Published : 02 Feb 2015 12:45 PM
Last Updated : 02 Feb 2015 12:45 PM

தாது மணல் கொள்ளையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தாது மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோதமாக மோனோசைட் கனிமத்தை வெட்டி எடுப்பது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

"தமிழகத்தில் நடக்கும் தாது மணல் கொள்ளை" என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வி.வி.மினரல்ஸ் என்ற கம்பெனியின் தாது மணல் ஊழல் 1,00,000 கோடி ரூபாய் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. அணுக்களைப் பிளக்க உதவும் கனிமப் பொருள்களில் ஒன்றான மோனோசைட் எடுக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படுவதில்லை.

ஆனால் வைகுண்டராஜன் என்பவர் நடத்தும் வி.வி.மினரல்ஸ் கம்பெனிக்கு இந்த அனுமதியை மாநில அரசு வழங்கியுள்ளது.

மோனோசைட் என்பது அணு உற்பத்திக்கு உதவும் முக்கிய கனிமப் பொருள். அது மட்டுமின்றி மத்திய அணுசக்தி கழகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் இந்த மோனோசைட்டை தனியார் நிறுவனங்கள் கையாளக்கூடாது. அணு ஆயுத தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த கனிமப் பொருளை வி.வி.மினரல்ஸ் கம்பெனி எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது மட்டுமின்றி, அவர்கள் அப்பொருளை ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதித்துள்ளது.

பல சட்டங்களை மீறி பகற்கொள்ளை போல் நடக்கும் இந்த தாது மணல் கொள்ளை அரசு கஜானாவிற்கு வர வேண்டிய நிதியை தனியார் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறது.

அத்துடன் இந்த தாது மணல் எடுப்பது அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேட்டையும் விளைவிக்கிறது. இந்த தாது மணல் குவாரிகள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் சிறுநீரக நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

ரூபாய் 1,00,000 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அரிய கனிமப் பொருளை தனியார் எடுப்பதையும், அப்பொருள்களை அவர்களே ஏற்றுமதி செய்வதையும் மத்திய அரசு இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ள சில கம்பெனிகளில் இந்த வி.வி.மினரல்ஸுக்கும் பங்குகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமான தாது மணல் கொள்ளை பற்றி விசாரித்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தகவல் உரிமை சட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பிய பிறகும் கூட இது வரை மாநில அரசு அந்த அறிக்கை பற்றிய விவரங்களை, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வெளியிட மறுக்கிறது.

இந்நிலையில் அதிகார மையத்தில் உள்ளவர்கள் தாது மணல் கொள்ளைக் கூட்டத்தினருடன் உடந்தையாக இருப்பதே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிடுவதற்கு ஏற்ற காரணங்களாகும்.

இந்த 1,00,000 லட்சம் கோடி ஊழலில் தொடர்புடைய உண்மையான ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடித்து, தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க, தாது மணல் கொள்ளை மற்றும் மோனோசைட் எடுப்பது குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x