர் அகலப்படுத்தினர். பின்னர் கயிற்றை பயன்படுத்தி சிறுவனை கழிவுநீர் தொட்டியில் இருந்து பத்திரமாக மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கிஷோரை பார்த்து தந்தை ரவிக்குமார் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

பின்னர் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். கிஷோர் தவறி விழுந்த குழியில் அவரது கழுத்து அளவில்தான் கழிவுநீர் இருந்துள்ளது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கவில்லை. குழிக்குள் விழுந்த கிஷோர் அதிர்ச்சியில் சிறிது நேரம் பேசாமல் இருந்துள்ளார்.

பின்னர் காப்பாற்றும்படி குரல் கொடுத்துள்ளார். ஆனால் குழிக்குள் இருந்து சத்தம் வெளியே வராததால் யாருக்கும் கேட்கவில்லை. சிறுவன் விழுந்த குழியை மூடிய போலீஸார், அந்த இறைச்சிக் கடையில் சுகாதாரமில்லாமல் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x