Published : 04 Feb 2015 09:28 AM
Last Updated : 04 Feb 2015 09:28 AM

துணை பிடிஓ சஸ்பெண்டை கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட வேடல் ஊராட்சி பொது நிதியில் ரூ. 80 லட்சம் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், காஞ்சிபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேல்முருகன், கடந்த 31-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதைக் கண்டித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், ஊராட்சி முறைகேடு தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது மட்டும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முத்துமீனாள் நடவடிக்கை எடுப்பதாகவும் கலந்தாய்வு முறையைப் பின்பற்றாமல், வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்வதாகவும் கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சார்லஸ் சசிக்குமார் கூறும்போது, ‘வேடல் ஊராட்சியில் 2013- 2014 ஆண்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறப்படும் நிலையில், அங்கு 90 நாட்கள் மட்டுமே பணிபுரிந்த வேல்முருகனை, பணி ஓய்வு நாளன்று சஸ்பெண்ட் செய்தது ஏற்புடையதல்ல. 3 மாதங்களுக்கு ஒருமுறை நிதிக் கணக்குகளை தணிக்கை செய்யும் உதவி இயக்குநருக்கு முறைகேடு குறித்து தெரியவில்லையா? மாவட்ட நிர்வாகத்தின் இந்த பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் முத்துமீனாள் கூறும்போது, ‘வேல்முருகன் பணி ஓய்வு பெறவிருந்ததால், நிர்வாக அவசியம் கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். முறைகேடு நடைபெற்ற காலத்தில் அங்கு பணியிலிருந்த அனைவர் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறும்போது, ‘வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறையின் நேர்முக உதவியாளர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x