Published : 28 Feb 2015 09:56 AM
Last Updated : 28 Feb 2015 09:56 AM

நடிகனாக எனக்கு விருப்பமில்லை: அனிருத் சிறப்புப் பேட்டி

குருவி தலையில் பனங்காயை வைத்தது போல மிகச் சிறிய வயதிலேயே மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற புகழைச் சுமந்து நிற்கிறார் அனிருத்.

‘3’ படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ள அவரைச் சந்தித்தோம். பியானோவில் விரல்களை ஓடவிட்டவாறு நம் கேள்விகளுக்கு பதிலளித்தார் அனிருத்.

இவ்வளவு சீக்கிரம்... இத்தனை உயரம்... எதிர்பார்த்தீர்களா?

இல்லை. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் 6-ம் வகுப்பு படிக்கும்போதே பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். பள்ளி யில் பஜன்ஸ் குழு, கல்லூரியில் ராக் குழு என்று நிறைய இசைக்குழுக்களில் இருந்த தால் இசையில் அதிக ஆர்வம் இருந்தது.

ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற ஆசை அப்போதிலிருந்தே எனக்கு இருந்தது. ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் இசைய மைப்பாளர் ஆவேன் என்று நினைக்க வில்லை. இன்னும் நிறைய கற்றுக்கொண்ட பிறகுதான் இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அந்தஸ்து கிடைத்ததற்கு என்னுடைய நல்ல நேரம்தான் காரணம் என்று சொல்லவேண்டும்.

சிறு வயதிலேயே இசையமைப்பாளர் ஆனதால் இளமைக் கால கலாட்டாக்களை தவறவிட்ட வருத்தம் இருக்கிறதா?

கண்டிப்பாக இருக்கிறது. நான் கல்லூரி யில் படிக்கும் போது என்னுடைய வருகைப் பதிவேடு மிகவும் மோசமாக இருக்கும். நான் அடிக்கடி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போவதால் வகுப்புக்கு அதிகம் போகமாட்டேன். ஆனால், கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்வானேன்.

படிப்பு, கலை நிகழ்ச்சிகள் என்று ஓடிக் கொண்டே இருந்ததால் என்னால் கல்லூரி கலாட்டாக் களை அனுபவிக்க முடியவில்லை. கல்லூரியில் எனக்கு நிறைய நண்பர்களும் இல்லை. இப்போதும் எனக்கு நண்பர்கள் என்றால் என்னுடைய பள்ளி நண்பர்களும் என்னுடன் பணிபுரிபவர்களும்தான்.

தனுஷ், சிம்பு இருவருக்கும் நீங்கள் நண்பராக இருக்கிறீர்கள். இருவருக்கும் இடையிலான நட்பு எப்படி இருக்கிறது?

இரண்டு பேருக்குமே அவ்வளவாக ஆகாது என்று நான் இசையமைப்பாளர் ஆவதற்கு முன்பு கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இருவரிடமும் பழகியதை வைத்து பார்க்கும்போது அவர்களிடையே எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. இருவருமே நெருங்கிய நண்பர்கள்தான்.

பள்ளி நாட்களில் நான் கலை நிகழ்ச்சியில் இசைப் பிரிவில் இருக்கும்போது சிம்பு வேறு பள்ளியின் நடனப்பிரிவில் இருப்பார். அதனால் அவரை எனக்கு அப்போதில் இருந்தே தெரியும். அவர் எனக்கு மிகவும் சீனியர்.

‘நானும் ரவுடிதான்’ படத்தில் நீங்கள் நாயக னாக நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்ததே?

அந்தச் செய்தி எப்படி வந்தது என்று தெரிய வில்லை. ‘3’ படத்துக்கு கிடைத்த வரவேற் பைத் தொடர்ந்து நிறையப் பேர் எனக்கு கதை சொல்ல வந்தார்கள். கதையைச் சொல்லி முடித்தவுடன் ‘நீங்கள்தான் படத்தில் நாயகன்’ என்று சொல்வார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியாது.

நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. கடந்த 3 வருடங்களில் என்னுடைய 7 ஆல்பங்கள் வெளிவந்திருக்கிறது. எனக்கு கிடைத்திருக் கும் இந்த இடத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இப்போது இருக் கிறது. இசைக்காக வீடியோ தயார் பண்ணும் போதே, அதில் எப்படி ஆடுகிறோம், நடித்திருக்கிறோம், அழகாக இருக்கிறோமா என்றுதான் எண்ணம் போகிறது. என்னால் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது. அதனால் எனக்கு நடிப்பில் விருப்பமில்லை.

அப்படியென்றால் நாயகனாக நடிக்கவே மாட்டீர்களா?

இசைக்கான வீடியோ ஆல்பங்களில் மட்டும் நடிப்பேன். இரண்டு மூன்று நாட்கள் இசை ஆல்பத்தில் நடிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை.

உங்களுடைய இசைக்கு கிடைத்த மறக்க முடியாத பாராட்டு என்ன?

மறக்க முடியாத பாராட்டு என்றால் ‘எதிர் நீச்சல்’ படத்துக்கு கிடைத்ததுதான். நான் இசையமைத்த படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ‘எதிர் நீச்சல்’ படத்தை முதல் ஷோ பார்த்தேன். அதில் பெயர் போடும்போது, என் பெயர் இசையமைப்பாளர் அனிருத் என்று வந்தது.

அப்போது ரசிகர்கள் எழுப்பிய கைதட்டல் மற்றும் விசிலைக் கேட்டபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய இரண்டாவது படத்துக்கே இப்படி ஒரு வரவேற்பா என்று ஒரு பிரமிப்பு இருந்தது.

திரையுலகில் எனக்கு எல்லாமே ரஜினிகாந்த்தான். என் இசை வெளியாவதற்கு முன்பே அதன் சிடியை ரஜினிகாந்துக்கு அனுப்பிவிடுவேன். என்னுடைய இசை வெளியாவதற்கு முந்தைய நாளே அவரு டைய விமர்சனம் கிடைக்கும்.

அது தான் திரையுலகத்தில் எனக்கு கிடைக்கும் சிறந்த பாராட்டு. ஒரே ஒரு ஆல்பத்தை மட்டும் அனுப்ப மறந்து விட்டேன். அப்போதுகூட அவராகவே போன் செய்து ஆல்பத்தைக் கேட்டு வாங்கினார். எப்போதுமே அவரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் அளவுக்கு நன்றாக இசையமைக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

மறுபடியும் ‘கொலவெறி’ பாடல் மாதிரி ஒரு பாடலை உங்களால் கொடுக்க முடியவில்லையே?

அந்த மாதிரி பாடல்கள் 20, 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். எனக்கு முதல் படத்திலேயே அப்படி ஒரு பாடல் அமைந்தது. அதுபோன்ற ஒரு பாடல் மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்குமே தெரியாது. அப்போது கிடைத்த பெயரை தக்கவைத்துக் கொள்ளத்தான் உழைக்கிறேன், போராடுகிறேன்.

இளம் வயதில் பெரிய இசையமைப்பாளர் என்ற புகழ் கிடைத்தாலும் மறுபுறம் காதல் சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறீர்கள். அப்படி காதல் சர்ச்சையில் சிக்கும்போது இருந்த மனநிலை என்ன?

முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய அடி என்று அதைச் சொல்லலாம். ஏனென்றால் அது வரைக்கும் எல்லாருமே என்னுடைய இசையைக் கொண்டாடினார்கள். முதல் தடவையாக என்னைப் பற்றி ஒரு எதிர்மறையான செய்தி வந்தது.

இரண்டு நாட்கள் மனநிம்மதி இல்லாமலேயே இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு வெளியே தலைகாட்டா மலேயே இருந்தேன். என் பொழுதை தனிமையில் இசையோடு கழித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது பண்ணிய பாடல்கள் தான் ‘வணக்கம் சென்னை’ படத்தின் பாடல்கள். இப்போது எதிர்மறைச் செய்தி களை தாங்கிக்கொள்ள மனம் பக்குவப் பட்டுள்ளது. அதுபோன்ற செய்திகளைப் படிக்கும்போது நகைச்சுவையாக எடுத்துக்கொள்கிறேன்.

இவ்வளவு ஒல்லியாக இருப்பதற்கு அப்படி என்னதான் சாப்பிடுகிறீர்கள்?

நீங்கள் ஒருநாள் என்னுடன் இருந்து, நான் சாப்பிடுவதைப் பாருங்கள். சாப்பாட்டை சும்மா வெளுத்துக் கட்டுவேன். ஒரு வேளை, சைவ சாப்பாட்டைச் சாப்பிடுவதால் எடை கூடாமல் இருக்கிறதோ என்னவோ தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x