Published : 10 Feb 2015 12:20 PM
Last Updated : 10 Feb 2015 12:20 PM

ஓரியோ பிஸ்கெட்டின் வயது 103

நடிகர் கார்த்தி தோன்றும் ஓரியோ பிஸ்கெட் விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு வட்ட வடிவச் சாக்லெட் பிஸ்கெட்கள், அவற்றுக்கு நடுவே கிரீம். கார்த்தியும் அவர் தங்கை(யாகத் தோன்றும் நடிகை)யும் வருவார்கள். கையில் ஓரியோ பிஸ்கெட்டை வைத்துக்கொண்டு கார்த்தி தங்கையைச் செல்லமாகச் சீண்டுவார். பிறகு பிஸ்கெட்டை இரண்டாக உடைப்பார். இருவரும் பாலில் முக்குவார்கள். சிரித்துக்கொண்டே சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் உருவானது

ஓரியோ பிஸ்கெட் இந்தியாவுக்கு வந்தது 2011- ம் ஆண்டு. ஆனால், ஓரியோ வயது என்ன தெரியுமா? 103! ஆமாம், 1912 இல் அமெரிக்காவில் நபிஸ்கோ (Nabisco) என்னும் நிறுவனம் ஓரியோவை அறிமுகம் செய்தார்கள். அன்றைய பெரும்பாலான கிரீம் பிஸ்கெட்கள் சதுர வடிவில் இருந்தன, சாதாரண பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் ஓரளவு கிரீம் இருந்தது.

ஓரியோவில், இரண்டு வட்ட வடிவ சாக்லெட் பிஸ்கெட்களுக்கு நடுவில் கணிசமான வனிலா கிரீம் இருந்தது. சாக்லெட் கசப்பும், வனிலா இனிப்பும் தனிச் சுவை தந்தன. வித்தியாசத் தோற்றம், சுவை ஆகியவற்றால், ஓரியோ விரைவில் பிரபலமானது.

அதிலும், ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதில் ஏனோ குழந்தைகளுக்குத் தனி த்ரில். இதனால், நபிஸ்கோ கம்பெனியும் குழந்தைகள் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல் ஓரியோவை விளம்பரம் செய்தார்கள். ஓரியோ அமெரிக்காவின் நம்பர் 1 பிஸ்கெட் ஆனது.

பிற நாடுகளுக்கு 1990 களில் வியாபாரம் உலகமயமாகத் தொடங்கியது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கதவுகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறக்கத் தொடங்கின. மக்கள் தொகை, உயரும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தப் புதிய சந்தைகளைத் தேடி வந்தார்கள்.

சீனாவில் படு தோல்வி

1996. சீனாவில் ஓரியோ விற்பனை தொடங்கியது. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்கள் (அன்றைய டாலர் மதிப்பில் இது சுமார் 25 ரூபாய்). அமெரிக்காவில் மாபெரும் வெற்றி கண்ட அதே வடிவம், அதே சுவை. நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏகப்பட்ட விளம்பரங்கள். அவை அனைத்திலும், குழந்தைகள் ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் காட்சி.

2005. ஒன்பது ஆண்டுகள் ஓடி விட்டன. ஏனோ, விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. ஏகப்பட்ட நஷ்டம். சீன நாட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்னும் சோகமான முடிவை நபிஸ்கோ எடுத்தார்கள். ஒரே ஒரு விற்பனை மேனேஜருக்கு மனம் நிறையக் கேள்விகள்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஓரியோ சீனாவில் மண்ணைக் கவ்வியது ஏன்? சீனாவை விட்டு வெளியேறும் முன், கருத்துக் கணிப்பு நடத்தித் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விரும்பினார். நபிஸ்கோவின் அமெரிக்கத் தலைமைச் செயலகம் பச்சை விளக்குக் காட்டியது.

கருத்துக் கணிப்பு முடிவால் பிரபலமானது

கருத்துக் கணிப்பு சொன்ன உண்மைகள் நபிஸ்கோவுக்கு ஞானோதயம் தந்தன. சாக்லெட் கசப்பும், கிரீம் இனிப்பும் கலந்த இரட்டைச் சுவைக் கலவை சீனர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால், ஒரு பிரச்சனை “இனிப்பு திகட்ட வைக்கிறது: கசப்பு வயிற்றைப் புரட்டுகிறது. இரண்டுமே அதிகமாக இருக்கின்றன. இனிப்பு, கசப்பு இரண்டையும் மிதமாக்கவேண்டும்.”

நபிஸ்கோ கம்பெனி கிரீம் இனிப்பையும், சாக்லெட் கசப்பையும் வெவ்வேறு அளவுகளில் குறைத்து, 20 வகையான சாம்பிள்கள் தயாரித்தார்கள். அவற்றை ஆயிரக் கணக்கான சீன ஆண், பெண்கள், பல்வேறு வயதுள்ள குழந்தைகள் ஆகியோரிடம் சாப்பிடச் சொல்லி, அவர் களுக்கு எந்த சாம்பிள் பிடிக்கிறது என்று அவர்கள் கருத்துகளைக் கேட்டார்கள். இந்த அடிப்படையில், 20 சாம்பிள் களிலிருந்து பெரும்பாலா னோருக்குப் பிடித்த ஒரு சாம் பிளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

புதிய சுவைகளில் இன்னும் சில தனிப்பட்ட சுவைகளும் வந்தன. வனிலா கிரீம் மட்டுமே முதலில் இருந்தது. பல குழந்தைகளுக்கு வனிலாவைவிடச் சாக்லெட் கிரீம் இன்னும் அதிகமாகப் பிடித்தது. ஆகவே, ஓரியோ, சாக்லெட் கிரீம் அறிமுகம் செய்தார்கள். சீனர்கள் கிரீன் டீ என்னும் கொழுந்து வகைத் தேநீருக்கு அடிமைகள். அது புத்துணர்ச்சி தருவது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்ட வர்கள்.

நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பார்கள். ஆகவே, அடுத்து வந்தது இன்னொரு ஓரியோ . அதன் நடுவே கிரீன் டீ கிரீம். இதைப்போல் உள்ளூர் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி ஆரஞ்சு, மாம்பழம் இரண்டின் சுவையும் கலந்த புளிப்பும் இனிப்புமான கிரீம் அறிமுகம் செய்யப்பட்டது. .

ஓரியோ ஏன் வட்டவடிவமாக மட்டுமே இருக்கவேண்டும்? பல சீனர்கள் கேட்டார்கள். மக்கள் குரல் மகேசன் குரல் என்று கம்பெனி நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். கை விரல்கள் போன்ற வடிவம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வந்தது குச்சிபோல் நீளமான ஓரியோ. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்.

இத்தனை விலை கொடுத்துப் பிஸ்கெட் வாங்க சாமானியச் சீனக் குடும்பம் தயாராக இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நபிஸ்கோ 5 ஓரியோக்கள் கொண்ட சின்ன பாக்கெட் 29 சென்ட் விலையில் அறிமுகம் செய்தார்கள். பெரிய பாக்கெட்களும் தொடர்ந்தன.

உத்தியில் மாற்றம்

அமெரிக்க அனுபவத்தின்படி, ஓரியோ பாலில் தோய்த்துச் சாப்பிடும் பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கை நபிஸ்கோ மக்கள் மனங் களில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்தப் பொசிஷனிங்கைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் அமெரிக்கத் தனமானது, சீனப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.

ஓரியோ நிர்வாகிகளுக்கு ஒரே குழப்பம் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுதான் ஓரியோவின் வித்தியாசமான தனித்துவம். இதை இழக்கக் கம்பெனி தயாராக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

சீனாவிலும் முதலிடம்

பால் ஆரோக்கியம் மிகுந்த பானமாகச் சீனாவில் கருதப்படுகிறது தினமும் குழந் தைகளைப் பால் குடிக்க வேண்டுமென்று சீனப் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். எல்லா ஊர்களையும்போல், சீனாவிலும் குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கும்.

நபிஸ்கோ ஓரியோ விளம்பரங்களில் சிறு மாற்றம் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் பால் குடிக்க ஓரியோ உதவும் என்னும் கருத்தை மையப்படுத்தினார்கள். சீனப் பெற்றோர்கள் மனம் மாறியது. ஒவ்வொரு வருடமும் ஓரியோ விற்பனை இரண்டு மடங்கானது. இன்று சீனாவில் நம்பர் 1 பிஸ்கெட் ஓரியோதான்!

2009 இல் ஓரியோ பிஸ்கெட்டை நபிஸ்கோ கம்பெனியிடமிருந்து சாக்லெட் தயாரிக்கும் காட்பரீஸ் கம்பெனி வாங்கிவிட்டார்கள். 2010 இல் இந்தியாவில் ஓரியோவை அறிமுகம் செய்திருக்கும் காட்பரீஸ், சீனாவில் நபிஸ்கோ படித்த பாடத்தை இந்தியாவில் பின்பற்றி வருகிறார்கள்.

நம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய சுவைகள் ஏராளமான குழந்தை களுக்குப் பிடித்தவை. ஆகவே ஓரியோ வனிலா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய கிரீம்களோடு வருகிறது.

இந்தியாவில் இந்தியப் பாக்கெட்களும், விலைகளும் அமெரிக்க பாணியில் அல்ல, சீனப் பாணியில்தான். 3 ஓரியோக்கள் கொண்ட பாக்கெட் 3 ரூபாய்: 7 ஓரியோக்கள் பாக்கெட் 10 ரூபாய்: 14 ஓரியோக்கள் பாக்கெட் 20 ரூபாய்.

சீன முறைப் பொசிஷனிங் இந்தியாவிலும் வெற்றிகண்டு வருவதாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன. இந்த வெற்றி தொடருமா? வருகின்ற நாட்கள் பதில் சொல்லும்.

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x